2015-02-19

வாழவந்தவர்

அம்மா கல்குறிச்சியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு 
சத்துணவு சமையல் பணியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் ஆத்தா. எங்கள் வீட்டிலும்வீட்டு வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் மகள் தெய்வானை அக்கா பாத்திரம் 
தேய்த்துக் கொண்டிருக்கையில் பக்கத்தில் நின்று நான் கதையடித்துக் கொண்டிருந்தது இன்னும் என் நினைவில் இருக்கின்றது. ஆத்தா தேங்காய்ச்சில் வாங்கப் போகும்போது கையைப் பிடித்துக் கொண்டு போய் தேங்காய்த் தண்ணி வாங்கிக் குடித்தது, ரோட்டுக் கடையில் போய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டது என எல்லாமே ஆச்சரியமாய் நினைவில் உள்ளன. 

எனக்கு ஏழு வயது இருக்கும்போது ங்கள் கல்விக்காக அருப்புக்கோட்டைக்கு குடி பெயர்ந்தோம்.
அதன் பின்னும் கல்குறிச்சிக்கு அடிக்கடி போய் வந்து கொண்டு இருந்தேன். எனக்குப் பள்ளி 
விடுமுறை விடப்பட்டு அம்மாவிற்கு பள்ளி இருக்கும் நாட்களில் உற்சாகமாய் அம்மாவுடன் 
கிளம்பி விடுவேன். பள்ளியில் ஆசிரியர்களுக்கெல்லாம் கை வலிக்க வணக்கம் வைத்து விட்டு, ஆத்தா சமையல் பணி முடித்ததும், அவருடன் அவர் வீட்டிற்கு கிளம்பி விடுவேன். ஒரே ஒரு அறை உடையதாகத்தான் அவர் வீடு இருக்கும். எனக்காக ராஜா மார்க் கருப்பு கலர் வாங்கித் தருவார். 
இரண்டு ரூபாய். அதன் சுவை எந்த பள பளப்பு டின்களில் அடைத்த பானங்களிலும் இருக்க 
வாய்ப்பே இல்லை. அன்புதான் காரணமாய் இருக்க வேண்டும்.

சில வருடங்களில் அம்மா பணி மாற்றம் ஆன பின்னும் ஆத்தா மாதத்துக்கு ஒரு முறையாவது வீட்டிற்கு வந்து விடுவார். ஒரு மஞ்சள் பை நிறைய தின்பண்டங்கள் சுமந்தபடி. நான் +2 படித்துக் கொண்டிருந்த போதும் எனக்காக பால் பன்னும், பனாரஸ் மிட்டாயும் வாங்கிக் கொண்டு 
வருவார். ஆத்தாவின் கணவர்(தாத்தா) தீப்பெட்டி ஆபிஸில் வேலை பார்த்துக் 
கொண்டிருந்ததால் தீப்பெட்டிகளையும் சுமந்து கொண்டு வருவார். எங்கள் வீட்டில் தீப்பெட்டி
வாங்கியதாய் நினைவே இல்லை.

இந்த வேலைதான் என்றில்லை. எல்லா வேலைகளும் செய்து கொண்டிருப்பார். 
கடைகளுக்கு வாசல் தெளித்தல், வீடு, வங்கிகளுக்கு தண்ணீர் எடுத்து வைத்தல் என...
ஆள் 4 அடி உயரம் தான் இருப்பார். 1ம் வகுப்பு படிக்கும்போது 'ஆத்தா நான் உங்க உயரம் 
சீக்கிரம் வந்து விடுவேன்' என அவர் அருகில் நின்று சொல்லிக் கொண்டிருந்தேன்

'இதை விட ஒல்லியாய் இருக்க முடியாது' என்னும் அளவு ஒல்லியாய் இருப்பார். 'இந்த உடம்பில் எப்படி அவ்வளவு பெரிய குடங்களை சுமந்து கொண்டு செல்ல முடிகிறது' 
என வியந்திருக்கிறேன். 'ஒடி ஒடி வேலை செஞ்சு ஒடாய் தேஞ்ச உடம்பு' என்பது அவருக்குதான் 
கச்சிதமாகப் பொருந்தும்.

என் திருமணத்தின் போதும் வந்து அவ்வளவு வேலைகள் செய்து கொண்டிருந்தார். அண்ணன்
திருமணம் நிச்சயம் ஆகி இருந்த சமயத்தில் ஒரு திருமணத்திற்காக கல்குறிச்சி போன அம்மா 
வந்து சொல்லிக் கொண்டிருந்தார் 'ஆத்தாவுக்கு உடம்பு சரி இல்லை. மெலிஞ்சு என் விரல்
அளவுதான் இருக்கு பாவம்'. 

சில நாட்கள் கழித்து வேலையில் பரபரப்பில் நான் ஒடிக் கொண்டிருந்த போது ஒரு ஞாயிற்றுக்
 கிழமையில் அம்மா தொலைபேசியில் சொன்னார் 'ஆத்தா தவறிடுச்சு...'. மனது மிக கனமானது. ஆத்தா பற்றிய எல்லா நினைவுகளும் ஒடிக்கொண்டு இருந்தன. உழைப்பைத் தவிர வேறு 
எதுவுமே அறிந்திராத ஒரு உயிர். உழைத்து உழைத்தே தேய்ந்து போனார். சந்தோஷம் என்பதை அவர் வாழ்க்கையில் எத்தனை முறை அனுபவித்து இருப்பார்? ஒரு வட்டப் பாதையில் இலக்கில்லாமல் ஒடிக்கொண்டு இருந்தார். இத்தனை வருட ஒயாத உழைப்பில் என்ன கிடைத்தது 
அவருக்கு? நினைக்க நினைக்க மனது மிகுந்த வேதனை அடைந்து கொண்டு இருந்தது.

கல்யாணத்தின் போது மேடையின் ஒரத்தில் வந்து நின்றரே, அழைத்து வைத்து ஒரு புகைப்படம் கூட எடுக்காமல் போய் விட்டோமே...' என நொந்து கொண்டேன். யாரையுமே அவர் 
இருக்கும்போது கொண்டாடாமல் இழப்புக்குப் பின் வருந்துவதே பாழாய்ப் போன மனதின் 
செயலாகி விட்டது. எதிலாவது பரபரத்துக்கொண்டே வாழ்க்கையில் கொண்டாட வேண்டிய 
இதயங்களைக் கோட்டை விட்டு விடுகிறோம்.

பிறிதொரு நாளில் 'அவங்களுக்கு ஏன் ஆத்தா-னு பேர் வந்தது?' என்று அம்மாவிடம் கேட்டபோது, 'நீதான் ஒரு நாள் அவங்களை அப்படி கூப்பிட்ட...அதிலிருந்து எல்லாரும் அப்படியே கூப்பிட 
ஆரம்பிச்சுட்டாங்க' என்றார். நினைவு தெரியாத வயதில் ஏன் அப்படி அழைத்தேன் என்று
 எனக்கும் நினைவு இல்லை. அம்மாவிடம் கேட்டேன். 'அவங்க உண்மையான பேர் என்ன?'

அம்மா யோசித்தார்

'எனக்கே அவங்க பேர் மறந்து போச்சு....ரெஜிஸ்டெர்ல அவங்க பேர்....ம்ம்ம்...வாழவந்தாள்'.

No comments: