2015-11-06

சிதறல்



வீட்டுக்குள் நுழையும்போதே ‘என்னண்டோ’ வந்தது காளிக்கு. அவதியாக ஒருடம்ளர்
தண்ணி மொண்டு குடித்துவிட்டு, வட்டிலையும் பழையசோத்துச்சட்டியையும் எடுத்துக்கொண்டு ‘உஸ்ஸ்ஸ்’ என்று உட்கார்ந்தாள். 

‘வெயிலென்ன ஆனி மாசம் போலவா இருக்கு? பங்குனி சித்திரையெல்லாம் தோத்துப் போகும்போல. கந்தக பூமின்றாகளே…அதுவும் சரியாத்தேன் இருக்கு. இந்த ஊர் வெய்யிலு மட்டும் ஆளையே எரிக்கிறாப்புலதான் அடிக்கி’

புலம்பிக்கொண்டே பேங்க் வீட்டம்மா கொடுத்த பழைய குழம்பை சருவப்பையிலிருந்துசோற்றில் கொட்டிப் பிசைந்து ரெண்டு கவளம் வாயில்போடவும்தான் கொஞ்சம் சீவனே வந்தது.

விடிய டீத்தண்ணி குடித்துவிட்டு, பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பிய கையோடு 
கிளம்புகிறவள். மூனு வீட்டு வேலை முடித்து வர வெயில் உச்சிக்குஏறிவிடும். 
ஒன்னரை மைல் வெயிலோடே நடந்து வீட்டுக்கு வர கொஞ்சம் அசத்ததான் செய்யும். ஆனால் கஞ்சியைக் குடித்த கையோடு ஊறப்போட்ட துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, திரி சுத்த உட்கார்ந்து விடுவாள். 

ஒரு வாரமா மனசு ஒரு நிலையிலேயே இல்லை. கண்டதையும் யோசித்துக் குழம்பியதில் ஒரு வேலையும் ஓடலை. கொஞ்சம் நேரம் அசந்து எந்திரிக்கவும் பால்வாடியிலிருந்து சின்னவன் வரவும் சரியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே யோசனைகளூடே படுத்துக் கிடந்தாள்.

அரைத்தூக்கத்தில் இருக்கையில் ‘டமார்’ என்று சத்தம். கண்ணுக்குள் சடாரென வெளிச்சம் பரவ தூக்கி வாரிப்போட்டு உட்கார்ந்தாள் காளி. ‘வெருக்’கென்று திரும்பிய பூனை அவளைப் பார்த்துவிட்டு வெளியே ஓடியது.

‘சை, வெளங்காத பக்கி. இங்க பாலும் தயிருமா பொங்கிக் கெடக்காக்கும்…பாத்திரத்தை எல்லாம் உருட்டிக்கிட்டு…’

கொண்டை முடிந்து கொண்டே எழுந்தாள். ஒவ்வொரு வேலையாகச் செய்யும்போதும் நெஞ்சுகுக்குள் திடுக்கிட்டுக் கொண்டே இருந்தது. 

பொழுதுசாய, அமாவாசை வந்து சேர்ந்தான். 

‘பெரியவனே, தேங்காயெண்ணை புட்டி எடுத்துட்டு வாடா’

சத்தங்கொடுத்துக் கொண்டே வாசல் தொட்டியில் கைகால் கழுவத் தொடங்கினான். காளி தேங்காயெண்ணைப் புட்டியை அவன் கையில் போய்க் கொடுத்து விட்டு, கொஞ்சம் தள்ளியிருந்த துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்தாள்.

அமாவாசையின் உடலெங்கும் வெள்ளி பூசினாற்போல் மினுமினுத்தது. எண்ணையை முழுக்கத் தேய்த்து, தேங்காய் நாரால் தேய்க்கத் ஆரம்பித்தான். 

ஒட்டியிருந்த வெடிமருந்து கொஞ்சம் கொஞ்சமாக உரிந்து தண்ணீரில் வெளியானது.

கல்யாணமாகி வந்த புதுசில் காளியும் ஃபயராபீசுக்குத்தான் போய்க்கொண்டிருந்தாள். 
சரவெடிக்குச் சரங்கட்டும் வேலை. பத்து நாளிலேயேஇளைப்பு மாதிரி வந்து 
ஆசுபத்திரிக்குப் போக வேண்டி வந்தது.

‘வெடிமருந்து உடம்புக்கு ஒத்துக்கலை, பயராபீசுக்கு அனுப்பாத…இல்லேன்னா இளைப்பு அதிகமாகிட்டேதான் இருக்கும்’ என்று டாக்டர் அமாவாசையிடம் சொல்லியதிலிருந்து ஒரேடியாக வேலைக்கு வேண்டாமென்று சொல்லி விட்டான்.

பிறந்த ஊரில் தீப்பெட்டி ஆபீசுக்கு வேலைக்குப் போனவள்தான். மருந்து வாடைக்குத் தலையெல்லாம் பேன் பிடிக்கும். அதைத் தவிர ஒன்றும் பிரச்சனையில்லை. என்னமோ வெடிமருந்து ஒத்துக்கொள்ளவில்லை. ஒத்தச் சம்பளத்தில் என்ன செய்ய முடியும்? ஏதோ வீட்டு வேலைகள் கிடைத்ததால் காலம் ஓடியது. கூடமாட செலவுக்குத் திரி சுத்துவதும் பட்டாசுக்குப் பேப்பர் சுத்துவதுமாக சமாளிக்கிறாள்.


‘என்ன யோசனைலயே உக்காந்துக்கிட்டு இருக்க??’ கையைச் சுரண்டிக்கொண்டே அமாவாசை கேட்டான்.

‘நேத்து சொன்னதுதான். யோசன செஞ்சியா, எப்ப மொதலாளிட்ட பேசப் போற?’

‘யோசிக்க என்ன இருக்கு? வேலையை விட்டுட்டு என்ன செய்யச் சொல்ற?’

‘என்னமாச்சும் செஞ்சிக்கிருவோம். அழகர் மாமாட்ட சொல்லி தோட்டி வேலைக்கு பஞ்சாயத்து பெரசண்டுட்ட கேக்கச் சொல்லுவோம்’


அமாவாசைக்குச் சிரிப்பு வந்தது.

‘நீதான தோட்டி வேலைக்கெல்லாம் போக வேணாம், நம்ம காலத்துலயாச்சும் சாக்கடை நாத்ததுலருந்து வெளிய வருவோம்னு பேசுன?’

‘சொன்னேன். நம்ம அப்பனாத்தா பட்ட பாட்டையெல்லாம் நாமளும் படணுமா, கொஞ்சமாச்சும் வெளிய வருவோம்னு பாத்தேன். இன்னுங்கூட பேங்க்காரம்மா சிலசமயம் “ஒங்காளுகளையெல்லாம் வீட்டுவேலைக்கு வச்சு வீட்டுக்குள்ள விடுற காலமும் வருமுன்னு யாரு நெனச்சா”ன்னு பேசுது. எல்லாப் பேச்சுலருந்தும் நம்ம பிள்ளைகளாச்சும் தப்பிக்குமுன்னு நெனச்சேன். சரி, இப்ப நமக்கு ரோசம் முக்கியமா உசுரு முக்கியமா?’

எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. போனவாரம்முதலிப்பட்டியில் ஃபயராபீஸ் வெடிக்கும்வரை.

வீட்டுக்குள் உட்கார்ந்து திரி சுத்திக் கொண்டிருந்த காளி பதறிப்போய் எழுந்து வெளியே ஓடிப்போய்ப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. எங்காச்சும் ட்ரான்ஸ்பார்மர் வெடிச்சிருக்கும் என்று பக்கத்து வீட்டு அக்கா சொல்லியது.

திரும்ப வந்து திரி சுத்த உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே வீதியில் அழுகைச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. முதலிப்பட்டி பயராபீசில் வேலை பார்த்த முக்குவீட்டு சொக்கன் வீட்டில் நிறையக் கூட்டம். ஆளாளுக்குப் பதற்றத்தில் இருந்தனர்.

‘நாப்பதாளுக்கு மேல உசுரு போயிருச்சுன்றாக. அம்பது பேருக்கிட்ட பெரியாசுபத்திரிக்கித் தூக்கிட்டுப் போயிருக்காகளாம். ஆபீசு சுவத்தைத் தாண்டிக்கூட சதையெல்லாம் செதறிக் கெடக்குன்றாக’

கேக்கும்போதே இருட்டிக்கொண்டு வந்தது காளிக்கு. சொக்கன் உடலைக் கொண்டு வந்தபோது கூட அமாவாசைதான் போயிருந்தான். ‘பாக்க சகிக்கல காளி’ என்று ஒருபாட்டம் புலம்பினான்.

மறுநாளிலிருந்து பயராபீஸ் வேலையை விடு என்று புலம்ப ஆரம்பித்தவள்தான். 
அமாவாசை எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

‘மூஞ்சத் தூக்கி வக்காம வந்து சோத்தப் போடு’ 

அமாவாசையின் குரலுக்கு சுரத்தே காட்டாமல் எழுந்து வீட்டுக்குள் போனாள் காளி.

சோற்றை அளைந்து கொண்டே அமாவசை காளியைப் பார்த்தான். பாவமாக இருந்தது.

‘பதறாம யோசிச்சுப் பாரு, இருவதாயிரம் அட்வான்சு வாங்கித்தான இந்த ஆபீசுல 
வேலைக்குச் சேர்ந்திருக்கு? அந்தக் காசுலதான் வீட்டுக்கு ஓடு மாத்தியிருக்கோம். சேந்து நாலு மாசத்துக்குள்ள இப்ப வேலை வேணாம்னா அட்வான்சைத் திருப்பித் தர எங்க போறது? அதோட தோட்டி வேலைக்கு இப்ப எம்புட்டு கெராக்கின்னு தெரியாமப் பேசுறயே’

‘உசுருக்குப் பாதுகாப்பில்ல, வேலைக்கு யாரும் வர்றதில்லைன்னுதான அட்வான்சு குடுக்காக? பொழப்புக்கு வழியில்லாத ஆளுகதான் போயி விளுகுறோம்’

எதையும் காதிலேயே வாங்காதது போல அமாவாசை தொடர்ந்து பேசிக்கொண்டே போனான் 

‘இந்தத் தீவாளிக்கு வழக்கமாத் தர்ற போனசோட கூட முன்னூர்ரூவா எல்லாருக்கும் தருவாக, எல்லாம் வழக்கம்போல வேலைக்கு வாங்கன்னு சூப்புரவசைர் சொன்னாப்புல’

‘ரூவாயப் பத்தியா இப்பப் பேச்சு?’

‘சும்மாப் பொலம்பாத. இன்னிக்கு ஆபீசுக்கு ஆபீசர்மாருக சோதனைக்கு வந்திருந்தாக. 
வேலை பாக்குறவுகளையெல்லாம் கூப்பிட்டுப் பேசுனாக. எல்லா ஆபீசும் இனி 
பாதுகாப்பா இருக்கும்னு சொல்றாக’

‘இதயேதான் போன வருசம் தியாகராசபுரம் ஆபீசு வெடிச்சப்பவும் சொன்ன…’

‘என்னை என்ன செய்யச் சொல்ற? இப்ப வேலைக்குப் போகையிலயே மாசக்கடைசில கடன் வாங்குற மாதிரிதான் இருக்கு. வாங்குன பழைய கடனக் கட்டவும் பிள்ளைகளுக்கு செலவுகளப் பாக்கவுமே சரியாப் போவுது. ரொம்பப் போட்டு ஒழட்டாத, ஒன்னு ரெண்டு வருசம் போவட்டும். அட்வான்சைக் கழிக்கவும் சித்தாளு, நிமிந்தாளுன்னு ஏதாவது வேலைக்குக் கேப்போம்’

என்ன சொல்லவென்றே காளிக்குப் புரிபடவில்லை. அமாவாசை சாப்பிட்டு எழவும் தட்டைத் தூக்கி அங்ஙணத்தில் போட்டுவிட்டு வாசப்படியில் போய் உட்கார்ந்தாள். 

நாரணாபுரம் பயராபீசிலிருந்து ‘டெஸ்ட் வெடி’போட்டுக்கொண்டிருந்தார்கள். ஐந்து நொடி இடைவெளியில் கீழிருந்து கிளம்பிய தீப்பந்துகள் மேலே போய் மஞ்சள், பச்சை, சிவப்பு நிறங்களில் பூப்பூவாக வெடித்துச் சிதறியது.

வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த காளியின் கண்களின் ஈரத்தில் வானத்துப் பட்டாசு ஒளியின் சிதறல் மினுமினுத்துத் தெரிந்தது.


2015-03-30

அன்பின் பயணம்

நம்மிடையேயான இடைவெளி
உனக்கான வசதியாய் மாறத்தொடங்கும் நாட்களில்,
நம் நெருக்கத்திற்கான இழைகள்
நாமறியாமலே விட்டுக்கொண்டிருக்கும் வேளையில்,
அதை நீயும் நானும் உணரும் ஒரு தருணத்தில்,
எனக்கான வேண்டுகோள் ஒன்றுதான்....

கடைசி இழை விடுவதாய் இருந்தாலும்
அத்தனையையும் அதன் போக்கில் விடு...

என் அர்த்தமற்ற கேள்விகளையும்,
உன் தேடலில் கிடைத்த விளக்கங்களையும்
மொத்தமாய் இட்டு செயற்கைப் பூச்சிடுதல்
நம் இனிய உறவின் அழகை நிச்சயமாய்க் குலைத்து விடும்

சொல்லிக் கொண்டு வந்ததில்லை நம் அன்பு
சொல்லிக் கொள்ளாமலேயே பயணிப்பதே
                   சிறந்ததாய் இருக்கும்....

பாதை பரந்துள்ளதாகுறுகிற்றா என்று கூட
நின்று நிதானிக்க வேண்டாம்

எது நடந்தாலும் அது இயல்பாய் நிகழட்டும்...
ஒரு பூ உதிர்தல் போலவோ,
ஒரு மொட்டு மலர்தல் போலவோ

எதுவாயினும் அது இயல்பாய் இருக்கட்டும்...
உரத்துச் சொல்வதை உறுதியாய்த் தவிர்க்கலாம்...

ஏந்த அன்பையும் தக்க வைக்கத் தெரியாத என் பேதை மனம்
நொறுங்கிச் சிதறுதல் மௌனத்திலேயே கரையட்டும்...

2015-03-11

அன்பே வெங்கடாசலம்!!

3 மணி நேரம் செலவழித்து ஒரு படம் பார்ப்பது எனக்கு ஆடம்பரமாகிப் போன இந்நாட்களில், நிறைய நாட்களாகப் பார்க்க ஆசைப்பட்டு, பார்க்க வாய்ப்பில்லாமல் போன' பண்ணையாரும் பத்மினியும்' படம் குடும்பத்தோடு சென்ற ஒரு பயணத்தில் பார்க்கக் கிடைத்தது. 

அப்பா,அம்மா உட்பட எல்லாரையுமே ரசித்துப் பார்க்க வைத்த படம்.
பயணத்தின் பின்னான விழாவின் களேபரத்தில் இதை மறந்துவிட்டிருந்தாலும் படம் நெடுக வந்த ஒரு பாடல் மனதிலேயே இருந்தது. வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பின் அந்தப் பாடல் நினைவுக்கு வந்து ஒரு பின்னிரவு வேளையில் தேடி ஓடவிட்டுக் கேட்டேன். 

'ஒனக்காகப் பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகலிரவா'

என்று ஆரம்பித்த பொழுதில் உருக ஆரம்பித்து, நான்காவது வரியிலேயே,

'ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி'யில் கண் துளிர்த்துவிட்டது. 

இருமுறைகள் கேட்டபின் காட்சிகளோடு அந்தப்பாடலை யூட்யூபில் ஓடவிட்டேன். Just a wow!!! படத்தில் பார்த்திருந்தாலும் இவ்வளவு சரியாகக் கவனிக்கவில்லை. மகளைக் கட்டித்தந்த பின்னும் நேசம் நிறைந்து கமழும் ஒரு இணையின் பாடல்.அதை இத்தனை தூரம் ரசிக்கும்படி செய்திருந்ததற்கே பெரும் பாராட்டுகள். பாடலின் ஒவ்வொரு சின்ன அசைவும் அவ்வளவு அழகு!! ஜெயப்ரகாஷ் வழக்கம்போல படு அசத்தல் என்றால், அவரின் மனைவியாக நடித்தவரும் அவ்வளவு அழகான நடிப்பு!!

அன்றிரவு முழுக்க 15 தடவைகளாவது பாடலைப் பார்த்திருப்பேன். வாழ்வில் எந்தப் பாடல் காட்சியையும் தொடர்ந்து இத்தனை முறை ரசித்ததில்லை. இப்பாடலிலும் சரி, படத்திலும் சரி அன்புதான் அடிநாதம். உருக வைப்பதும் இப்பிண்ணனியே. இசையும், பாடகியின் அற்புதமான குரலும் கூட அடுத்துதான்.

சூது, வஞ்சனை, சுயநலம், தற்பெருமை என எத்தனை இருந்தாலும், எந்த ஒரு கலையும் அன்பைச் சித்தரித்தும், அன்புதான் பிரதானம் என்றும் அமைகையில் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது. 99% classics இந்த வகைதான். பிழைப்புக்காக உழைத்து, சுயமரியாதைக்காகப் போராடித் திரியும் எந்த மனிதனுக்குமே மனதைக் கரைக்கும் அன்புதான் ஏக்கம் இல்லையா?! அதை மறுதலிப்பதாக தருக்கித்திரிந்தாலும் கூட?!

இன்னும் இந்தப் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறது மனதில். சில நாட்களுக்கு முன்னான கீச்சு ஒன்று:

"அரிதாகவும் குறைவாகவுமே கிடைத்தாலும் நெடிய இந்த வாழ்வின் தேடல் அன்பில் கரையும் தருணங்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் வெறும் கானல் நீர்"

2015-03-06

நாடும் நாட்டு மக்களும்...

அன்று மகா என்கிற மகாலட்சுமி காணாமல் போன இரண்டாவது தினம். நானும் அவளும் ஒன்பதாம் வகுப்பு. அவள் ஆங்கில வழிப் பிரிவு. அவ்வளவாகப் பழக்கமில்லை. என் நெருங்கிய தோழி ஒருத்தி அவள் வகுப்புத் தோழி என்றளவில் கூடைப்பந்து விளையாடும் மகாவைக் கடந்து என் மிதிவண்டியை எடுக்கச் செல்கையில் மெலிதாகப் புன்னகை பரிமாறிக் கொள்வோம், அவ்வளவே. அவளைக் காணாமல் வீட்டில் தேட ஆரம்பிக்கும்போது, வீட்டுக்கு வரும் வழியில், ஆளரவமற்ற ஓர் இடத்தில் அவள் சைக்கிள், புத்தகப் பை எல்லாம் சிதறிக்கிடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்பொழுதும் போல 'எவன் கூடயாவது ஓடிப் போயிருப்பா' பேச்சுகளும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த இரண்டாவது தினத்தில் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையிலேயே பள்ளி விடுமுறை விடப்பட்ட செய்தி முன்னும், மகாவின் உடல் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி பின்னுமாக வந்தது. உடல் மேலெடுக்கப்பட்டு, விஷயம் முழுதாகத் தெரியும் வரை அதிர்ச்சியாக மட்டுமே இருந்தது. நம் நாட்டின் வழக்கம் போல, இறந்த உடலுக்கான எந்த மரியாதையும் இன்றி, மறுநாள் செய்தித்தாளில் மகாவின் படம் வெளியிடப்பட்டிருந்தது. தலைப்பே, பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை முகத்திலறைந்து கூறியது. பள்ளிச் சீருடை சிதைக்கப்பட்டும் உடலெல்லாம் சிகரெட் சூடு வைக்கப்பட்டும் இருந்ததாக செய்தியும். உண்மையில் சொல்கிறேன், இதை இப்பொழுது எழுதும்போதும் மனமெல்லாம் நடுங்குகிறது, இன்னும் அப்படம் கண்ணை விட்டு மறையவில்லை. தெற்றுப்பல் சிரிப்புடனான மகாவை அப்படிப் பார்த்தது கடும் மனவேதனை.

சிற்றூரான எங்கள் ஊர் முழுவதும் அதிர்ந்து போனது. இருபத்தைந்து வயதுக்குட்பட்ட நான்கு குற்றவாளிகளையும் எளிதில் பிடித்து விட்டனர். அவர்கள் பாலியல் வன்முறைக்குச் சொன்ன காரணம் இதுதான்...

'மகாவும் அவள் அக்காவும் நடந்து செல்லும்போது அடிக்கடி கிண்டலடித்தோம். மகா ஒருநாள் கோபப்பட்டுத் திட்டிவிட்டாள். அழகாக இருந்ததால் அவளை அடைய ஆசையும் வேறு சேர்ந்து, இந்த தண்டனையைத் தேர்ந்தெடுத்தோம்'

படுமோசமான நிகழ்வு. ஆனால் இதெல்லாம் நடந்தது இன்க்ரெடிபில் இந்தியாவில் அல்லவா?! MLAவின் சாதிக்காரன் ஒருவனும் குற்றவாளியாக இருக்க, அவர் தலையீட்டால் எளிதில் ஜாமீன் கிடைத்து வெளியே வந்து விட்டனர் அனைவரும். வெகுண்டெழுந்த மகாவின் சாதியினர் போராட்டங்களில் இறங்க, கிட்டத்தட்ட சாதிப் பிரச்சனையாக வெடிக்க இருந்தது நல்லகாலமாக குறிக்கோளில் வழுவாது பிழைத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட, குற்றவாளிகள் மறுபடி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பள்ளி மறுபடி ஆரம்பிக்கப்பட்டது. எல்லா மாணவிகளின் வீடுகளிலும் கடும் அறிவுரைப் படலம் நடந்தது. ஒரே உள்ளீடுதான். 'கவனமாக இருந்துக்கணும், யார் என்ன கிண்டல் பண்ணாலும் பேசாம வந்துரணும்'. என் ஆசிரியை ஒருவர் 'பாத்து இருந்துக்குங்கப்பா...அந்தப் பிள்ளை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுச்சோ' என்று கண்ணில் நீர் வழிய சொல்லிக்கொண்டிருக்க, நாங்கள் எல்லாம் பேயறைந்தது போல அமர்ந்திருந்தோம்.

அதன் பின் எல்லா மாணவிகளையும் ஒன்றிணைத்து மடத்தனத்தின் உச்சமான,கேவலமான கட்டளைகள் இடப்பட்டன.
"யாரும் பள்ளிக்குப் பூ வைத்துக் கொண்டு வரக்கூடாது. துப்பட்டாவில் இனி 3 பின்களுக்குப்பதில் 6 பின்கள் குத்திக்கொள்ள வேண்டும், அலங்காரமான கம்மல் எல்லாம் போடக்கூடாது" போன்றவை. மொத்தத்தில் மட்டமான தோற்றத்தோடு மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும், அகோரமாக வர முடிந்தால் மிக நல்லது. நாங்கள் ஒன்றும் விளங்காமல் பேஸ்தடித்துப் போய் இருந்தோம். 'கரி ஏதாவது பூசிக்கிட்டு வருவோம்' என்று பேசிக்கொண்டிருந்தோம்.

இந்த கட்டளைகளுக்குக் காரணமூலம் ஒரே முடிவுதான். அந்தக் கொடூரமான பாலியல் வன்முறைக்குக் காரணம் மகா அழகாக இருந்ததுதான். துப்பட்டாவில் கூடுதலாகக் குத்தப்படும் பின்களும் அழுது வடியும் தோற்றமும் சர்வ நிச்சயமாக யாரையும் பாலியல் வன்முறைக்குத் தூண்டாது.... எத்தனை கேவலம்?! ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் உ.வாசுகி அப்போதே இதனைக் காட்டமாக எதிர்த்துப் பத்திரிக்கைகளில் பேட்டியளித்தார். பின்னாளில் அவரைச் சந்திக்க நேரிட்டபோது இதற்கும், அவர் கட்சியின் போராட்டத்துக்கும் நன்றி தெரிவித்தேன்.

மகா கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சி எடுத்துவிட்டு அரைமணி நேரம் தாமதமாகப் பள்ளியிலிருந்து சென்றது கூடத் தப்பென விமர்சிக்கப்பட்டது, 'பொம்பளைப் பிள்ளைகளுக்கு எதுக்கு இதெல்லாம்?!' 'பொறுக்கிப் பயலுகள்ட்ட போய் கிண்டலடிச்சதுக்குத் திட்டலாமா?' வகைக் கருத்துகள்.

மகா கொல்லப்பட்ட கொடூரத்தை விட, அவள்தான் அதற்குக் காரணம் என்பது போல் சொல்லப்பட்டவை எல்லாம் வேதனை.
"நீங்க பத்திரமா இருக்கணும்னா நீங்க பாத்து நடந்துக்கங்க. நம் சமூகம் இப்படிதான் இருக்கும்" என்ற கேடுகெட்ட வாக்கியம்தான் சரியாக விவரம் புரியாத அந்தச் சமயத்திலேயே சுழற்றி அடித்தது.

கீழ் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை தரப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் 7 வருடங்களாக அது குறைக்கப்பட்டு, என்னென்னவோ காரணங்களால், குற்றவாளிகள் 4 வருடங்களிலேயே வெளிவந்தாயிற்று. வழக்கு நடந்த காலமே 3 வருடங்கள். இத்தனைக்கும் மகா நல்ல வசதியான வீட்டுப்பெண்தான். தங்கள் பெண்ணுக்கு இப்படி நடந்ததில் முற்றிலும் இடிந்து போயிருந்தது அக்குடும்பம்.

அவ்வளவே...அக்குற்றவாளிகள் தற்போது மிக இயல்பான வாழ்வில்,..
என்ன ____ நியாயம் கிடைத்தது? வாக்குகளிட்டுத் தேர்ந்தெடுத்தவன் குற்றவாளியைக் காப்பாற்ற, கொடூர வன்முறையை எதிர்ப்பதற்கு பதில், அடிபட்டுக்கிடப்போரிடம் அறிவுரைகள் அள்ளி வழங்கும் சமூகம்.

இது நடந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னும் மேலும் மேலும் உயரும் பாலியல் வன்முறைகளும், பெண்களுக்குக் கிடைக்கும் இலவச கலாச்சார வகுப்புகளும்...மணிமகுடமாக, தான் பெண் என்பது தெரியக்கூட ஆரம்பிக்கும் முன் பாலியல் கொடுமையை எதிர்கொள்ள நேரிடும் சிறுமிகளும்...என்ன ஒரு பண்பட்ட தேசம்!!!

பெண்ணியம் என்ற சொல்லைக் கேட்டதுமே அமிலம் பட்டாற்போல் பதறும் கனவான்களே...பாலியல் கொடுமையை எதிர்ப்பதும் பெண்ணியம் பேசுதல்தான்.

இதோ, பெண்கள் தினம்...இந்த தினத்திற்கு நான்கு நாட்கள் முன்னர்தான் மகா வன்கொலை செய்யப்பட்ட தினம்.

தன் வீட்டுப் பெண்கள் தவிர அத்தனை பேரையும் மிகக் கேவலமான சொற்களால் விமர்சித்து அறிவாளியாகிக் கொண்டு, சற்றே தலைதூக்க எத்தனிக்கும் பெண்களை சொற்கள் வீசி வதைத்துக் கொண்டு, சுயம் என்பதே கூடாதென நொடிக்கொரு முறை அவளைக் குட்டிக் கொண்டு, காதலிக்க மறுத்தால் அமிலம் வீசிக்கொண்டு, பண்பாட்டுப் பெருமையும் தமிழினப் பெருமையும் பேசி முற்போக்கு முகமூடியுடன் இனிதே சொல்லுவோம்...

வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித்திரு நாடு!




2015-02-19

பூத்து நிறையும் செண்பக வாசம்


'அனிதாஎந்திரிச்சதுல இருந்து கதைப்புத்தகத்தைத் தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்க...வந்து தோசையைச் சாப்பிடு. ஹாஸ்டல்ல என்ன உருப்படியா சாப்பிட்டிருக்கப் போற?'

அடுப்படியில் இருந்து அம்மா கூப்பிட்டார். அதிகாலையில் 'வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தியவள்' என்று ஆரம்பித்த தெருவின் ஒலிபெருக்கி, ஊதாக் கலர் ரிப்பனைக் கூவியழைத்து திருவிழா மனநிலையை வலிந்து உருவாக்க முயன்று கொண்டிருந்தது.

புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன்.

'சாப்பிட்டுட்டுப் பெரியம்மா வீடு வரை போகணும். மாவிளக்குக்கு மாவு இடிச்சு வைக்கிறேன்னு சொல்லுச்சு. போய் வாங்கிட்டு வந்துரு'

'ம்ம்ம். செண்பகா அக்கா வருதா திருவிழாவுக்கு?'

'அக்கா இங்கதான் இருக்கு. போனதடவை நீ ஹாஸ்டலுக்குப் போன ரெண்டு நாள்லயே வந்திருச்சு. அவங்க வீட்ல பெரிய பிரச்சனை. இனி சேர்ந்து வாழ முடியாதுன்னு அனுப்பிட்டாங்க'

'என்னம்மா சொல்ற? பிரச்சனையா?  நல்லாதான இருந்தாங்க?'

'ஆமா...குழந்தை இல்லன்னு காரணம் சொல்றாங்க'

'இது ஒரு காரணமா? கல்யாணம் ஆகி ஆறு வருஷம்தான ஆகுது? அதுவும் இப்போ எவ்வளவு ட்ரீட்மெண்ட்ஸ் வந்துருச்சு?'

'இல்லம்மா, எதுக்கும் வழி இல்லை. அக்காவுக்கு கர்ப்பப்பைல ஏதோ பெரிய பிரச்சனையாம்'

'என்னம்மா இது? அப்படியே இருந்தாலும் குழந்தைதான் வாழ்க்கையா? செண்பாக்கா மாமா ரொம்பப் பாசமா இருந்தவர்தானே?'

'எல்லாம் மாறிப்போச்சு. குழந்தை பிறக்காதுன்னதுமே கடுசா நடக்க ஆரம்பிச்சுட்டான். 'கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும்'ன்ற மாதிரி நிறையப் பேசி, அவனைக் கல்யாணம் பண்ணத் தயாரா இருக்க பொண்ணைக் காமிச்சு மனசை மாத்திட்டாங்க'

எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. செண்பா அக்காவை வேண்டாம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? முகமெல்லாம் புன்னகையும் கொஞ்சமும் கபடம் இல்லாத பாசமுமாக அன்பைப் பொழியும் ஒருத்தியையும் வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு என்ன இழக்கிறோம் என்று புரிந்திருக்குமா?

'திருவிழா முடியவும் பெரியவங்களை எல்லாம் கூட்டிட்டுப்போய் அவங்க வீட்ல பேசணும்னு அப்பாவும் பெரியப்பாவும் முடிவெடுத்திருக்காங்க. பெரியம்மாதான் அழுது ஓயுது'

அம்மா சொல்லிக்கொண்டே போக எனக்கு மனது முழுக்கக் கசந்து வந்தது.

அக்காவை எப்படி எதிர்கொள்ள என்று புரியாமல் மெல்ல 'பெரிம்மா' என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். மலர்ந்த புன்னகையுடன் அக்கா வெளியே ஓடி வந்தாள்.

' அனிதா, எப்போ வந்த ஹாஸ்டல்ல இருந்து? சாப்பிடுறதே இல்லையா? ரொம்பப் படிச்சு இளைச்சுப் போயிட்ட' என்று இயல்பாகக் கேட்டுக்கொண்டே என்னைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த அக்காவின் கைகளில் என் கைகள் உணர்ந்த வெம்மையில் மனம் லேசாகியது.

வானம் மெல்ல இருட்டத்தொடங்கிய பொழுதில் நையாண்டி மேளமும் உருமியும் சன்னமான ஒலியாகக் கேட்கத் தொடங்கியது. மாவிளக்கு ஊர்வலம் தொடங்கியாயிற்று.

'அடுத்த தெருவுக்கு வந்துட்டாங்க போல. மாவிளக்கை ஏத்தித் தாம்பாளத்தைக் கையில் எடுத்துக்கோ. செண்பா கூடவே போய் கோவில்ல இறக்கி வை. நான் பின்னாடியே பொங்கல் வைக்க சாமான் எல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன்'

தட்டை எடுத்துக் கொண்டு ஊர்வலத்தின் கடைசியில் சேர்ந்து நடக்கத் தொடங்கியதும் அக்காவை எதிர்பார்க்கத் தொடங்கியது மனது. எப்பொழுதும் மிகை குதூகலம் மட்டுமே இருக்கும் இந்தத் தருணத்தில் இன்று மனது ஒரு திகைப்புடனே அலைபாய்ந்தது.

செண்பா அக்காவின் தெருவில் நுழையவும், அக்கா மாவிளக்குத்தட்டோடு வீட்டிலிருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது. பாசிப்பச்சைப் பட்டில் , மாவிளக்கின் ஒளியில் அக்காவைப் பார்க்கவும் மனதிலிருந்த நெருடலெல்லாம் சட்டென விலகி பெரும் பரவசம் ஆகியது.

ஓர் அதிகாலைப் பொழுதில், மூக்குத்தியின் பேரொளியுடன், வாஞ்சையாக அணைத்துக் கொள்ளும் நேசச் சிரிப்புடன் நின்றிருந்த கன்னியாகுமரி தேவியின் ஏகாந்த தரிசனத்தின்போது இருந்த பரவசத்திற்கு சற்றும் குறையாததொரு மனநிலை.

சட்டென கவனம் ஈர்க்கும் அழகு இல்லை அக்காவுக்கு. மாநிறமும், திருத்தமான முகமும், அனைத்திற்கும் மேல் சட்டென மலரும் தெற்றுப்பல் சிரிப்புமாக, எனக்கு எப்போதுமே அக்கா தேவதைதான்.

'முளைப்பாரி போடுங்கம்மா முத்துமாரியைப் பாடுங்கம்மா 
தானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை
தானானை தானானை தானானை தானானை'

முளைப்பாரியைச் சுற்றிக் கும்மியடித்துக் கொண்டிருந்த பெண்களைக் கடந்து கோவிலில் மாவிளக்கை இறக்கி வைத்துப் பூசைக்கு நின்றோம். பூசாரி தந்த குங்குமத்தைப் பூசிக்கொண்டு அக்காவைப் பார்க்க, அவள் வெகு சிரத்தையாய் வகிட்டில் குங்குமம் இட்டபின் தாலியிலும் இட்டுக்கொண்டு கண்ணில் ஒற்றித் தழையவிட்டாள்.

கும்மியை வேடிக்கை பார்க்க வாகான இடம் பார்த்து நின்று கொண்டோம். அக்காவிடமிருந்து பிரசாதம் வாங்கும்போது ஒரு பார்வை பார்த்து விட்டு,பெருமூச்சை மறைத்துக் கொண்டே அக்காவிடம் சொன்னேன்.

'அக்கா, அப்படியே மீனாட்சியம்மன்எந்திரிச்சுநடந்து வந்த மாதிரி இருக்க.கிளியும் கிரீடமும்தான் இல்லை. நானே கண்ணு வச்சிட்டேன் போ'

'அப்படியா?? அப்ப இப்படியே போய் உங்க மாமாவை மயக்கிக் கூட்டிட்டு வந்துருவமா??'

சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்க, விக்கித்துப் போய், செய்வதறியாது அசட்டுத்தனமாக நானும் சிரிப்பில் கலந்து கொண்டேன். மேளமும் உருமியும் போட்டியிட்டு ஒரு தீவிரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

அதன் பின்னான ஏழு மாதங்களில், பேச்சுவார்த்தைகளெல்லாம் தோற்றுப் போய் அக்காவுக்கு விவாகரத்து ஆகிவிட்டிருந்தது. அதுவரை விடுமுறையில் வந்திருந்த போதெல்லாம் அவள் வீட்டிற்குப் போவதைத் தவிர்த்து வந்தேன். பெரியம்மாவின் அழுகையும் புலம்பலும் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் ஒரு தைரியத்தோடு அக்காவைப் பார்க்கக் கிளம்பினேன்.

வீட்டில் அக்கா மட்டும் சமைத்துக் கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டே போய்ப் பக்கத்தில் நின்றதும் துளியும் மங்காத அற்புதப் புன்னகை என்னை அள்ளிக் கொண்டது.

நலம் விசாரிக்கும் அக்காவின் பேச்சில் கலக்கமெல்லாம் மறந்து தற்செயலாகவோ வலியவோ அவள் கழுத்தில் பார்த்தேன். சாதாரணச் சங்கிலி செண்பா அக்காவை மேலும் அழகாக்குமாறு அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது.