2022-06-20

மங்கலம்

 ராசப்பா, டக்குன்னு வா அடுத்து பொம்பளையாளுகல்லாம் வேற வைக்கணும்ல…’ சிவஞானத்தின் உரத்த குரலுக்கு தேராட்டமாக அசைந்து வந்து எண்ணைக் கிண்ணத்தில் வலது புறங்கையை விட்டான் ராசப்பன்.

‘டே, கிறுக்குப்பயலே, எடது கையை விடுறா… போற அன்னைக்காவது தாத்தனுக்கு குடிக்காத மூஞ்சியக் காட்டக்கூடாதா?’

‘விடப்பா, சும்மாவே ராசப்பனுக்கு காரணமில்லாம தினம் துக்கம் தொண்டைய அடைக்கும், இன்னிக்கு தாத்தா வேற வைகுண்டம் போறாரு… மனச ஆத்தனுமா இல்லையா?’

கல்யாணச்சாவானதால் துக்கத்தை விட கேலிப்பேச்சுகள் உரத்துக் கேட்டன.

‘இங்காரு ரங்கா, எங்க தாத்தா சிவலோகந்தான் போவாரு… எப்பா சிவஞானம், அது கைலாயமா சிவலோகமாப்பா….’ சீயக்காயைத் தாத்தாவின் தலையில் தடவிக்கொண்டே தீவிரமாகக் கேட்ட ராசப்பாவை விரட்டிவிட்டு, எண்ணை வைக்க ஏந்தலாகக் கால்களில் சாய்ந்து கிடந்த கிழவரைப் பிடித்துக்கொண்டே அடுத்தடுத்த வேலைகளுக்குக் குரல் கொடுத்தான் சிவஞானம்.

‘எம்மா, குளுப்பாட்டிப் போட துணி எடுத்து வச்சாச்சா? முத்து, கைல வச்சி வாங்க வெத்தலையும் சில்றக்காசும் எடுத்து கைலயே வச்சிருடா… குளிச்சி வரவும் கேப்பேன்… இன்னும் இருவது நிமிசத்துல பல்லக்குல ஏத்தீரணும்’

கேத வீட்டின் மையமாக நின்றிருந்தவனை சிவஞானத்தின் தாயும் மனைவியும் உணர்ச்சியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குளிப்பாட்டி முடித்தபின் கிழவரை மாப்பிள்ளை போலச் சிங்காரித்து, அம்சமாகத் தலப்பாக்கட்டு ஒன்றைப் போட்டு, நாடி கட்டி, வெத்தலை கொடுத்து வாங்கி, அலங்காரமாக நின்ற பல்லக்கில் அசையாமல் உட்கார வைத்த பின்தான் ஒரு செம்புத்தண்ணீரே உள்ளே போனது அவனுக்கு.


                                            
                                            Pic: Google

இந்தக் கிழவர் என்றில்லை, ஊரில் எந்தக்கேதம் விழுந்தாலும் பிள்ளைகளுக்கும் உடன் பிறந்தாருக்கும் சொல்ல முன்னரே சிவஞானத்தின் கதவுதான் தட்டப்படும். கிடந்த கோலத்தில் இருப்பவரைத் தூக்கி உட்கார வைத்தோ இல்லை ஐஸ் பெட்டி வரவைத்துப் படுக்க வைத்தோ தொடங்கும் அவன் கடமை, எப்போ எடுப்பது, எப்படி எடுப்பது என்பதில் தொடர்ந்து, நீர் மாலைக்கு முன்னெடுத்து, கேத வீட்டுப் பஞ்சாயத்துகளைத் தீர்த்தோ தூக்கிப் போட்டோ முடித்து, வாய்க்கரிசிக்கு தங்கத்தாள் சுற்றுவது, சுடுகாட்டுப் பணியாளருக்கும் காசை மடியை விட்டு எடுக்க மறுக்கும் கேத வீட்டுக்காரர்களுக்கும் நடுவில் பேசி முடித்து, மறுநாள் சாம்பல் ஆற்றுவதன் வரையும் உறங்காமல் தொடரும்.

பல்லக்கைத்தூக்க விடாமல் வீதியில் கதறிப் புரண்டு அழுதோராக இருந்தாலும் சாம்பல் ஆற்றுகையில் மண்டையோட்டைப் பார்த்தால் தெறித்து ஓடவோ சித்தம் கலங்கவோ வாய்ப்பிருப்பதால் நேரத்திலேயே போய் எடுக்கவேண்டிய சாம்பலை மட்டும் விட்டு மற்றவற்றை ஒதுக்கி வைத்து விடுவான். எல்லாம் அறிந்து தெளிந்த வியாக்கியானவாதிகளே எட்டடி தள்ளி நிற்க, கையில் குச்சியை வைத்து சாம்பல் மேட்டைக் கிளறி எலும்புகளை எடுத்துக் கட்டுவதன் நிதானம் யாரையுமே ‘நம்மால் ஏலாதப்பா’ என்று எண்ண வைக்கும்.

சாம்பலைக் கரைக்கவும், பிண்டம் வைத்து முடித்து கறிச்சாப்பாட்டுப் பந்தியை நடத்த, காரியம் செய்ய வரையிலுமே சிவஞானம் இல்லாமல் நடத்துவது எப்படியென்பது மொத்த ஊருக்கும் நினைவில் இல்லை.

யாரும் ஆணை போட்டுப் பணியமர்த்தவில்லை. எப்படி ஆரம்பித்தது என்று சிவஞானத்துக்கே கூடத் தெரியாது. ஆனால் சிவஞானம் இல்லாவிட்டால் வடக்கே போகும் வழி தடுமாறித்தான் போகும் ஊருக்கு. சில பொறுப்புகள் அதாகவே ஆளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அப்படித்தான் இதுவும். இதனாலேயே சிவஞானத்துக்கு ஊரில் தனி மதிப்புதான்.

‘இதுல என்னா மரியாதை வருது? நம்ம தேவைக்கு நாளைக்கு இவன் வேணுமேன்னு நயந்து போறாக…. நீ போய் சுடல மாடசாமி கணக்கா மயானத்துலயும் எளவு வீடுகள்லயும் கெடந்து திரியணும்னு தலையெழுத்தா?’ சங்கரம்மாளுக்கு மகனிடம் குறை சொல்வதற்கு இது ஒன்றுதான்.

‘யெம்மா, நம்ம கையைப் பிடிச்சி யாரும் இழுத்தாகளா… நீதான் செய்யணும்னு? நம்ம மனசுக்கு நாம செய்யிறோம்… அது போக இங்க இருக்க எவனும் மதிக்கிறதுக்காகவா இதெல்லாம்? போற உசுருக்கு ஒரு மரியாதைதான்..’

‘ஆமாண்டா, போறவுக வழி தெரியாம தெகச்சிப்போயி நிக்கிறாக, இவரு இழுத்துப் போட்டு செய்யிற வேலைகள்லதான் திருப்தியாகிக் கெளம்புறாக… போனமாசம் போய்ச்சேந்த முத்துப்பாண்டிக்கு லைட்டுப் போட்டுத்தான் பல்லக்கு தூக்கணும்னு பொழுது விழுகுற மட்டும் காத்துக் கெடந்து தூக்கிப் போட்டீகளே… முத்துப்பாண்டி சந்தோசத்துக்கா? இருக்க வரை ‘சாப்புட்டியா’ன்னு கேக்க ஆளக்காணோம், போன ஒடனே பூவென்ன… லைட்டென்ன… வேட்டுகளென்ன… வந்தவன் போனவனுக்கெல்லாம் தண்ணியென்ன… அவன் மகன் காசு பவுசக் காட்றதுக்குத்தான அத்தனை பகுத்து? போய்ச்சேந்தவனுக்கெல்லாம் ஒன்னுமில்ல, இருக்குறவங்களுக்குத்தான் பெருமையும் அவமானமும், வலியும் வேதனையும்’

குரல் கம்ம பேசிக்கொண்டிருந்த தாயைப் பரிவோடு பார்த்தான் சிவஞானம். மாமியார் பேசுவதைக் கேட்டுக்கொண்டு, சுவரோடு சாய்ந்தமர்ந்து தரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரியிடம் ஒரு பார்வை சென்று மீண்டது.

‘இப்ப என்னாகிப் போச்சின்னு இவ்வளவு பொலையாடுறம்மா இப்ப?’

சங்கரம்மா மெல்ல வந்து மகனுக்கெதிரில் அமர்ந்து பாதிக்குரலில் மன்றாட்டமாக ஆரம்பித்தாள்.

‘அதுக்கில்லய்யா…. இன்னிக்குக் கூட கேத வீட்ல பெரியம்மா சொல்லுச்சி… இப்பிடி அமங்கலத்துலயே கெடக்குறதனாலதான் பிள்ளை இல்லாமப் போகுதுன்னு… எனக்கும் அதே யோசனையாதான் இருக்கு… கொஞ்ச நாள் ஒதுங்கி இருப்பா….’

சட்டென்று சிரிப்பு வந்து விட்டது சிவஞானத்துக்கு. அதைக் கவனித்த பரமு மெல்லிய வருத்தமாகி, ‘இதுக்கென்ன சிரிப்பு? பெரியவங்க சொல்றதையும் கொஞ்சம் கேட்டாத்தான் என்ன?’ என்றாள்.

ஒவ்வொரு மாதமும் கனவு கலையும் நாட்களில் பெருக்கெடுத்த கண்ணீரையும் சில வருடங்கள் கழிந்த பின் கலங்கிய கண்களையும் இப்போதெல்லாம் வெளிப்படும் உணர்வே இல்லாத வெறித்த முகமும் அந்த நாலைந்து சொற்களுக்குள் வந்து போயின. சிவஞானத்துக்கு இரக்கமும் இயலாமையும் உள்ளுக்குள் நிறைந்து சொற்களை வழிமறித்தன.

‘அந்தா இந்தான்னு பன்னண்டு வருசமாகுதுப்பா, பாக்காத வைத்தியமில்ல, வேண்டாத சாமியில்ல… உங்களுக்குன்னு ஒரு வாரிசு வேணுமில்ல… உனக்கும் ஒரு பிள்ளையாகிப் போச்சின்னா எனக்குக் கடைசிக் காலம் நிம்மதியாக் கழியும்’

விரக்தியாகி ஏறிய குரலில் ‘யாராவது சொல்றாங்கன்னு என்னத்தையாவது பேசாதம்மா… ஊரையடிச்சி உலையில போட்டுப் பெழைக்கிறவனெல்லாம் பிள்ள குட்டின்னுதான வாழுறான்?!

அடுத்தவன நோகடிச்சி, ஏமாத்தி, அநியாயம் செஞ்சி மனசாட்சியில்லாம வாழ்றதுல வராத அமங்கலம் மனுசனுக்கு மனுசன் ஆதரவாப் போயி நிக்கிறதுல வந்துருதா??’

சங்கரம்மாளுக்கு அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.

உறக்கம் பிடிக்காத இருளில், விட்டத்தைப் பார்த்துக் கொண்டு மறுபடியும் கேட்டாள் பரமு.

‘ஏம்ப்பா, பெரியவங்க சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சிதான் பாப்பமே… ஏதாச்சும் ஒரு வழி திறந்தா சரிதான?’

சன்னல் வழி வந்த வெளிச்சத் துண்டை வெட்டி வெட்டிச் சுழன்று கொண்டிருந்த காற்றாடியோடு கூடவே எண்ணங்களைச் சுழல விட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமலிருந்தான் சிவஞானம்.

காதலையும் ஈர்ப்பையுமெல்லாம் முழுக்க மறந்து பிள்ளையை எதிர்பார்த்து மட்டுமே இயங்கிய இரவுகள், அக்கறையாகவும், வழி தெரியாதவர்களாக எண்ணிக் கொண்டும் வாரி வழங்கப்படும் பரிகார, வேண்டுதல், மருத்துவ ஆலோசனைகள், திருமண, பிள்ளை கொண்டாட்ட நிகழ்வுகளில் வலிந்து பின்னகர்ந்து கொண்ட நாட்கள், சோதனைகளும் மருந்துகளுமாக வலி கடக்கும் நேரங்கள்…. தன்னைவிட எல்லா அழுத்தங்களையும் பலமடங்கு தாங்கிக் கடந்து வரும் மனதின் வேதனை…

மெல்லிய பெருமூச்சுடன் சிவஞானம் ஆரம்பித்தான்.

‘கேத வீடுகள்ல எடுத்துப் போட்டு செய்றது கேடு செய்யும்னு சொல்றதே வேடிக்கையா இல்லையா? அதையும் விட நல்லது செய்றவனுக்குதான் குழந்தை பிறக்கும்ன்றதெல்லாம் எவ்வளவு மோசமான நினைப்பு?! அவனவன் செஞ்ச பாவ புண்ணியத்துக்குத்தான் வாழ்க்கை அமையும்ன்னு சொல்றதை விட மனுசத்தன்மை இல்லாதது எதுவுமில்லை.

முதல்ல இந்தப் பேச்செல்லாம், பிள்ளை இல்லாதவனெல்லாம் வாழ்றதுக்கே அர்த்தமில்லன்ற நினைப்புல வாறதுதான் பரமு… அது முதல்ல மாறணும். ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் வாழ்க்கை இல்ல, அவரவர் விருப்பத்துக்கு, தேவைக்கு, ஆசைக்குன்னு ஏத்தபடி வாழ்றாங்க, ஆனா எல்லாரும் பிள்ளைகளைப் பெத்து வளத்தே ஆகணும்னு கட்டாயமா??’

‘இதெல்லாம் கேக்க நல்லாதான் இருக்கு, ஆனா உண்மையில உங்களுக்கே பிள்ளை ஆசை இல்லையா? பொடுசுகளப் பாத்தா அள்ளித்தூக்கிக் கொஞ்சி விளையாடுறதெல்லாம் பாக்காமயா இருக்கேன்??’ சிறிய குற்ற உணர்ச்சி இழைந்து கொண்டு வந்தது பரமுவின் குரலில்.

‘பிள்ளைகள் மேல ஆசை இல்லாம எல்லாம் இல்லை, அதுக்குத்தான் அக்கா பிள்ளைக, தம்பி பிள்ளைக, உங்க அண்ணன் பிள்ளைகன்னு இருக்கே… எல்லாரையும் கொண்டாடிக்கிடுறதுதான….’

‘இல்லைன்னு சொல்லல, ஆனா நமக்குன்னு ஒன்னு வேணாமா?’

‘நமக்கே நமக்குன்னு வளக்கணும்னாலும் வழியா இல்லை? நாம பெத்துதான் வளக்கணும்னு இருக்கா என்ன?’ நிதானமாகச் சொன்னான் சிவஞானம்.

‘நாம பெத்துக்கணும்னுதானங்க இத்தனை தவுதாயப்படுறோம்? இத்தனை வருசமும் பட்ட எல்லாப்பாடும் அதுக்குத்தான?!’

‘இல்லேங்கல, பிறந்திருந்தா சரிதான்… ஆனா இத்தனை வருசத்துல நமக்கும் கொஞ்சம் பக்குவம் கூடியிருக்கு, யோசிச்சிப் பாத்தா பிள்ளை வளக்குற சந்தோசம்தான் வேணும்னா நம்ம பெத்துக்கிட்டதாத்தான் இருக்கணும்னு என்ன இருக்குன்னு தோணுது… ’

பரமுவின் நிலைத்த நோக்கில் அறையின் இருளும் வெளிச்சமும் தட்டாமாலை ஆடின.

யாரையும் எதையும் பொருட்படுத்தாத, இரக்கமற்ற, அல்லது கருணை மிகுந்த காலமானது அதன் போக்கில் தொடர்ந்தது. தடம் மறவாத சிவஞானத்தின் கால்களும் காலத்தோடும் ஊரோடும் ஓடிக்கொண்டிருந்தன.   

சக மனிதனை நெருங்கிப் பேசுவதையும் கூட மரண அச்சத்துக்குள்ளாக்கிய கிருமித்தொற்றின் பேரழிவுக்காலத்திலும் தயங்காது ஓடின. மருத்துவமனையோடு வழியனுப்பி தடுமாறி சடங்குகள் செய்த வீடுகளிலும் வேறு வழியில்லாமல் வந்த ஐம்பதே சொந்தங்களோடு துக்கம் கொண்டாடிய வீடுகளிலும் கூட சிவஞானத்தின் பங்கு இல்லாமல் போகவில்லை. தனிமைப் படுத்திக் கொள்ளுதலும் வீட்டோடு சேர்ந்து கொள்வதுமாக அந்நாட்கள் போயின.

உலகம் மெல்ல இயல்பாகத் தொடங்கிய நாட்களில் அமைந்த அக்கா மகள் திருமணத்தில் பரபரப்பாக பந்தி பரிமாறிக் கொண்டிருந்த சிவஞானத்துக்கு மணமேடையில் இருந்து மாறி மாறி அழைப்பு வந்தது. ‘யெப்பா, சாம்பார் வாளிய இங்கிட்டுக் குடுத்துட்டுப் போப்பா… குடும்ப போட்டா எடுக்கணுமாம், அப்பதே பிடிச்சிக் கூப்பிட்டிருக்காக…’

வாளியைக் கைமாற்றி விட்டுவிட்டு மணமேடைக்கருகில் வந்த சிவஞானத்தின் கால்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டன தளிர்க் கரங்கள். ‘யப்பாஆஆ…. தூக்கி, தூக்கி’

பட்டுப்பாவாடை சரசரக்க, ரெட்டைக் குடுமியும், குடுமிகளை இணைத்து தொங்கு பாலமாக ‘இந்தா விழுகப் போறேன்’ என்று ஊசலாடிய பூச்சரங்களும், கையில் பலுவனுமாக வந்த செல்ல மகளை வாரித்தூக்கிக் கொண்டு, கருமை மின்னும் முகத்தில் நிறைந்த வெள்ளைச்சிரிப்புடன், மலர்ந்து புன்னகைத்த பரமேஸ்வரியுடன் சேர்ந்து சிவஞானம் புகைப்படத்துக்கு நிற்கையில் அங்கே சர்வ மங்கலமும் சூழ்ந்து நிறைந்து பொலிந்தது.