2014-12-14

தோழிமார் கதை

வினோதாவோட இம்சை போகப் போகஅதிகமாகிக்கிட்டே இருந்தது. சீனியர்லாம் பாசமாப் பழக, க்ளாஸ்மேட்டான இவதான் என்னை அதிகமா கலாய்ச்சிட்டு இருந்தா. ஜெயில்னு தெரிஞ்சும் இங்க வந்து மாட்டிக்கிட்டோமேன்னு என்னை நானே நொந்துக்கிட்டிருந்த கல்லூரி விடுதியின் ஆரம்ப நாட்கள். வெறுப்பில் இருந்த என்னை, 'இந்தப் பொண்ணு ரொம்ம்ப்ப அமைதி'ன்னு எல்லாரும் நினைக்க, நானும் கொஞ்சநாள் நினைச்சிக்கட்டும்னு பேசாமல் இருந்தேன். கல்லூரியில் நான் ரெண்டு வாரம் தாமதாமா சேர்ந்திருந்தேன். வினோதாவோட இருவார நட்பில் இருந்த தோழி என்னோட நல்லாப் பேச ஆரம்பிச்சதுல வந்தது வினை.

ஒருநாள் காரிடாரில் நடந்துக்கிட்டு இருக்க, 'திருவெல்வேலிக்காரவுங்களைப் பத்தித் தெரிய வைப்போம்'னு யார்ட்டயோ சொல்லிக்கிட்டே வினோதா என்னை நோக்கி வர, ஹீரோ என்ட்ரி போல, நடுவால இருந்த அறையில் இருந்து தீபா வெளியில் வந்தா. என் பக்கத்துல வந்து தோள்ல கை போட்டு நடந்துக்கிட்டே வினோதாகிட்ட போய், தோள்ல இருக்க தூசியைத் தட்டி விடுற மாதிரி ஒரு ஆக்சனோட, 'அப்புறம், நல்லாருக்கியா...'ன்னு ஒரு புருவத்தை மட்டும் தூக்கிக்கிட்டு அடிக்குரல்ல கேட்டதுதான் தாமதம். வினோதா பயங்கரமாப் பம்மிப் பேசி எஸ்கேப். அப்புறம்தான் தெரிஞ்சது, தீபா அம்மணி பத்து நாள்லயே ஹாஸ்டல் அறிஞ்ச ரவுடியா ஃபார்ம் ஆகியிருக்குன்னு.

'நீ தனியாதான வர்ற க்ளாசுக்கு? இனிமே எங்க 'கேங்க்' கூட வா...இவ என்ன செய்றான்னு பார்க்கிறேன்'னு குகன்ட்ட "நால்வரொடு ஐவரானோம்"னு சொன்ன ராமன் ரேஞ்சுக்கு அரவணைச்சு, ஏற்கனவே உருவாகியிருந்த நால்வர் குழுவை அஞ்சு பேராக்கியாச்சு. அன்னியோட விழுந்தது என் 'நல்ல புள்ளை' இமேஜுக்கு முற்றுப்புள்ளி. சின்சியாராப் படிக்கிறதெல்லாம் முதல் செமஸ்டரோட மூட்டை கட்டி வச்சிட்டு,க்ரூப்புக்கு ஒரு பேர் சூட்டி, தினமும் ஸ்டடி ஹவர்ஸ்ல ஒரு விநாடி கூடப் படிக்காம பயனுள்ளதாக் கழிக்கிறதுலயே முழு கவனம் செலுத்தினோம். மொத்தக் கல்லூரியும் செமஸ்டருக்கு விழுந்து விழுந்து படிக்க, கேண்டீனை மொத்தக் குத்தகைக்கு எடுத்து பஜ்ஜி,போளியெல்லாம் ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டிருந்தோம்.

 கலாய்க்கிறதுன்னா என்னன்னு எங்க கேங்க்கிட்ட ட்யூஷன் படிக்கிற அளவு அஞ்சு பேரும் அதகளம். எங்களுக்குள்ள கலாய்ச்சிக்கிட்டு இருந்தாலும், கடந்து போறவங்க அவங்களைத்தான் கலாய்க்கிறதாக் கடுப்பாகி முறைச்சிட்டுப் போற அளவு சேட்டை. லெக்சரர், வார்டன், கூடப்படிக்கிறவங்கன்னு ஒருத்தர் விடாம பட்டப்பேர் வச்சதுல, இப்போவரை சில பேரைத் திரும்பப் பார்த்தா, அவங்க பட்டப்பேர் மட்டுமே ஞாபகம் வரும்.

1500 பேர் இருந்த ஹாஸ்டல்ல ஏகப்பட்ட குழுக்கள், அவங்களுக்குள்ள முறைப்பெல்லாம் சர்வ சாதாரணம். எல்லாரையும் விட ரொம்ப அலர்ட்டா முறைச்சிக்கிட்டே இருந்தது நாங்கதான். எங்க 5 பேர்ல யாரையும் அடுத்தவங்க எதுவும் ஒரு வார்த்தை சொல்லிட்டா, தீபா எதுவும் யோசிக்காம போய்ப் புருவத்தைத் தூக்கி மிரட்டிட்டு வந்துரும். நாங்களும் பக்கத்துல நின்னு எக்ஸ்ட்ரா சவுண்ட் விட்டுட்டு வருவோம். ஜுனியரா வந்து சேர்ந்த என் சொந்தக்காரப் புள்ளைகல்லாம், "அந்த அக்கா தாவூத் இப்ராகிம் லெவலுக்கு தாதாவாகிட்டாங்க"ன்ற மாதிரி வீட்ல போட்டுக்குடுத்ததெல்லாம் நடந்தது.

கல்லூரி இரண்டாவது வருடம். புதுவருடக் கொண்டாட்டம். எல்லாரையும் கூப்ட்டு வார்டன் கேக் வெட்டுவாங்க, யாரும் தனியா வெட்டக் கூடாதுன்னு பலமா எச்சரிச்சதுக்கப்புறமும் (எதுக்கா?? ஜெயில்னா அப்பிடித்தான். நோ கேள்வி) க்ளாஸ் மொத்தமும் ஒரு ரூம்ல கேக் வெட்டி மாட்டி, பிரபல முகங்கள் லிஸ்ட்ல தீபாவைக் கூப்பிட்டு அனுப்ப, பேரைக் கேட்டாலே கல்லூரியே அதிருமளவு அதிபயங்கர டெரரான வார்டன் முன்னாடி அவ தில்லா பதில் சொன்னது, அன்னிக்கு காயங்காலமே விடுதியோட புதுவருடக் கொண்டாட்டத்துல ஸ்டேஜ்ல நடனம் ஆடும்போது

'யார் காதிலும் பூ சுற்றுவேன்,
நான்தான் சகலகலா வல்லவன்ன்ன்'னு ஆட்டத்திலேயே வார்டனை நோக்கிக் கை காமிச்சதுன்னு அதிரிபுதிரி பிரபலம் ஆக, எங்க க்ரைம் ரேட்டும், ரசிகர் பட்டாளமும் கூடிக்கிட்டே போச்சு.

கல்லூரியில் எப்பவும் கடைசி பெஞ்ச். ரொம்பவே நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் சில லெக்சரர்கள் கடுப்படிப்பாங்க.  ஒரு தடவை தேவையே இல்லாமல் ஒரு லெக்சரர் தீபாவை நிக்கச் சொல்லி தண்டனை குடுக்க, அவங்களையும் முறைச்சு HOD வரை போய்ப் பேசி, லெக்சரர் அழுகாத குறையா இவளை அனுப்பி வைக்கும்படி ஆனது.

வாழ்க்கையில் அந்தக் கல்லூரி வருடங்களைப் போல அவ்வளவு சிரிச்சு, மகிழ்ச்சியா எப்பவும் இருந்ததில்லை. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கண்ணில் தண்ணீர் வர சிரிக்கும்படி அரட்டைகள். பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமும் எங்களுக்குக் கிண்டல்தான்.

இப்பவரை நினைச்சு ஏங்கும்படியான அந்த நாட்கள் முடிஞ்சு, அழுது பிழிஞ்சு, ஆளுக்கொரு பக்கமாகப் போயாச்சு. தீபாவுக்குதான் எங்க குழுவில் முதல்ல கல்யாணம் நடந்தது. திருமணத்திற்கு முந்தைய கனவுலகத்தில் அவளும் பிசி. சென்னையில் வேலையில் குப்பை கொட்டிக்கிட்டிருந்ததுல கல்யாணத்துக்குப் போக முடியாம தொலைபேசியில் வாழ்த்தினேன். அதுக்கப்புறம் பழையபடி அடிக்கடி தீபாகிட்ட பேச முடியலை.

அவ கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாலு மாசம் கழிச்சு ஒரு நாள் அவள்ட்ட தொலைபேசும்போது வரவழைச்ச உற்சாகத்தோட பேசினா.
'என்ன பண்ற, ஏதோ சரியில்லை'ன்னு கேட்டேன். ரொம்ப இயல்பா,

'அது ஒரு காமெடி...காலையில் தோசை சுட்டுக் குடுத்தேன் அவருக்கு. அம்மா வீட்டுக்குப் போறது பத்தி சின்ன விவாதம். கோவத்துல தட்டை சுவத்துல விட்டெறிஞ்சிட்டுப் போய்ட்டார்...தரையெல்லாம் சுத்தம் பண்ணிட்டேன்...மேல்கூரைல போய் ஒட்டிட்டு இருக்க சட்னியை எப்படித் துடைக்கிறதுன்னு மோட்டுவளையைப் பாத்து யோசிச்சிட்டு இருக்கேன்'ன்னு பகபகன்னு சிரிப்பு.

தொண்டை அடைக்க, மெல்லக் கூப்பிட்டேன்...

'தீபா...'

'ஏய், அதெல்லாம் ஒன்னுமில்லை விடு... என்ன, அம்மா, அப்பா பத்தியெல்லாம் ரொம்பப் பேசிட்டாங்க. அதான் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுச்சு'

இந்தப் பக்கம் எனக்குக் கண்ணெல்லாம் தண்ணீர். அப்பா,அம்மான்னு தோழிகளின் பெற்றோரைக் கூப்பிட்டது மனசிலிருந்துதானே. ரெண்டு பேரும் பேசாமல் இருந்த சின்ன இடைவெளிக்கப்புறம் கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு ரொம்ப சீரியசா சொன்னேன்.

'சரி விடு தீப்ஸ்...நான், ப்ரியா, கயல், ஜெனி எல்லாரும் கிளம்பி வரோம். உங்க வீட்ல எல்லாரையும் நிக்க வைச்சு நீ புருவத்தைத் தூக்கி அடிக்குரல்ல மிரட்டு, நாங்க டெரரா ஆளுக்கு ரெண்டு சவுண்ட் விட்றோம்' ன்னு

அந்தப்பக்கம் அவ வெடிச்சு சிரிக்க, ரொம்ப நாளைக்கப்புறம் கண்ணில் தண்ணீர் வர சிரிச்சேன்.