2015-02-19

கனா கண்டேன் தோழீ நான்!

'ஓட்ஸ பால்ல போட்டுக் குடிச்சா இன்னும் கொஞ்சம் வெய்ட் தான் போடும். மெலியனும்னா மோர்ல கரைச்சு குடிக்கணும்'

நான் கேஃபெடேரியாவில் நுழையும்போது வித்யாவிடம் ரதி சொல்லிக்கொண்டிருந்தாள். . எனக்கு ஒரு தேனீரை வாங்கிக்கொண்டு வித்யாவின் அருகில் போய் அமர்ந்தேன்.

மென்பொருள் நிறுவனம் என்றவுடனே நுனி நாக்கு ஆங்கிலம், விரித்துப்போட்ட தலை, மேற்கத்திய உடைகள், எதிலும் ஒரு அலட்சியம் என ஒரு காட்சி எல்லோருக்கும் விரியும். மதுரை என்றாலே வீச்சரிவாளும் தாவணியும் கண்முன் வருவதைப் போல. தஞ்சாவூர், நெல்லை, மதுரைப் பக்கமிருந்து வந்து, வட்டார வழக்கு கூட மாறாத மொழியில் பேசிக்கொண்டு, நெருக்கியடித்த படுக்கைகள் நிறைந்த விடுதிகளிலோ, சென்னையில் ஆகக் குறைந்த வடகையில் கிடைக்கும் வீடுகளிலோ தங்கிக் கொண்டு, உழைப்பை உறிஞ்சுவதில் அசுரத்தனமாக முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் இரவு பகலாக உட்கார்ந்து முதுகொடிய வேலை பார்த்துக்கொண்டு, சம்பளம் வந்தவுடன் படிப்புக்கு வாங்கிய கடனுக்கோ, அப்பா வாங்கிய கடனுக்கோ பணத்தை அனுப்பிக் கொண்டு இருப்பவர்கள் எத்தனையோ பேர். ஊர் வழக்கங்களையும் மறக்க முடியாமல், நகர பழக்கங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிலைதான் இவர்களுக்கு இருக்கும். நான், வித்யா, ரதி மூவருமே இந்த வகைதான். அதனாலேயே ஒன்று சேர்ந்தோமோ என்னவோ.....

உடல் பருமன் குறைப்பது பற்றி தினம் இரண்டு குறிப்புகளாவது எங்கள் பேச்சில் அடிபடும். வித்யா எப்படியாவது பதினந்து கிலோ குறைந்து விடுவதில் வெறியாக இருந்தாள். சென்ற வாரம் அவளைப் பெண் பார்க்கும் படலம் நடந்த பிறகு தான் அத்தனையும்.

'நான் குண்டா இருக்குறதுதான் காரணம்னு சொல்லி மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டாராம். அப்பா 'கொஞ்சம் மெலிய ட்ரை பண்ணும்மா'னு சொன்னார். போன தடவை வந்த மாப்பிள்ளை கருப்பா இருக்கதால வேணாம்னு சொன்னான். அதுக்கு என்ன பண்றது? 'கருப்பா இருந்தாலும் களையாவாவது இருக்கணும்ல?'னு மாப்பிள்ளை அம்மா கேட்டாங்களாம். ஏதாவது பழமொழி சொல்லிட்டு போய்டறாங்க.....என்ன செய்றதுன்னு தெரியாம நாம முழிக்கிறோம். நிறத்தையும் அழகையும் ஒண்ணும் பண்ண முடியாது...அட்லீஸ்ட் வெயிட்டயாவது குறைக்கலாம்னு பாக்குறேன். அப்பா திருப்திக்காகவாவது.....'

வித்யா சொல்லும்போது என்ன பதில் சொல்லவென்றே தெரியவில்லை. இத்தனைக்கும் அவளைப் பார்க்க வந்த மாப்பிள்ளைகள் யாரும் அவளை விட அழகாய் இருந்து விடவில்லை. இவளை விட ஏழு வயது வித்தியசத்துடன், முப்பது வயதிலேயே நாற்பது வயது தோற்றம் கொண்டுதான் இருந்தனர்.

'ஃபோட்டோ பாத்துட்டு தானடி பொண்ணு பாக்க வராங்க?' என வருத்தத்துடன் கேட்டேன்.

'நேர்ல இன்னும் பெட்டரா இருக்கும்னு வந்தோம்னு சொல்றாங்கடி.....எனக்கு வெறுத்துப்போச்சு. என்னை விட ரொம்ப கம்மியா சம்பளம் வாங்கினாலும் பரவயில்லை, மாப்பிள்ளைனு ஒருத்தன் கிடைச்சா போதும்ன்ற நிலைமைக்கு அப்பா இப்போ இறங்கி வந்துட்டார். தங்கச்சி மட்டும் இல்லைனா 'போங்கடா நீங்களும் உங்க
கல்யாணமும்'னு போய்டுவேன்'

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு படித்து எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் இந்த ஆதி கால பிரச்சனையில் வந்துதான் நிற்க வேண்டி இருக்கிறது.

மறு நாள் வித்யா மிக சோர்வாக இருந்தாள். மெலிகிறேன் பேர்வழி என்று அண்ணா சாலையில் இருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு, கோடம்பாக்கத்தில் இருக்கும் அவள் விடுதியில் இருந்து நடந்தே வந்திருக்கிறாள். அதிர்ந்து போன நானும் ரதியும் எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை. இரவு விடுதி திரும்ப ஒரு மணி ஆனலும் மறு நாள் நடந்துதான் வந்தாள். ப்ரொஜெக்ட் மேனேஜரே கூப்பிட்டு 'ஆர் யு ஒகே? ரொம்ப டல்லா தெரியுறீங்க....வேணும்னா ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்க....அடுத்த மாசம் முக்கியமான ரிலீஸ் எல்லாம் இருக்கு' என்று சொல்லும் அளவு படு வேகமாக மெலிந்து கொண்டிருந்தாள். அவள் உடல்ந்லம் என்ன ஆகுமோ என்று நாங்கள் புலம்பியதுதான் மிச்சம்.

ஒரு நாள் மாலையில் வித்யா பரபரப்பாக என்னிடம் வந்தாள்.

'சுபா, உங்கிட்ட ஃபேஸ் வாஷ் க்ரீம், ஃபேர்னஸ் க்ரீம் இதெல்லாம் இருக்கா?' என்று கேட்டாள்.. யாரோ மாப்பிள்ளையின் அம்மாவும் அக்காவும் அலுவலக ரிசப்ஷனில் வைத்து பெண் பார்க்கப் போகும் அதி புத்திசாலித்தனமான யோசனையுடன் வருகிறார்களாம்.

பக்கத்து இருக்கை வினயாவிடம் இருந்து எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். பதினைந்து நிமிடம் நேர்முகத்தேர்வு போல் அவர்களிடம் பதில் சொல்லி விட்டு வந்திருக்கிறாள்.
மறு நாள் அவள் முகத்தைப் பார்த்தே முந்தைய நாளுக்கான தேர்வு முடிவு தெரிந்து விட்டதால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

சில நாட்கள் கழித்து முன்பை விட சோர்வாக வந்தாள்.

'மார்கழி மாசம் இல்லயா? அதான் கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன். ஆண்டாள் திருப்பாவை பாடித்தான் பெருமாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அதனால
அம்மா மார்கழி மாச விரதம் இருக்க சொல்லி இருக்காங்க...தினமும் காலையில 5 மணிக்கு ஃபோன் பண்ணி எழுப்பி விட்றாங்க. அதுலயும் 'சிற்றஞ்சிறுகாலே'னு ஒரு பாசுரம்....அத தினமும் பாடினா நிச்சயம் மாப்பிள்ளை அமையுமாம்'

எனக்கு அயர்ச்சியாய் இருந்தது. அவள் என்ன மனநிலையுடன் இதைச் சொல்கிறாள் என்று கூட என்னால் ஊகிக்க முடியவில்லை. அலுவலகத்தில் வேறு ஒரு
ப்ரொஜெக்ட் முக்கியமான கட்டத்தில் போய்க்கொண்டு இருந்தது. சனி, ஞாயிறுகளில் கூட வந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தோம். வேலை, விரதம், நடை எல்லாம் சேர்ந்து வித்யாவை ஒரு வழி செய்திருந்தது.

மார்கழி மாதம் முடிந்திருந்த ஒரு வாரத்தில் அழகு நிலையம் செல்ல என்னைத் துணைக்கு அழைத்தாள் வித்யா. அடுத்த படலம் என அவள் சொல்லாமலேயே எனக்குத் தெரிந்து விட்டது. புருவம் திருத்தி, ஃபேசியல் செய்து ஒரு 1000 ரூபாயை அழுது விட்டு வந்தாள். வெள்ளிக்கிழமை அவள் ஊருக்குக் கிளம்பியதில் இருந்து திங்கட்கிழமை காலையில் அவளைப் பார்க்கும் வரை நானும் ரதியும் அவளைப் பற்றி பேசிப் பேசி மாய்ந்தோம். எத்தனையோ தடவை அவள் பொம்மை போல மாப்பிள்ளைகளின் முன் நின்றிருக்கிறாள். ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? வேலையில் அவள் திறமையைப் பற்றி ப்ரொஜெக்ட்ல் எல்லாருமே பாராட்டும் பொறாமையுமாய்ப் பார்ப்பார்கள். நிறைய முறை பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் விருதுகள் வாங்கி இருக்கிறாள். எதுவுமே திருமண சந்தையில் எடுபடவில்லை. மூளை, இதயம் என்பதெல்லாம் திருமணத்திற்குத் தயாராகும் பெண்களுக்கு இருப்பதில்லை என்றே கொள்ளப்படுகிறது.

'நீ வேற, என் வேலையை மதிச்சுதான் ஃபோட்டோ பாத்த அப்புறமும் பொண்ணு பாக்க வர்றாங்க. வேலையும் இல்லன்னா நான் ஒளைவையார்தான்' என சிரிப்பாள் வித்யா.

திங்கள் காலையில் முகம் கொள்ளா பூரிப்புடன் வந்தாள் வித்யா. வந்தவுடன் காஜூ கத்லி டப்பாவை நீட்டினாள்.

ரதி பறந்து கொண்டு கேட்டாள்....'என்னடி, சக்ஸஸா?'

'ஆமா ரதி.....பூ வச்சிட்டுப் போய் இருக்காங்க. அடுத்த மாசம் நிச்சயதார்த்தம், அப்புறம் 2 மாசத்துல கல்யாணம். மாப்பிள்ளை பேங்ளூர்.....நான் ட்ரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணனும்'

எனக்கு அவளைக் கட்டிக்கொண்டு தூக்கி சுற்ற வேண்டும் போல் இருந்தது.

'ரொம்ப ரொம்ப சந்தோஷம் வித்யா.....அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க இல்ல?'

'ம்...ஆமா....அம்மா வேண்டிக்கிட்ட கோவிலுக்கெல்லாம் நேர்த்திக்கடன் முடிக்க கிளம்பி இருப்பாங்க இந்நேரம். நான் மார்கழி மாசம் விரதம் இருந்ததுதான் இந்த வரன் முடியக் காரணம்னு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டு இருக்காங்க....அப்பாவோ நான் அவர் பேச்சைக் கேட்டு உடம்பை குறைச்சதுதான் காரணம்னு சொல்லிட்டு இருக்கார்.
இது எதுவுமே காரணம் இல்லனு அவங்களுக்குத் தெரியல'

'வேற என்னடி?'

'இத்தனை நாள் வரதட்சணை லிஸ்ட்ல இல்லாமல் இப்போ புதுசா சேர்ந்து இருக்கிற 4 லட்ச ரூபாய்தான் காரணம். மாப்பிள்ளை வீட்ல அத சான்ட்ரோ காரா வாங்கி குடுக்க சொல்லிட்டாங்க......கருப்பு கலர்ல வேணுமாம்'


சொல்லிவிட்டு அடக்க முடியாமல் சிரித்த அவளை நாங்கள் விக்கித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.



3 comments:

Aasif said...

டீவீட்டரில் எதையோத் தேடிக் கொண்டிருக்கும் போது உங்கள் வலைப் பக்கம் வந்தேன். கடைசி இரு சிறுகதைகளை ஏற்கனவே படித்திருந்ததால் மற்றவற்றின் பெயர்களைப் பார்க்கும் போது "கனா கண்டேன் தோழீ நான்!" கண்ணில்பட்டது. //மூளை, இதயம் என்பதெல்லாம் திருமணத்திற்குத் தயாராகும் பெண்களுக்கு இருப்பதில்லை என்றே கொள்ளப்படுகிறது.// என்ற வரியைப் பார்த்ததும் என் தோழி நினைவு. என்னுடையக் கல்லூரித் தோழி ; இருவரும் ஒரே நிறுவனத்தில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்..திறமைசாலி, இங்கிலாந்து, அமெரிக்கா எனப் பறந்து கொண்டே இருப்பாள். வீட்டில் திருமண நெருக்கடி, பலர் வந்து, பார்த்து, உயரம், நிறம் என நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டே இருந்தனர். ஒரு முறை அவள் தாயிடம் நானே கோவமாய் பேசி விட்டேன். இருந்தாலும் நின்றபடி இல்லை ; இறுதியில் சொந்த முறையில் ஒரு வரன். அவள் படிப்பு, வேலை, கை நிறைய வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் என அனைத்தையும் விட்டுவிட்டு சொந்த ஊர்க்கு சென்று விட்டாள். மகிழ்ச்சியாத்தான் இருக்கிறாள். ஆனால் கனவுகள் அனைத்தையும் திருமணம் என்னும் விடயத்திற்காக மறந்து விட கட்டாயத்தில் இருந்தது எனக்கு இன்னும் உறுத்துகிறது. அவளுக்கும் அப்பிடித்தான் என நினைக்கிறேன்..

பிரேமாவின் செல்வி said...

@aasifniyaz K நன்றி ஆசிஃப்!

Lakshmi said...

Nicely written