2016-02-27

பாலித்தீவுப்பயணம்



இந்தோனேசியாவின் புகழ்மிக்க சுற்றுலா இடம். 80% இந்து மக்கள் நிறைந்த, அழகான கடற்கரைகளும் கோவில்களும் கொண்ட தீவு. பாலித்தீவு குறித்த தெளிவான வரலாற்றுடன், இந்துத் தொன்மங்களுக்கான தேடலை முன்னிறுத்தும் கானபிரபாவின் நூல் பயணத் திட்டம் வகுத்துக் கொள்ளவும் பாலித்தீவை அறிமுகம் செய்து கொள்ளவும் உதவியாக இருந்தது. மேலும், சில மாதங்களுக்கு முன் பாலி சென்று வந்த தோழியின் வழிகாட்டுதலும் உதவியது.

பயணத்திட்டத்தின் முதல் படியாக, இங்கிருந்தபடியே தங்குமிடம் முன்பதிவு செய்து கொண்டோம். சிங்கையிலிருந்து 3 மணி நேரப் பயணம். விமானத்தில் பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள்தான். ஏழடிக்கு இருந்த ஒருவர், விமானம் வரும்வரை காத்திருப்பு அறையில் சிரசாசனம் எல்லாம் செய்து கொண்டிருந்தார். வேறு சிலரும் டாட்டூக்களும், புதுவிதத் தலையலங்காரங்களுமாக. பயண விரும்பிகள் பெரும்பாலும் வேடிக்கையானவர்களாகவே இருக்கின்றனர்.

நள்ளிரவில் பாலித்தீவின் 'டென்பசார்' விமான நிலையத்தை அடைந்தோம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு 'On arrival visa' மற்றும் 2015 அக்டோபரிலிருந்து விசா கட்டணமும் எதுவும் இல்லை. உடைமைகள் எடுக்கும் இடத்தில் சிலர் அலை விளையாட்டுக்கான 'Surf board' எடுத்துக்கொண்டு செல்வதைக் காண முடிந்தது.

தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்ல விடுதியிலிருந்தே வாகனம் வந்து விட்டதால் எளிதாக இருந்தது. விமான நிலையத்திலிருந்து 10 நிமிட தூரத்தில், 'KUTA' நகரில் 'The Vira Bali'விடுதியில் அறை பதிவு செய்திருந்தோம். அந்த நேரத்திலும் நல்ல வரவேற்பும் உபசரிப்பும் இருந்தது. அங்கிருந்த ஐந்து நாட்களும், பணியாளர்கள் அனைவருமே சிறந்த உபசரிப்பை நல்கினர். பாலித்தீவு முழுவதுமே இந்தோனேசியர்கள் இன்முகத்துடன் சுற்றுலாப் பயணிகளை அணுகுவதைக் காணலாம். கடைத் தெருவில் நடந்து செல்லும்போது கூட, 'Welcome to Bali, visit again' என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

காலையில் தங்குமிடத்தின் அட்டகாசமான காலை உணவு buffetஐ சிறப்பித்துவிட்டு, விடுதியைச் சேர்ந்த வாகனம் ஒன்றையே சுற்றிப் பார்க்க ஏற்பாடும் செய்து கொண்டு ஊர்சுற்றலைத் தொடங்கினோம். வாகனச் சாரதியின் பெயர் "பார்த்தாயா". பாலித்தீவின் இந்துக்கள் பெரும்பாலும் மகாபாரதக் கதாபாத்திரங்கள், விஷ்ணுவின் பெயர்களையே கொண்டுள்ளதாகக் கூறினார். நம் ஊரின் மகாபாரதத் தொடர்கள், இராமாயண நாட்டிய நாடகங்கள் எல்லாம் அங்கு மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் படுகின்றன. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சீதையின் ராமன்' நாடகம் கூட அங்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
          
                                   

முதலில் சென்றது 'Tanah Lot' எனப்படும் கோவில். கடற்கரையில் கடல் நீர் சூழ்ந்தவாறு அமைந்திருக்கும் வெகு அழகான கோவில். புனித நீர்ச்சுனையில் முகம் கழுவி தீர்த்தம் உண்டபின் காதில் சந்தன அரளிப் பூவை வைத்து விட்டு, நெற்றியில் நீரில் நனைத்த அரிசியை ஒட்டி விட்டனர். இந்த சந்தன அரளி, வரவேற்க, பூஜைக்கு, தலை அலங்காரத்திற்கு என்று எங்கும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

பாலித்தீவின் சில கோவில்கள் தவிர பெரும்பாலும் கோவில்களைச் சுற்றியுள்ள இடங்களை மட்டுமே பார்க்கவியலும். பூசைகள் நடக்கும் நேரம் மட்டும் உள்ளே செல்லவியலும் போலும். கோவில் கோபுரங்களின் பொது வடிவம் அலங்கார நுழைவாயில் கட்டுமானங்களும், நாணலால் வேயப்பட்ட அடுக்கடுக்கான கோபுரமும் கொண்டதாக உள்ளது.

                                       

அடுத்து சென்றது 'Taman Ayun (Royal temple)'. பாலி அரச குடும்பத்தினர் வழிபடும் கோவிலாம். இங்கும் பல அடுக்குகள் கொண்ட கோபுரங்களைக் காண்பது தவிர சிறப்பாக எதுவும் இல்லை. இந்தக் கோவிலின் நுழைவுப் பாதையில் இருக்கும் மிகப் பெரிய பீமன் சிலை வெகு அழகு.
                                               

பாலித்தீவு முழுவதுமே மகாபாரதக் கதாபாத்திரங்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் சிலைகளைக் காணலாம். சுற்றுலாப் பயணிகளைக் கவர 1993 வாக்கில் இச்சிலைகள் அமைக்கப்பட்டதாக வாகனச் சாரதி கூறினார்.

விமான நிலையத்தின் அருகில் இருக்கும் கீழ்க்காணும் சிலை 'Gatotkacha' என்ற பெயர் கொண்டது. குருச்சேத்திரத்தில், பீமனின் மகனும், பறக்கும் வீரனுமான 'கடோத்கஜனுக்கும்', சல்லியன் தேரோட்ட,போரில் ஈடுபடும் கர்ணனுக்கும் நடக்கும் போரைக் குறிக்கிறது.

                                         

இது போலவே கிருஷ்ணன், வருணன், கும்பகர்ணன், எங்கும் தென்படும் கருடன் மேல் விஷ்ணு அமர்ந்த சிலை போன்றவற்றைக் காணலாம்.

அடுத்த பயணம், மலையில், ஏரியில் அமைந்திருக்கும் "Bratan temple" நோக்கி. எல்லாக் கோவில்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஏரியின் அழகும் இதமான குளிரும் அற்புதமாக இருந்தது. ஏரியில் வேகப்படகுச்சவாரி கூடுதல் குதூகலம். அங்கிருந்து திரும்புகையில் பாலியின் அழகான, அடுக்கடுக்கான நெல் வயல்களைப் பார்த்துக் கொண்டே வந்து அன்றைய பயணத்தை நிறைவு செய்தோம்.

                                       
                                                                     (Bratan ஏரி)

பாலிக்குப் பயணம் மேற்கொள்வோர் காலையில் சீக்கிரம் கிளம்பி, 6 மணிக்குள் தங்குமிடம் திரும்பிவிடுதல் நல்லது. இல்லையென்றால் 10 நிமிடப் பயணத்துக்கு ஒரு மணி நேர வாகன நெரிசல் கொடுமையில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

நாங்கள் பயணம் மேற்கொண்ட டிசம்பரில் மழைக்காலம் என்பதால் காலநிலை சற்று தெளிவாக இருந்த இரண்டாம் நாளில் நீர் விளையாட்டுக்களுக்காக 'Nusa Dua Beach'இல் செலவிட்டோம். தம் 8 வயதுப் பிள்ளைக்கும் ஒரு பலகையைக் கொடுத்துக் கூட்டிக்கொண்டு, குடும்பத்தோடு அலைச்சறுக்கு விளையாட்டில் களிக்கும் ஆஸ்திரேலியர்களைக் காண முடிந்தது.

மூன்று மணிக்கு மேல் 'Uluwatu temple' எனும், கடலோர கற்பாறையில் அமைந்த கோவிலுக்குப் பயணித்தோம்.பெரும்பாலான பாலி கோவில்களைப் போல இங்கும் இடுப்பில் கட்டிக்கொள்ள ஒரு துணி தரப்படுகிறது. அதைக் கட்டிக்கொண்டே கோவில் வளாகத்தில் நுழைய இயலும். அழகான அமைவிடம் என்றாலும் நிதானித்து ரசிக்க இயலாதபடிக்கு குரங்குகளின் அட்டகாசம். பயணிகளின் பொருட்களைப் பிடுங்கி அதகளம் செய்தன.

             
    (கும்பகர்ணன் சிலை)                             (Uluwatu கோவில்)

இக்கோவிலில் தினம் மாலை 6 மணிக்கு நடத்தப்படும் கெச்சாக் நடனம்(Kecak dance/Fire dance) எனப்படும் இராமாயண அனுமன் படல நாட்டிய நாடகம் வெகு பிரபலம். எங்களுக்கு அதிக நேரமாகி விடுமாதலால், அதைக் காண இயலாது கிளம்பினோம்.

செல்லும் வழியில் Garuda Wisnu Kencana cultural park சென்றோம். கற்சிற்பம் போன்று தெரியக்கூடிய, உலோகத்தகடுகளால் ஆன, இந்தோனேசியர்களின் தோற்றம் கொண்ட, கைகள் பொருத்தப்படாத, 75 அடி உயர, மார்பளவு விஷ்ணு சிலையும், இறக்கைகள் பொருத்தப்படாத கருடன் சிலையும்தான் இங்கு முக்கியமானது. பாலி எங்கும் காணப்படும் கருடன் மேல் விஷ்ணு அமர்ந்த மிகப்பெரிய சிலையாக அமைக்கப்படவிருந்து, ஆன்மீகவாதிகளின் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டதாம்.

                                        

மாலை நேரம், பாலித்தீவின் நடன வகைகளுள் ஒன்றான கருடா-விஷ்ணு நடனம் நடத்தப்பட்டது. இசைக் கருவிகள் ஏதும் இன்றி, 30 ஆண்கள் கொண்ட குழுவினரின் வாய் சப்த இசையையே பிண்ணனியாகக் கொண்டு, ஆண்-பெண் குழுவினரின் நடனம் அமைந்திருந்தது. கருடனுடன் விஷ்ணுவின் சேவகர்களும் பின் விஷ்ணுவும் போரிட்டு, பின் விஷ்ணு கருடனை ஆட்கொண்டு மேலேறி அமர்வதாகக் கதை சென்றது. விஷ்ணுவாகவும் அவர் சேவகராகவும் நடித்தது பெண்களே.

                                           
                                              (கருடா-விஷ்ணு நடனம்)

இது போலவே இராமாயணம், மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட நடனங்களும் பெரும்பாலான கோவில்களிலும் பண்பாட்டு மையங்களிலும் நடத்தப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணமாகவும், கலையைக் காப்பாற்றும் விதத்திலும், கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் தருவதாகவும், இதுபோல நிரந்தரமாக தமிழகத்திலும் கூத்து, நடனக் கலைகளைச் சுற்றுலாத்தளங்களில் நடத்தலாமே என்று தோன்றாமல் இல்லை.

மூன்றாவது நாள் பாலித்தீவின் மற்றொரு முக்கிய இடமான 'Ubud' நோக்கிப் பயணம். எங்கள் தங்குமிடத்திலிருந்து இரண்டு மணி நேரப் பயணமாதலால், வாகனச் சாரதியிடம் நிறையப் பேசிக் கொண்டே பயணித்தோம். 1946ல் டச்சுக்காரர்களிடம் இருந்து சுதந்திரமடைந்திருக்கிறது இந்தத் தீவு. நிறைய சமஸ்கிருதச் சொற்கள் சிறு ஒலி மாறுதலுடன் பயன்பாட்டில் உள்ளன.

எங்கு நோக்கினும் ஆலயங்கள் தென்படும் பாலியில், ஒரு கிராமத்தில் மூன்று கோவில்கள் இருக்குமாம். Pura desa (பிரம்மன்), Pura puseh (விஷ்ணு), Pura Dalem (சிவன்). இவை போக ஒவ்வொரு குடும்பத்துக்குமான சிறு கோவில்களும், பிற சிறப்புக் கோவில்களும் தனி. பாலித்தீவினர் பக்தியில் கூடியவர்களாகத்தான் இருக்கின்றனர். கடைகள், விடுதிகள், உணவகங்களில் எல்லாம் சிறிய அளவில் காலை, மாலை பூசை நடத்துவதைக் காண முடிகிறது.

இந்தியர்களைப் பார்த்தால், 'நீங்கள் இந்துவா? நானும் இந்துதான்' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றனர். 'உங்கள் நாட்டில் சாதி அமைப்பு இருக்கிறதா?' என்று வாகனச் சாரதி கேட்கையில் சிரிப்புதான் வந்தது. பாலியிலும் சாதி அமைப்பு Shudras, Wesias, Ksatrias, Brahmins என்று இருக்கிறதாம். இந்துமதம் இருக்கும் இடத்தில் சாதி அமைப்பு இல்லாதிருக்குமா என்று நினைத்துக் கொண்டேன்.

தாந்திரீகர்களும் உண்டு, அவர்களுக்கு ஆன்மீகவாதிகளின் எதிர்ப்பும் உண்டு என்றும் கூறினார்.

உபுட் நகரம் செல்லும் வழியில், நிறைய கைவினைப் பொருள் செய்யும் இடங்கள் நிறைந்திருக்கின்றன. சாலை ஓரங்களில் அப்பொருட்களுக்கான கடைகளையும் காணலாம். ஓவியம், மர வேலைப்பாடுகள், வெள்ளிப் பொருட்கள், பத்திக் துணி வேலைப்பாடுகள் முதலியன. நாங்கள் பத்திக் துணி தயாரிப்பான ஒரு இடத்தைக் கண்டோம். துணியில் ஓவியம் வரைந்து, அதன் மேலேயே உருக்கிய மெழுகைத் தொட்டுத் தொட்டு வேலைப்பாடு செய்து கொண்டிருந்தனர். துணி வகைகளின் விலையோ வெகு அதிகம்.

இவை தவிர லுவாக் காபி (Kopi Luwak/ Luwak coffee) எனப்படும் காபித்தூள் தயாரிப்பு இடங்க்களும் நிறைய உண்டு. லுவாக் எனப்படும் புனுகுப்பூனைக்கு காபிப் பழங்களைத் தின்னக் கொடுத்து, அவற்றின் கழிவான காபிக் கொட்டைகளைக் கொண்டு செய்யப்படும் விலை உயர்வான காபித்தூள்.

உபுட் செல்லும் வழியிலேயே,Batuan என்னும் கிராமத்தின் Pura Puseh கோவிலுக்குள் நுழைந்தோம். மிக அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கோவில். உள்ளே ஒரு மண்டபத்தில் கிட்டத்தட்ட 50 சிறுவர்கள் அமர்ந்து, வெவ்வேறு வித பாலி இசைக் கருவிகள் இசைக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். Gamelan எனப்படும் இவ்விசை, கேட்க வெகு இனிமை. குறிப்பாக பாலித்தீவின் கம்பி இசைக் கருவிகள் அற்புத ஒலி எழுப்பக்கூடிய தனி வகை.

  

இங்கு இருக்கும்போதே, 'எப்பப்பாரு கோவிலா போறீங்க, ஒரே சிலையா ஃபோட்டோ எடுக்குறீங்க' என்று மகள் மிகவும் கோபித்துக் கொண்டதால், அடுத்து யானைச்சவாரி செய்யலாம் என்று தீர்மானித்தோம். சவாரி செய்யக் கட்டணம் ஒரு பட்டுப்புடவையின் விலை அளவு சொல்லித் தயங்க வைத்தாலும், அரை மனதோடு பிள்ளைக்காக சவாரி மேற்கொண்டோம். மகள் மிகவும் குதூகலித்தாலும், யானையின் கழுத்தில் கால் வைத்து ஏறிய கணம் பிறிதொரு யானைச்சவாரி செய்வதில்லை என தீர்மானித்துக் கொண்டேன். அங்கு ஒரு புறம் சிறிய உராங்-உட்டான் குரங்குகள்,தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வருவோருக்காக டயப்பருடன் காத்துக் கொண்டிருந்தன.

அங்கேயே வழங்கப்பட்ட மதிய உணவில் தெம்பாகி அடுத்த கோவிலான Goa Gajah (Elephant Cave temple) நோக்கிய பயணம். குகைக் கோவிலான இங்கு, குகைக்குள் விநாயகர் சிலையும், Tri Lingga என்று குறிப்பிடப்பட்ட மூன்று லிங்கங்களும் காணப்பட்டன. குகை நுழைவாயிலில் அழகிய வேலைப்பாடுகளும், குகையின் எதிரில் தீர்த்தமும் கொண்ட இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் உள்ளது.

             

அடுத்த கோவில் 'Tirta Empul (Holi water temple)'. விஷ்ணுவுக்குரிய கோவிலான இங்கு நாங்கள் சென்ற அன்று ஏதோ விழா நடந்து கொண்டிருந்ததால் நல்ல கூட்டம். புனிதத் தீர்த்தக் குளத்தின் 13 கோமுகிகளிலும் குளிப்பதற்கு நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் வெளிவரும் நேரம் கோவில் விழாவை ஒட்டி பெரிய ஊர்வலம் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தது. பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு, நடனத்துக்கான சிங்கம்போன்ற பெரிய உடையைத் தூக்கிக் கொண்டு செல்ல, பெண்கள் தேங்காய், பழம் உள்ளிட்ட பூசைப் பொருட்களைத் தலையில் வைத்து வரிசையில் தூக்கிச் சென்றது நம் ஊர் முளைப்பாரியை நினைவுபடுத்தியது.

   

இக்கோவிலின் வெளியில் அமர்ந்துள்ள பெரிய கடைத்தெரு, உடைகள், மர வேலைப்பாட்டுப் பொருட்கள், இசைக்கருவிகள் உள்ளடக்கிய சுவாரசியமான ஒன்று. பாதி விலைக்கு மேல் குறைத்து பேரம் பேசி வாங்கினால் மலிவு விலையில் பொருட்கள் வாங்கலாம். மகளுக்கு சிறிய கொட்டும், ஒரு கம்பிக் கருவியும் வாங்கிக் கொண்டோம்.

உபுட் நகரத்திற்குள் நுழையும்போது 4 மணி ஆகிவிட்டது. புராதானப் பொருட்களும் நிறைய உணவகங்களும் கொண்ட உபுட் நகரத்தின் கடைத்தெருவே பார்க்க அத்தனை அழகு. நிறைய ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் இங்கு தங்கியிருப்பதைக் காண முடிந்தது.

உபுட் அரண்மனையைப் பார்த்த பின் கானா பிரபா நூலில் குறிப்பிட்டிருந்த 'Pura Taman Saraswati' என்னும் சரஸ்வதி கோவிலைத் தேடிச் சென்றோம்.  பாலியின் அழகு மிகு கோவில்களில் இதுவும் ஒன்று ("ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா" பாடல் படமாக்கப்பட்ட இடங்களுள் ஒன்று :)) )கோவிலின் உள்ளே செல்லும் பாதையின் இருபுறமும் நீளக் குளங்களில் தாமரை வளர்க்கப்படுகிறது. நடுநாயகமாக தாமரை ஓவியம் பதித்த கல்லும் இருந்தது. நம் ஊரைப் போலவே இங்கும் தாமரைப்பூ சரஸ்வதியைக் குறிக்கிறது போலும். அன்னப்பறவைகள் சூழ், வீணையேந்திய சரஸ்வதி தேவியின் திருவுருவைக் காணலாம். நாங்கள் கிளம்பும் சமயம் 'Kecak' இராமாயண நடனத்திற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. உபுட் நகரம் முழுவதுமே பல இடங்களில் பண்பாட்டு நடனங்கள் நடத்தப்படுகின்றன.
     
                          

அன்றைய நாளை நிறைவு செய்யும் முன்னர் 'கிருஷ்ணா' பேரங்காடிக்குச் சென்று பாலித்தீவின் சிறப்புப் பொருட்களை வாங்கிக்கொண்டோம். விலை வெகு மலிவு.

                                              
               (கிருஷ்ணா அங்காடியில் இருந்த கருடா-விஷ்ணு சிலை)

பாலியில் ஒவ்வொரு இடத்துக்கும் பயண நேரம் அதிகம் என்பதால், மூன்று நாட்களிலேயே அலுத்துப் போனோம். முக்கியமாக குழந்தையின் அலுப்பைக் கருத்தில் கொண்டு மறுநாள் எங்களின் தங்குமிடமான 'KUTA' நகரத்திற்குள்ளேயே சுற்றலாம் என்று தீர்மானித்திருந்தோம். அதனால், பாலியின் பிற முக்கிய இடங்களான கிந்தாமணி எரிமலை, Besakih temple ஆகியவற்றைப் பயணப் பட்டியலில் இருந்து நீக்கி விட்டோம்.

மறுநாள் நிதானமாக எழுந்து காலை உணவை முடித்தபின் சாவகாசமாக நகர் உலா ஆரம்பித்தோம். தங்குமிடத்திலிருந்து காலை வெளியில் வைத்ததிலிருந்து இருபுறமும் பெரிய விடுதிகளும்  தங்குமிடங்களும் அவற்றுக்கு நிகராக Spa, Foot massage, Pedicure&Manicure கடைகளும். மிகக் குறைந்த விலையில் இந்தச் சேவைகள் கிடைப்பதால், ஆஸ்திரேலியர்கள் இக்கடைகளுக்கு வாடிக்கையாகப் படையெடுக்கின்றனர்.

பாலியில் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களே சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனையில் இருந்தாலும், நாங்கள் முழுக்க மாற்றிக் கொண்டு சென்றிருந்த இந்தோனேசிய ருப்பியாக்களையே செலவிட்டோம். அமெரிக்க டாலர் மதிப்பில் கேட்கப்படும் இடங்களில் அதே மதிப்புள்ள இந்தோனேசிய ருப்பியாக்களை வாங்கிக்கொள்கின்றனர். எங்கும் நிறைந்திருக்கும் பணப்பரிமாற்ற நிலையங்களில் பணம் மாற்றும்போது கவனம் தேவை.

எங்கள் விடுதியின் நீள் வீதியில் சகலவித உணவகங்களையும் காண முடிந்தது. வாத்துக்கறி (Bebek) பாலியில் பிரபலம். அதுபோக பன்றிக்கறியும். சாதாரண வருவல் எல்லாம் இல்லை, முழுக்க அப்படியே பொரிக்கப்பட்டது. நம் ஊர்களில் முழுக்கோழியைப் பொரித்து, காட்சிக்காகத் தொங்கவிட்டிருப்பதைப் போல, பல உணவகங்களின் வாசலில் இருந்த வரவேற்புப் பலகையில், அப்படியே பொரித்த, காது விடைத்து, கண்கள் துருத்திக் கொண்டிருக்கும் பன்றியின் படமும் வரவேற்றுத் திகில் கிளப்பியது.

ஓர் இந்திய உணவகமும் அந்தச் சாலையில் இருந்தது. முதல் நாள் இரவுணவுக்குப் போய், நிரம்பி வழிந்த கூட்டத்தினால், McDயை நாட வேண்டியிருந்தது. பெரும்பாலும் வடநாட்டுத் தேனிலவுத் தம்பதிகளின் கூட்டம். பொதுவாக பாலி முழுக்கவே தென்னிந்தியர்களைக் காண்பது வெகு அரிதாக இருந்தது. வட இந்தியர்கள்தான் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். மறுநாள் சீக்கிரமே போனதில் பிரியாணியைக் கைப்பற்ற முடிந்தது. தோசை கேட்டதற்கு 'இங்கு தென்னிந்திய உணவுகள் கிடைக்காது' என்று சொல்லிவிட்டுப் போனார் ஒரு இந்தோனேசியச் சிப்பந்தி.

மாலை குட்டா கடற்கரையில் செலவிட்டோம். சற்று கூட்டம் அதிகம்தான். 2002ல் ஒரு முறை இந்தக் கடற்கரையிலும், 2005ல் ஒரு முறை 'Kuta square' எனப்படும் வணிக வீதியிலும் தீவிரவாத குண்டுவெடிப்புத்தாக்குதல் நடந்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் அதிகம் குறி வைக்கப் படுகின்றது போலும். இந்த வருட(2016) ஆரம்பத்தில் ஜகார்த்தாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், பாலித்தீவுக்குச் செல்வோர் அதிக எச்சரிக்கையுடனே நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் சென்றிருந்த சமயம் கிறிஸ்துமஸை ஒட்டிய நேரம் என்பதால் குட்டா நகர் முழுவதும் கிறிஸ்துமஸ் மரங்களும், வண்ண விளக்குகளும், சிறப்பு இசை, நடன நிகழ்ச்சிகளுமாகக் களை கட்டியது. டிசம்பர் மாதம்தான் பாலியில் சுற்றுலாவிற்கான 'peak time'.

மறுநாள், விடுதிப் பணியாளர்களின் இன்முக வழியனுப்பல்களுடன் கிளம்பி வரும்போது ஒன்று தோன்றிக் கொண்டே இருந்தது. பாலியைப் போலவே வெகு அழகான கடற்கரைகளும், மலைப் பகுதிகளும், பாலி கோவில்களை விடப் பற்பல மடங்கு அற்புத வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களும் கொண்ட நமது தென் தமிழகத்தின் சுற்றுலா எத்துணை மேம்படுத்தப்படலாம்?!

உண்மையில் தமிழகத்திலிருந்து செல்வதனாலோ என்னவோ, பாலியின் கோவில்களை அமைவிடம், மாறுபட்ட நிலம், பண்பாடு, சிற்பங்கள் என்பதால் மட்டுமே ரசிக்க முடிந்தது.

கடலை ஒட்டிய டென்பசார் விமான நிலையத்திலிருந்து கிளம்பி,பாலியின் இனிய நினைவுகளுடன் பயணத்தை நிறைவு செய்தாயிற்று.

நன்றி:
பாலித்தீவில் இந்துத் தொன்மங்களைத் தேடி - கானாபிரபா
கூகிளாண்டவர்





2016-02-21

நீங்க என்ன ஆளுக?

பெயர் கேட்டும்
ஊர் விசாரித்தும்
குலசாமி வினவியும்
தெருப் பெயரிலும்
திருமண முறைகளிலும்
மீசை அளவிலும்
காதணி வகையிலும்
பாட்டன், பாட்டியை
விளித்தல் சொற்களிலும்
நிறத்திலும் 
முகத்திலும்
உணவிலும்
மொழியிலும்
குடைந்து குடைந்து
ஊகிக்கப் படுதல் பழக்கம்தான்...
அனைத்தையும் புறந்தள்ளி
முன்நகரும் இப்பொழுதில்,
கள்ளம் குடியேறாப்
பள்ளிப் பிள்ளைகள் கைகளில்
தன் நிறங்காட்டி
கோரப்பல்லிளிக்கையில்
திகைக்கச் செய்துதான் விடுகிறது
நாசமாய்ப்போன சாதி