2015-02-19

விடியலுக்கான தேடல்

'பெண்ணியம்' - ஈயம், பித்தளை எனப் பெருமளவில் கிண்டலடிக்கப்படும் வாசகம். இருப்பினும் விடாமல் பெண்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்கும் விஷயம். பெண்களுக்குச் சம உரிமை என்பது எல்லாம் பெண்ணியத்தின் மேல் பூச்சுதான். அடிப்படையே வேறு. இந்த சமுதாயத்தில் பெண்ணாகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து
வருவதன் பிரச்சனைகள் எல்லாம் நிச்சயம் எளிதில் விளக்கி விடக் கூடியவை அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களின் வலி அவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும்
என்பதைப் போலத்தான் இதுவும். எந்தத் தளத்திலும் சாதிய அடக்குமுறை கிண்டலடிக்கப் படுவதில்லை. சொல்லப் போனால் பெண்களுக்கு நடக்கும் அவலங்கள்
எல்லா சாதிகளிலும், எல்லா மதங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்களின் மீதான கொடுமைகள் அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதிருந்தே தொடங்கி விடுகிறது. தான் ஒரு பெண் எனக் கூட விவரம் புரியாத குழந்தைகளிடம் நடக்கும் பாலியல் வன்முறைகள் கொடூரமானவை. இது யாருக்கோ எங்கோ நடக்கும் பிரச்சனை அல்ல. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது. மூன்றில் ஒரு குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகிறது. இதில் ஆண் குழந்தைகளும் அடக்கம் என்றாலும் பெண் குழந்தைகளே மிக அதிகம். பூப்போல நீங்கள் வளர்த்து வரும் குழந்தையை காமப் பார்வையுடன் பார்ப்பவர்கள் நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்காத நபர்களாகக் கூட இருக்கலாம். இந்தக் கொடுமை ஒரு குழந்தையின் இரண்டு வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது. பாலியல் தொல்லைகளால் ஒரு குழந்தை ஆளாகும் மன பாதிப்பை எத்தனை முயன்றாலும் விளக்க முடியாது. பெரியவர்களான பின்னும் அது தொடர்வதுதான் கொடுமை. 'பெண்களும்தான் எல்லா வேலைக்கும் போறாங்க' என்ற வாதத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் பேருந்துகளிலும், மற்ற பொது இடங்களிலும் படும் இன்னல்களை சற்று விசாரித்துப் பாருங்கள். எதிர்த்து நிற்கலாம் என்றாலும் சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்கள் கூட சும்மா வேடிக்கைதான் பார்ப்பார்கள். எத்தனை படித்திருந்தாலும் இது போன்ற விஷயங்களின் பாதிப்பிலிருந்து வெளிவருவது என்பது மிகவும் கடினம்.

உடல் ரீதியான தொல்லைகள் ஒருபுறம் என்றால் மனரீதியான கொடுமைகள் அதைவிடக் குவிந்து கிடக்கும். ஆணும் பெண்ணும் நல்ல தோழர்களாகப் பழகும் நிலை வந்தாலும் கூட, பெண்களின் மீது ஏதாவது கடுப்பு என்றால் அதை அவர்கள் நடத்தையோடு ஒப்பிட்டுக் கேவலப்படுத்துவதுதான் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அலுவலகத்தில் பிடிக்காத ஆண் மேலே வந்தால் 'சொம்பு அடிக்கிறான்' என்பதும், அதே இடத்தில் ஒரு பெண் என்றால் 'அவ சிரிச்சே காரியம் சாதிப்பா' என்பதும்தான் பொதுஜன மனநிலையாக உள்ளது. நடத்தையைப் பற்றிப் பேசினால் அதற்கு மேல் அந்தப் பெண் எதிர்த்துப் பேச மாட்டள் என்பது ஒரு காரணம். மெத்தப் படித்த
மேதாவிகள் நிறைந்திருக்கும் இணையதளத்தில்தான் இந்த மனநிலை ஓங்கி நிற்கிறது என்பது அவலம்.

குடும்ப அமைப்பிலும் பெண்களைப் புரிதல் என்பது மிகச்சிறிய அளவில்தான் முன்னேறியுள்ளது. இன்னும் வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தையைப் பார்த்துக் கொள்ளுதல் என ரிலே ரேஸ்தான். வீட்டிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையைப் புரிந்து கொள்தல் என்பதை எதிர்பார்க்கவே முடியாது. 'எல்லாரும்தான பண்றாங்க...இதக் கூட பண்ணலேன்னா என்ன பொண்ணு' என்ற சில வார்த்தைகள் போதும் இதைத் தட்டிக் கழிப்பதற்கு. எல்லாவற்றுக்கும் மேல் நாம் அம்மாக்களுக்குக் கொடுத்திருக்கிறோமே தியாகிப்பட்டம். அது போல ஒரு ஏமாற்று வேலை எதுவுமே கிடையாது. அம்மாவின் கஷ்டங்களை எந்த வகையிலும் குறைப்பதற்கோ, குறைந்த பட்சம் புரிந்து கொள்வதற்கோ கூட முயற்சிக்காமல், 'அம்மா என்றால் அன்பு' என ஏதாவது சொல்லி உருகி விட்டுக் கடந்து விடுவது. அதிகபட்சம் அம்மாவின் சுமையைக் குறைக்க மகன் எடுக்கும் நடவடிக்கை, அவள் பாரத்தை எல்லாம் மனைவியின் மீது சுமத்துவதுதான்.

'ஆண்கள் எங்கயாவது சண்டை போடுறோமா? மாமியார் மருமகள் சண்டைதான் ஓய மாட்டேன்னுது' என்னும் அறிவு ஜீவிகளுக்கு....ஒரே ஒரு வாரம் உங்கள்
மாமனாருடன் வீட்டிற்குள்ளேயே ஒரு வேலையைப் பகிர்ந்து கொண்டு இருந்து பாருங்கள் தெரியும். எல்லா இடத்திலும் அடங்கிப் போகும் பெண்மை எங்கு தனது அதிகாரத்தைக் காட்ட முடியுமோ, அங்கு காட்டத் தொடங்குகிறது. பிறந்த வீட்டு சொந்தங்களை விட்டு புது சூழலில் எல்லோரையும் அனுசரித்து, தனது விருப்பங்களை எல்லாம் விட்டுக் கொடுத்து வாழத்தொடங்கும் பெண்ணின் பொறுமை ஒரு அளவுக்கு மேல் வெடிக்க ஆரம்பிக்கிறது.

கொடுமைகள் குறைந்திருப்பது என்பது ஒன்றுமே இல்லை என்பதாகிவிடாது. பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அவ்வப்போது வெளியில் கூட்டிச் செல்வது,
இவற்றை எல்லாம் தாண்டி, பெண்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருங்கள். சில நேரங்களில் தவறாக நடந்து கொண்டால் புரிய வையுங்கள்.
அன்புள்ளம் கொண்டவர்களுக்காக ஈகோவை விட்டுக் கொடுப்பது தவறே இல்லை. பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிந்தவரை எதிர்ப்பு தெரிவியுங்கள். வெள்ளைக்காலரின் மதிப்பு இதனால் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது. பெண்கள் மீதான தவறான வார்த்தைப் பிரயோகங்களை முற்றிலும் தவிருங்கள். தவறானவர்களாகவே இருந்தாலும் கூட...

உங்கள் பெண் குழந்தைகளுக்கு தைரியம் கற்றுக் கொடுங்கள். எந்தக் குழந்தையாய் இருந்தாலும் Good touch, bad touch சொல்லிக் கொடுங்கள். ஆண் குழந்தைகளுக்கு, பெண்களைப் புரிந்து கொள்ளவும், வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் வளரும் சமுதாயமாவது 'பெண்ணியம்' என்ற போர்க்கொடி தூக்கத் தேவையில்லாத சமுதாயமாக விடியட்டும்.






No comments: