2018-04-09

சப்பரம்


‘நீயும் ஒந்தங்கச்சியும் நொச்சுனீங்கன்னுதான காட்டை வித்தாரு. இப்ப அரும்பாடு படுற தோட்டத்தையும் விய்யின்னா எப்பிடிய்யா? ஒங்க அய்யா சம்மதிப்பாரா?’

‘காட்டை வித்து காக்காசு கையில நின்னுச்சா? உன் மகளுக்குப் பங்கு, கடனக் கட்டுனதுன்னு போக மிஞ்சுனதையும் இந்த தோட்டம் தின்னுட்டுப் போயிரும் போல’
தோட்டத்திலிருந்து திரும்பி, அங்கணத்தில் கை கழுவிக் கொண்டிருந்த அழகர்சாமிக்கு, அடுப்படியில் கேசவன் அவன் அம்மாவோடு சத்தம் பிடித்துக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. திண்ணையிலேயே துண்டை உதறி உட்கார்ந்தார்.
காட்டை விற்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு திருவிழாவும் கடந்து போனது. தேர்த்திருவிழாவின்போது கை வலிக்க வலிக்க கடலையும் பருத்தியும் தேர் மீது சூறை போட்ட நாட்களெல்லாம் கனவென்று போயின.
‘அவருக்கு நேர் மூத்தவரு, பிள்ளைக கேட்டதும் வித்துக் குடுத்தரா இல்லையா? இவருதான் வீம்பு பிடிச்சு இன்னும் தோட்டத்தைக் கட்டி அழுகுறாரு’
‘கொஞ்சம் பொறுடா, அய்யாட்ட பதமாப் பேசுவோம்’
‘இன்னுமெல்லாம் என்னால மண்ணைக் கிண்டிக்கிட்டிருக்க முடியாது. ஊர்ல ஒருத்தன் இல்ல…எல்லாம் கெளம்பி துபாய், மஸ்கட்டுன்னு போய்ட்டானுக. ரவியண்ணண்ட்ட சொல்லி வச்சிருக்கேன். ஏஜண்ட்டுக்கு நாலு லச்சம் கட்டணும். நானும் வெளிநாடு போறேன்’
சொல்லிக் கொண்டே உரச்சாக்குடன் கோபமாக வெளியில் வந்தவன், திண்ணையிலிருந்த அய்யாவைப் பார்த்து சட்டென நின்றான். அழகர்சாமி குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தார். கேசவன் தயக்கத்துடனே டிவிஎஸ் வண்டியில் ஏறிக் கிளம்பினான்.
பின்னாலேயே வந்த அவன் அம்மாவும் அவரைப் பார்த்துத் தயங்கி, பின் தேய்ந்த ஒலியில் பேசினாள்
‘அவஞ்சொல்றதும் சரிதான! மருமக நகை பத்து பவனும் பேங்குல கெடக்கு. பேறுகாலம் முடிஞ்சு அவ வர முன்ன ஒத்தச் சங்கிலியவாச்சும் திருப்பணும்’
அழகர்சாமி ஒன்றும் பேசவில்லை. மெதுவாக எழுந்து, செருப்பைப் போடக் கூட தோன்றாமல், ‘இந்தா வந்துர்றேன்’ என்றபடி நடக்க ஆரம்பித்தார்.
‘சாப்பிட்டுப் போறது…’ என்ற மனைவியின் சொற்கள் அவரைச் சென்றடையவே இல்லை.
கால்கள் தானாக தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தன. ஊரைக் கடந்ததும், விற்று அழித்த காடுகள் வழி விட்டன. சில வருடங்களுக்கு முன்பு மல்லிகைப் பூந்தோட்டங்களாக மணந்த ஊர். அழகர்சாமி சிறுவனாக இருக்கும்போது, அருப்புக்கோட்டையிலிருந்து மாட்டு வண்டியில் வந்தால், ரயில் பாதை தாண்டியதில் இருந்து மல்லிகை மணக்க ஆரம்பிக்கும். பாலையம்பட்டி தொடும் வரை பூந்தோட்டங்கள்தான். மதுரை மல்லி என்பதே எங்க ஊர் பூதான் என்று பெருமை பேசிக் கொள்ளும் ஊர். எல்லாருடைய தோட்டங்களிலும் இருந்து வந்து குவியும் பூக்களால், திருவிழா மண்டகப்படியின்போது பெருமாள் பூமாலைகளில் முங்கி, பூப்பல்லக்கில் ஒய்யாரமாக அசைந்து அசைந்து வருவார். இப்போதெல்லாம் பெருமாளுக்கு பல்லக்கு நிறைய வேண்டுமானால், வெளியிலிருந்துதான் பூ வர வேண்டும்.

பாலையம்பட்டியை அடுத்த யூனியன் ஆபீஸ் வட்டாரம் விரிவடைந்து, நிலத்தின் விலை கூடக் கூட ஒவ்வொரு தோட்டமாக விழுங்கி வளர்ந்தது. விளைச்சலுக்கும் செலவுக்கும் கட்டுபடியாகமலும், கூலிக்கு ஆள் கிடைக்காமலும் திண்டாடிய தோட்டக்காரர்கள் வரிசையாக தோட்டங்களை விற்க, அழகர்சாமியும் முக்கு வீட்டுக்காரரும் மட்டுமே வீம்பாக விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அண்ணன் தோட்டத்தைக் கடந்து தன் தோட்டம் விரைந்தார். அண்ணன் இவரை விடப் பாட்டாளி. முழித்திருக்கும் நேரமெல்லாம் மண்ணைத்தான் கிண்டிக் கொண்டிருப்பார். தோட்டம்தான் அவர் சீவன். மஞ்சள் பெயிண்ட் அடித்த கற்கள் ஊன்றிய அவ்விடத்தை நிமிர்ந்து பார்க்கவும் மனசு கேட்கவில்லை. மிளகாய்ச்செடியும் கனகாம்பரமும் மழையில்லாமல் வதங்கிப் போய் நிற்பதைப் பார்த்தாலே எந்த சம்சாரிக்கும் ‘கெதுக்’கென்று இருக்கும். சோறு இறங்காது. அப்படியிருக்க, நாளெல்லாம் அரும்பாடு பட்ட தன் தோட்டத்தை வீட்டு மனையாகப் பார்த்ததில் மனசொடிந்து விழுந்த மூத்தவர்,  தோட்டத்தை விற்ற மூணாம் மாதம் போய்ச்சேர்ந்து விட்டார்.
தன் தோட்டத்தையும் மனையாக நினைத்துப் பார்க்கையிலேயே பகீர் என்று இருந்தது. சிறுவனாக இருக்கும்போதிலிருந்து பாடுபட்ட தோட்டம். காலை நாலரை மணிக்கு பெண்டுகளும் ஆட்களுமாக பூப்பறிக்க ஆரம்பித்தால், ஆளாள் பறித்ததற்கு எடை போட்டு, ஈரச்சாக்கில் கட்டி முடிக்க மணி ஆறரை ஆகிவிடும். தோட்டம் முழுக்க மல்லிப் பூச்செடிகள்தான். கொஞ்சமாகக் கனகாம்பரமும், காய்கறிகளும், வீட்டுத் தேவைக்கு மட்டும் நெல்லும்.
குளிர்ந்து கிடந்த பம்புசெட்டு அருகில் நின்ற வேப்ப நிழலில் போய் உட்கார்ந்தார். அழகர்சாமியும் அவர் அண்ணனுமாகப் முறை வைத்து நீர் பாய்ச்சிக் கொண்ட கிணறு. ‘முனிப்பாய்ச்சல் இருக்க கெணறப்பா, நேரங்கெட்ட நேரம் அங்கிட்டுப் போகாதீங்க’ என்று ஊரில் எச்சரிக்கை இருக்கும். இரவு 12 மணிக்கு முனியப்பன் கிணற்றில் குளித்து முடித்து, ஒரே தவ்வில் கிணற்று மதிலில் வந்து நின்று, ஈரத்தலையைச் சிலுப்புவாராம். அந்தத் தண்ணீர் தெறிக்கும் இடம் பட்டுப் போகுமாம். மனிதர் மீது பட்டால் பரலோகம்தான்.
அழகர்சாமியின் அய்யா வாழைத்தோட்டக் காவலுக்குப் போய் ராத்தங்கியவர், தோட்டத்திலேயே கை,கால் விழுந்து, கிடந்து போய்ச்சேர்ந்ததில் முனி விளையாட்டுதான் குற்றஞ்சாட்டப்படது. நாளைக்கு ப்ளாட் போட்டு விட்டால், முனியப்பன் எங்கு போவாரோ! இல்லை, வருசத்தில் முக்கால் வாசி நாள் தண்ணி வத்திப் போன கிணத்தில் முங்கிக் குளியல் போட முடியாமல் ஏற்கனவே இடம் மாறிப் போனாரோ என்னவோ.
துண்டைச் சும்மாடாகச் சுருட்டி தலைக்கு வைத்து மல்லாந்து படுத்தார் அழகர்சாமி. தென்னைமரம் ஓலையை அசைத்துச் சிரித்தது. இனி இந்த நிழல் வாய்க்காது. உழைப்பு வாய்க்காது. மனசை நிறைக்கும் பூமணமும் இந்தப் பச்சையும் வாய்க்காது.
பாலையம்பட்டிச் சம்சாரிகளுக்கு வடக்கே போக பூஞ்சப்பரம்தான். மூங்கிலில் மிகப் பெரிதாகக் கட்டப்பட்டு, பூச்சரங்கள் சூழ்ந்த சப்பரத்தில், உட்கார்ந்த கோலத்தில் ‘இல்லை இல்லை’ என்று தலையாட்டியபடியே பூக்கள் வீசப்படும் வழியில் போய்ச்சேருவார்கள். தனக்கு கட்டப்படும் இறுதித் தேரில் தன் தோட்டத்திலிருந்து ஒரு மொட்டு கூட இருக்காது என்று கண்களை மூடி நினைத்துக் கொண்டார். பலமாக வீசிய வேப்பமரக் காற்றில் மல்லிகைப் பூ மணத்துக் கிடந்தது.