2018-07-12

தொப்பி தோசை

கேத வீட்டிலிருந்து உடன் வந்த கசகசப்பு, மூன்று மணி வெய்யிலில் பேருந்துக்குக் காத்திருப்பதன் எரிச்சலோடு சேர்ந்து முகத்தில் கடுகடுப்பைக் கொண்டு வந்தது. செத்துப் போகும் புண்ணியவான்கள் பங்குனி, சித்திரையில் சாகாவிட்டால்தான் என்ன?!
‘உஸ்ஸ்ஸென்று பெருமூச்சு விட்டு கொஞ்சம் ஆறுதல்படுத்திக் கொண்ட பூரணி லேசாகத் திரும்ப, பக்கத்தில் நின்றிருந்த ஒரு கிராமத்துக் கிழவி, ‘வெய்யிலு சாஸ்திதான், பொட்டு மழை இல்ல…சோளம் போட்டு எல்லாம் கருகிப் போச்சு என்று பூரணியிடமோ தனியாகவோ புலம்பினாள். கரிசக் காட்டுச் சம்சாரியாக இருந்து கொண்டு இந்தப் புலம்பல் இல்லாவிட்டால்தான் விந்தை.
பசியும் சோர்வும் சேர்ந்து இருட்டிக் கொண்டு வந்தது. வேளை கெட்ட வேளையில் எங்கே போய்ச் சாப்பிட? எதிர் வரிசைக் கடைகளை மெல்ல நோட்டம் விட்டாள் பூரணி. பத்தடி தூரத்தில் மூன்று பரோட்டாக் கடைகள். அந்த வெய்யிலிலும் பொன்னிற பரோட்டாக்கள் பொரிந்து கொண்டிருந்தன. மாநில உணவல்லவா!  
பூரணிக்கு நேர் எதிரே ஒரு டீக்கடை. ஒரு கையில் புகை அல்லது வடையும், மறு கையில் தேநீரும் கொண்டு குழுமி நிற்க ஆண்களுக்கு என்றே படைக்கப்பட்ட இடம். அவசரப் பசிக்குக் கூட ஒரு தேநீர்க் கடையிலோ உணவகத்திலோ தனியாகப் போய் ஒரு பெண் உணவருந்துதல் என்பது நம் ஊரில் பெரிய புரட்சி. சிற்றூராக இருந்து விட்டால் யுகப் புரட்சி. பிள்ளைகளுடனோ, உடன் ஓரிரு பெண்களுடனோ போனால் லேசான மன்னிப்புக் கிடைக்கும்.
வலது கோடியில் ஒரு ‘ஆரிய பவனம் தென்பட்டது. கொஞ்சம் தயங்கி, பின் வேக நடை போடத் துவங்கினாள் பூரணி. நல்லவேளையாக ‘உங்க வீட்டம்மாவ ஹோட்டல்ல பாத்தேன் எனும் ஆட்கள் யாரும் தெரியாத ஊர். அப்படியே யார் கண்ணிலாவது தட்டுப்பட்டாலும் பரவாயில்லை. பசியோடும் சிறு குறுகுறுப்போடும் உணவகத்தில் நுழைந்த பூரணி, ஒரு மூலையில் இருந்த மேசையில் உட்கார்ந்து கொண்டாள். அசட்டையாக வந்த சிப்பந்தி, ‘டிபன்தாம்மா இருக்குஎன உணவுப் பட்டியலை நீட்டினார்.
பட்டியலுக்குக் கண் போகும் முன்னரே, சுவரில் தொங்க விடப் பட்டிருந்த உணவு வகைகளின் படங்கள் கவனத்தை ஈர்த்தன. சட்டென்று ஒரு லேசான திடுக்கிடலைத் தந்தது, பூரி செட்டிற்கு அடுத்திருந்த படம். பொன்முறுவலாக வார்க்கப்பட்டு, தொப்பி போல நேர்த்தியாகச் சுருட்டப்பட்டு, தலையில் உள்ளங்கை அகல வட்டத் தோசை ஒன்று கிரீடம் வைத்தாற் போல செருகி வைக்கப்பட்ட தொப்பி தோசை.
பெரும்பாலான தென் தமிழ்க் குடும்பங்களைப் போலவே, பூரணியின் குடும்பத்திற்கும் திருச்செந்தூர்தான் அதிகபட்சமாகச் சுற்றுலா செல்ல வாய்க்கப்பட்ட இடம். கூடுதல் நற்பேறு கிடைத்தோருக்கு குற்றாலக் குளியல் கிட்டும். பூரணி அப்பாவிடம் அதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது. பூரணி பதின்மத்தின் ஆரம்பத்தில் இருந்தபோது திருச்செந்தூரிலிருந்து ஒரு திரும்புதல் பயணம்.
கோவில்பட்டியில் ஒரு உணவகத்தில் இரவு உணவு. தூக்கக் கலக்கமெல்லாம் ஓடி ஒளிய, பூரணியும் அவள் அண்ணனும் ஆவலாக இலை முன்னே அமர்ந்திருந்தனர். அம்மா சலிப்புடன் தம்பியைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கை கழுவி விட்டு வந்த அப்பா ஒரு நொடியும் சிந்திக்காமல், மேசையில் அமர்ந்துகொண்டே ‘அண்ணாச்சி, ரெண்டு பொங்கலும் ரெண்டு செட் பூரியும் சொல்லுங்க என்று உரக்கக் கத்தினார். பூரணிக்கு எப்படியோ போனது. பூரியைத்தவிர வேறு எதுவுமே  உணவங்களில் அவள் சாப்பிட்டிருக்கவில்லை. அண்ணனுக்கு மட்டும் திருவிழா சமயம் நண்பர்களுடன் போய் பரோட்டா சாப்பிட்டு வர அனுமதி உண்டு.
பூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே பக்கத்து மேசையில் இருந்த சிறுவனுக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்ட தொப்பி தோசை பூரணியை முழுதாக ஈர்த்தது. அப்படி ஒரு தோசை வடிவை அவள் பார்ப்பது அதுவே முதல் முறை. பூரியை அனிச்சையாகத் தின்று கொண்டு, ஓரக்கண்ணால் பக்கத்து மேசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். இயந்திரமாகச் சாப்பிட்டு முடித்த அப்பா அண்ணனைக் கூப்பிட்டுக் கொண்டு வாழைப்பழம் வாங்கப் போக, அம்மா தம்பியைத் தூக்கிக் கொண்டு வெளியே காத்தாடப் போனாள்.

Image result for cone dosa
(PC: Google)
அந்த நேரம் பார்த்து சிப்பந்தி வந்து ‘பாப்பா வேற என்னமும் வேணுமா என்று கேட்க, பூரணி மொத்த ஆவலையும் கொட்டி, பக்கத்து மேசையைக் காட்டி அந்த மாதிரியே தோசை வேணும் என்று கேட்டுக் காத்திருந்தாள். தொப்பி தோசை அவள் முன் வந்து வைக்கப்படவும், அப்பா எதிர் நாற்காலியில் வந்து உட்காரவும் சரியாக இருந்தது. அப்போதும் அவள் கண்கள் முழுக்க தோசையில்தான் இருந்தன. முகம் பூரிப்பில் மலர்ந்திருக்க, தன்னைச் சுட்டெரிப்பது போல முறைத்துக் கொண்டிருந்த அப்பாவின் கண்களை அவள் சந்திக்கவே இல்லை.
தோசையை விண்டு இரண்டு வாய் வைத்ததுமே, முதுகில் படார் என்று ஒரு அடி விழுந்தது. தம்பியின் நசநச அழுகையை மீறி அம்மா பல்லைக் கடித்துக் கொண்டு சீறினாள். ‘ஆம்பளப் பய, சொன்னதைத் தின்னுட்டு எந்திரிச்சிப் போய்ட்டான், நீ என்னடான்னா நீயா தோசை சொல்லியிருக்க….எவ்வளவு தெனாவெட்டு? கண்ணெல்லாம் நிறைய பூரணி அப்பாவைப் பார்த்தாள். பணம் கட்டிய ரசீதைக் கையில் வைத்துக் கொண்டு மொத்த வெறுப்பையும் முகத்தில் திரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அழுகை தொண்டையில் விக்க, பூரணி மெல்ல எழுந்தாள். ‘ம்? என்று அப்பா கண்ணுயர்த்த, அரண்டு போய் மறுபடி அமர்ந்து விக்கியவாறே தோசையை விழுங்கி எழுந்தாள்.
இளநிலைக் கல்லூரி முடித்த உடனே கட்டிக் கொடுக்கப்பட, அந்த வயதுக்கே உரிய அப்பாவித்தனத்துடன், இந்தக் கதையைக் கணவனிடம் சொல்லி இருந்தாள். அந்தச் சம்பவத்திலிருந்தே பூரணிக்கு உணவு வகைகளின் மீதான விருப்பம் மிகவுமே அதிகமாகி இருந்தது. புத்தகங்களில் வாசிப்பது, தொலைக்காட்சியில் பார்ப்பது, காதில் விழும் தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டே, குடும்பத்தில், அக்கம்பக்கத்தில் பேசுகையில் எல்லாம், ‘மதுரைல ஜெயவிலாஸ் க்ளப்ல வான்கோழி பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா? அட்டகாசமா இருக்குமாம், ‘சிவகாசி போனா டீலக்ஸ்ல பரோட்டா சாப்பிட்டு, மால்குடில டீ குடிங்க, ‘ஸ்ரீவில்லிபுத்தூர்ல சாமி கும்பிட்டு முடிச்சு, கோவில் பக்கத்துலயே கதிரவன்ல நெய் சப்பாத்தியும் சுசியமும் திங்கணும் என்று அனைத்தையும் சுவைத்தவள் போல ஆர்வமாகச் சொல்வாள்.
ஒரு விழாவின் பின், வந்திருந்த விருந்தினர்களோடு கூடத்தில் அமர்ந்து திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில், கதாநாயகி முன் தொப்பி தோசை கொண்டு வந்து வைக்கப்பட்டது. சட்டென்று உரக்கச் சிரித்த பூரணியின் கணவன், ‘பூரணி, இந்தத் தோசைக்குத்தான மாமாகிட்ட நீ அடி வாங்கின என்று எல்லோரும் கேட்கும்படி சொல்லி, அதன் பின்புலக் கதையையும் விளக்க ஆரம்பித்தான். ‘மதினி சின்னப் பிள்ளைல இருந்தே எந்த ஹோட்டல்ல என்ன நல்லா இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க என்ற கேலியும் அதைத் தொடர்ந்த ‘கொல்லென்ற எல்லாரது சிரிப்போடும் போனது பூரணியின் உணவு குறித்த ஆர்வப் பேச்சு.
இன்றைய நாளைப் போல இப்படித் தனியே வந்து உணவகத்தில் சாப்பிட வாய்ப்புக் கிடைத்ததெல்லாம் பெரும் விந்தை. அதை நல்கிய துக்க வீட்டுக் கதாநாயகர் வைகுண்டம் ஏக மனதில் வாழ்த்திக் கொண்டாள் பூரணி. உணவுப்பட்டியலில் தொப்பி தோசையின் பெயரைத் தாண்ட மறுத்தன கண்கள்.
இப்போது ஒரு தொப்பி தோசை வரவழைத்துச் சாப்பிட்டால், வைராக்கியங்கள் ஏதும் இல்லாது போன, ஒரு சப்பென்ற முடிவாகி விடாதா என்று ஒரு நிமிடம் தீவிரமாகவே கவலை கொண்டாள். அடுத்த நிமிடம் உதடுகள் விரிய புன்னகையோடு, ‘ஆனால் ஆகட்டுமே என்று நினைத்துக் கொண்டு சிப்பந்தியை அழைத்தாள். தொப்பி தோசை வரவும் ஒருமுறை தலையில் எடுத்து வைத்துப் பார்த்து விட வேண்டும். கோமாளி போல இருப்போமோ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு மறுபடி பெரிதாகப் புன்னகைத்துக் கொண்டாள்.