2020-05-03

முனி


'இந்தா பக்கத்துலதான்... பேட்டக்காரர் காட்டத் தாண்டிட்டா நம்ம காடுதான். மொதலாளி அங்கனதான் இருப்பாக... வெரசா போயிரலாம்' தனக்குத்தானே சொல்லிக்கொண்டே மாரியம்மா வேகநடை போட்டாள்.

தலையில் விறகுக்கட்டு வேறு கனத்தது. இறுக்கிக் கட்டிய துணிக்கு மேலே விரல் நுனி விண்விண்ணென்று தெறித்தது. வத்தலுக்குக் காயப்போட்ட சீனியவரைக்காய் போன்ற தோற்றம். கன்னத்தில் துருத்திய எலும்புகளுக்குள்ளே புதைந்து போயிருந்த கண்கள் கலங்கி வழிந்தன.

'தாயீ முத்தாளம்மா கை விட்றாத ஆத்தா, உன் பேரக் காப்பாத்தவாச்சும் என்னையப் பெளைக்க வச்சிரு...' நடையில் வேகம் கூட்டி மெதுவாக ஓட முயன்றாள்.

போன வெள்ளிக்கிழமை ஆரம்பித்தது எல்லாம்.  வீட்டு வாசலில் வேப்பமுத்து காய வைத்துக் கொண்டிருந்த வேளையில், கருத்த முட்டியைத் தேய்த்துக் கொண்டு, வீட்டு நிலைப்படியையும் தாண்டித் தவழ்ந்து வந்து சேலையைப் பிடித்திழுத்த பேரப்பயலை முகமெல்லாம் பூரிப்பாக அள்ளித்தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தாள் மாரியம்மா. 'லேய் தங்கக்கட்டி,.. ஒறங்கிட்டுல்லடா இருந்த? கண்ணு முழிக்கவும் என்னத்தேடி வந்துருச்சே எஞ்சாமீ… நாளக்கி எனக்கு நெய்ப்பந்தம் பிடிக்க நீதான கண்ணு…’

பேசிக்கொண்டே வேர்வையில் நசநசத்திருந்த பேரனின் தலையைக் கோதி விட்டாள். ‘ராசாவுக்கு முடியெல்லாம் புசுபுசுன்னு வளந்து போச்சேஏஏ... ஏழாம் மாசம் போயி முத்தாளம்மாளுக்கு முடி எறக்கிக் கெடா வெட்டணும்... ஆமாஆஆ… பொங்க வக்கணும்… ஒங்களுக்குப் புது சட்ட எடுக்கணும்… '

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மருமகள் வீட்டிற்குள் இருந்து ஆங்காரமாக ஓடி வந்தாள். வாசலில் நின்று அடிக்குரலில், ஆனால் சத்தமாக 'அதெல்லாமில்ல... மொத மொட்ட பாண்டி கோவிலுக்குத்தான் போடணும்... கெடாயும் அங்கதான் வெட்டணும்' என்றாள்.

மாரியம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை  'அதென்ன புதுசா? மொத மொட்ட 
கொலசாமிக்கிதான போடுறது? பேரன் முடியிறக்க என் ஆத்தாவுக்கு வெட்டணுமுன்னே கெடா வாங்கி வளத்துக்கிட்டிருக்கேன்... நீயி புதுசா ஆரம்பிக்கிற?' 

'எனக்குத் தெரியாது... நான் பாண்டி கோவிலுக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்... அங்கதான் முடியிறக்கணும். வேணுமின்னா புதுசா கெடா வாங்கி வெட்டிக்கிருவம்..'

மருமகள் பேசப்பேச ஆத்திரம் கூடியது மாரிக்கு. 'புதுசா கெடா வாங்குவாளாமில்ல... இதென்ன ஊர்ல இல்லாத பகுமானம்? எம்மகெனுக்கு இவளக் கட்டிட்டு வந்தனா இல்ல எம்மகெனக் கட்டிக் குடுத்திருக்கனா' மாரியம்மா கத்த, மருமகள் பதிலுக்கு கத்த, அக்கம் பக்கமெல்லாம் மாரியின் வீட்டுமுன் கூடி விட்டது. கொத்து வேலை முடித்துத் திரும்பி வந்த மாரியின் மகன் வீட்டின் முன்னால் கூட்டத்தைப் பார்த்து பதறிப் போய் வீட்டுக்குள் வரவும், அவன் வீட்டுக்காரிக்கு சாமி வரவும் சரியாக இருந்தது

கண்ணைப் பெரிதாக உருட்டி மருமகள் பலமாக உறுமியதில் மாரியம்மா திடுக்கிட்டுப் போய் நாலடி பின்னால் நகர்ந்தாள். மருமகள் 'தங்கு தங்'கென்று சுழன்று ஆடத் தொடங்கினாள்

 'என்னயவாடி எதுக்குற? யாருன்னு நெனச்ச? சாட்ட வீசி நடந்தேன்னா பாண்டி முனியாண்டி முன்ன நிக்க யாரு? எனக்கே கெடா இல்லங்குறயா? நான் யாருன்னு பாக்குறியா? வாரந்திரும்ப முன்ன காட்டவா?' வீறிட்ட கூச்சலில் மாரியும் மகனும் விக்கித்துப் போனார்கள்.

ஏதாவது கோவமென்றாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமைதியாகப் போய்விடுகிற பிள்ளை, ஒருத்தரைத் தாண்டி குரல் எழுப்பாத பிள்ளை. அந்தத் தொண்டைக்குள் இருந்து இப்படிச் சத்தம் வரும் என்று நினைத்துக் கூட இருக்கவில்லை. தாயின் சத்தத்தில் மாரியின் இடுப்பில் இருந்த பேரப்பயல் வீல்வீலென்று கத்திக் குவித்தான்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாலைந்து பேர்தான் ஓடி வந்து, மருமகளைப் பிடித்துத் தண்ணீர் தெளித்து, திருநீறு போட்டு மெல்ல அடக்கி சாமியை அனுப்பி வைத்தார்கள்

சாமியாடிய களைப்பில் அவள் அடித்துப் போட்டது போலத் தூங்க, பேரனை அணைத்துக் கொண்டு படுத்திருந்த மாரிக்கு இரவு முழுக்கத் தூக்கமே பிடிக்கவில்லை. சின்னப்பிள்ளையில், வெள்ளிக்கிழமைகளில் ஊர்க்கோடியில் மரத்தடியில் இருக்கும் முனியசாமி கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது முனிவேட்டைக் கதைதான் ஓடும்

'சரிய்ய்யா நடூ சாமத்துல வேட்டைக்குக் கெளம்புமாம் முனியப்பன். ஒரு கையில அருவாளும் மறு கையில சாட்டையுமாக் கெளம்புனா நடக்குற பாதையெல்லாம் முனி இடுப்புல கட்டுன மணி சத்தம் கேக்குமாம். போற பாதையெல்லாம் சுருட்டு வாசம் வீசும். காட்டுக் காவலுக்குப் போன செல்லையா, மணி சத்தத்தைக் கவனிக்காம முனியசாமி போற வழியில எதுக்கப் போய் நின்னுட்டான். அவன் கண் பார்வ மட்டத்துக்கு கணுக்கால்தான் தெரியிதாம். அப்பிடி வானத்துக்கும் பூமிக்கும் வளந்து நிக்கிதாம் முனியப்பன். ஒர்ர்ரே அடிதான். கண் இருட்டிக் கீழ கெடந்தவனை மறுநா கருக்கல்ல தோட்டத்துக்குப் போனவகதான் பாத்து வீட்ல சேத்தாக. அன்னிக்கு விழுந்த செல்லையா, கைகால் வராமயே போய்ச் சேந்துட்டாப்புலல்ல…'

PC: @ramesstudios

எல்லாக் கதையும் நினைவுக்கு வந்து மாரியை வெருட்டியது.

நம்ம ஊரு முனியாண்டியே கடுங்கோவக்காரருன்னுவாக... பாண்டி முனி ரொம்பத் துடியான சாமி வேற…’ நினைத்து நினைத்து நொந்து போனாள். எல்லா பயத்தையும் திகைப்பையும் மீறி முத்தாளம்மாதான் முன்னே நின்றாள்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் ஏதோ கெடா வெட்டுக்குப்போனபோது பார்த்த பாண்டிகோவில் முனியை மனதில் நிறுத்தினாள் மாரியம்மா.

'முனியப்பா... ஒம்பிள்ளைகள கோவிக்காத... ஏம் வீட்டு ஆத்தாவுக்கு மொத மொட்ட போடாம விடுறது நாயமா? அவளத்தாண்டி வரமுடியுமா? பேரனுக்கு அடுத்த மொட்ட ஒன் கோவிலிலேயே போடுரனப்பா... கடன ஒடன வாங்கியாச்சும் கெடாவும் நேந்து விடுறேன். மனசு வையப்பா' என்று சன்னமான குரலில் மன்றாடினாள். அதைத் தவிர வேறொரு திக்குத்திசையும் தெரியவில்லை.

மறுநாள் விடியும் முன் பூப்பறிக்கப் போகையில் நாலாவது வீட்டு மருதாயி சொன்னதில் மாரியின் மனசு கொஞ்சம் தெம்பானது. 'அட மசங்காதக்கா ... அவ முடிவுக்கு ஒன்ன இழுக்கணும்னு சாமி வராமயே சும்மா ஆட்டம் காட்டியிருக்கா... பயந்து போயி அவ நெனப்புப்படியே நடத்துவன்னு செஞ்சாப்புலதான் தெரியுது'

இருக்கும் இருக்கும்... மனசு மாறுவேன்னு நெனச்சிருப்பா... 

மருமகள் பேரனைத் தூக்கிக் கொண்டு அம்மா ஊருக்குப் போய் விட்டிருந்தாள். மாரி தினப்படி வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாலும், கிடாயைப் பார்க்கும்போதெல்லாம் போட்டு உறுத்தியது.

இன்றைக்கு மறு வார வெள்ளிக்கிழமை. மருமகளையும் பேரனையும் கூட்டி வருவதாக மகன் போயிருந்தான். தரை தெரியாத இருட்டில் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே மாரிக்கு எந்தச் சுரத்தும் இல்லை.

‘வயசுலயே கட்டுனவனைப் பறிகொடுத்து, தனி ஆளா கருக்கலில பூப்பறிக்க ஓடி, உச்சி வெய்யில்ல காட்டு வேலையில கருகி, பொழுசாய வீடுகளுக்குத் தண்ணிக்குடம் சுமந்து… கொஞ்சப்பாடா? இருந்த ஒத்தைக்கொரு மகனை ஆளாக்கி, அவன் மகனுக்கொரு விசேசம் வைக்கணுமின்னு பாக்கையில, ஒசந்து நிக்கிற சாமியெல்லாம் மல்லுக்கு நின்னா தவங்கி தவுதாயப்பட்டுக் கெடக்குற நாம எங்க போறது….’ தோட்டத்துக்குப் போகும் வழியெல்லாம் தனக்குத் தானே புலம்பிக்கொண்டாள்.

வெளிச்சம் வரும் முன்னரே பூப்பறிப்பு முடிந்து ஆட்களெல்லாம் போனபின் சாக்கில் பூவை மூடை கட்டி ஏத்திவிட்டு முதலாளியும் கிளம்ப, தோட்டத்து அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள் மாரியம்மா. தரை முழுக்க சாணியும் மஞ்சளும் பூசி மெழுகி விட்டு களைக்கொத்திகளைக் கழுவி வந்தாள்.

அறையின் மூலையில் அடுக்கி வைத்திருந்த வாளியில் அவற்றைக் கையைத் தாழ்த்திப் போட்ட மறுகணம் உள்ளிருந்து சீறி வந்த நல்ல பாம்பொன்று சரியாக அவள் நடு விரலை வேகங்கொண்டு பிடுங்கியது. என்ன ஏதென்று மாரி சுதாரிப்பதற்குள் விரல் நுனியில் கொஞ்சச் சதையைக் காணோம்.

அரண்டு போனாள். மறு கணம் சட்டென ஒரு துணியை எடுத்து கடிவாய்க்குக்கீழே இறுக்கிக் கட்டிவிட்டு, அடுப்பெரிக்க வெட்டி வைத்திருந்த விறகுக்கட்டையையும் போட்டுவிட்டுப் போக மனதில்லாமல் தூக்கிச் சும்மாடு மேல் வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஊர் நோக்கிப் போகத் தொடங்கினாள்.

போகும் பாதையெல்லாம் இரண்டு பக்கமும் தோட்டங்களில் கண்களை ஓட்டினாள். ஒருவரும் தட்டுப்படவில்லை. வெயிலேறிய நேரம் யாரும் இருக்கத் தோதில்லை. சனம் முழுக்கக் காட்டு வேலைகளில் இருக்கும்.

இந்தா வந்துரும் காடு... இந்தத் தோட்டம் தாண்டினா பேட்டக்காரர் காடுதான்… அங்கனயே ஆளுக இருக்கும்… கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. பருத்தி பூத்த காடு கொஞ்சம் தெம்பூட்டியது. தூரமாக முதலாளியின் தலப்பாக்கட்டு தெரிந்தது. வேகநடையிலேயே மாரி கூவினாள். 'சாமீய்ய்ய்...சாமீய்ய்ய்ய்… பூச்சி கடிச்சுப்பிடுச்சி... ஓடியாங்க... வெரசா வாங்க'

கூக்குரல் கேட்டு முதலாளியும் காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் போட்டது போட்டபடி ஓடி வந்தனர். மாரி கையைத் தூக்கிக் காட்டிக்கொண்டே விறகுக்கட்டோடு சொத்தென்று கீழே விழுந்தாள். 'மாரீய்ய்... பூச்சி கடிச்சிருச்சின்ற... கோட்டிக்காரி கணக்கா வெறகுக் கட்டத் தூக்கிட்டு ஓடியாரையே... கடிச்சது எதுன்னு பாத்தையா? நல்லதா?' என்று பதறிக் கொண்டு கேட்டவர்களுக்கு 'நல்லதுதேன்' என்று தேய்ந்து போன குரலில்தான் பதில் சொல்ல முடிந்தது.

'அடே சம்பா, வண்டிய எடுத்திட்டு வரேன்... நீயி மாரியைப் பிடிச்சிக்கிட்டுப் பின்னால ஒக்காரு... நேரா பெரியாஸ்பத்திரிக்கிப் போயிருவோம்... வெசக்கடி மருந்து வேறெங்கயும் கெடைக்காது...' சொல்லிக்கொண்டே முதலாளி டிவிஎஸ் 50யை எடுக்க ஓடினார்.

'வாரந்திரும்ப முன்ன அவ சொன்னா மாதிரியே ஆகிப்போச்சே... இப்பிடியும் கண்டமா? இவளும் கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம். பாண்டி முனி கோவம் லேசுப்பட்டதா! முனியப்பா… இவளக் காப்பாத்தி விடப்பா… ஒன் விருப்பத்துக்கே எல்லாம் நடக்கும்' சுத்தியிருந்த குரல்கள் வியப்பும் கவலையுமாக ஒலித்தன.

மாரியைத் தூக்கி உட்கார வைத்து வண்டி கிளம்பியது. பாதிக் கண்கள் திறந்த நிலையில் மாரியின் காதுகளில் மணிச்சத்தம் தேய்ந்து ஒலித்தது. கண்கள் முழுக்கக் கிறங்கும் முன் வானத்தை முட்டி ஒரு உருவம் கையில் சாட்டை ஏந்தியபடி
மங்கலாகத் தெரிந்தது.

மங்கிய நினைவில் மாரியம்மா பாண்டி கோவில் முனீஸ்வரன் சிலை முன் கைகூப்பி கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாள். மேனி முழுக்க மாலைகளால் மூடப்பட்டு, அகலமாக விரித்து உருட்டி விழித்த வெள்ளிக் கண்மலரின் பின்னால் மூடிய விழிகளோடு, சடாமுடி கொண்டு சம்மணமிட்டு, கைகளைத் தன் மடியில் கோர்த்து, அமைதியாக தவத்தில் ஆழ்ந்திருந்தார் பாண்டி முனி.