2010-08-20

மலேசியாவின் மழை நாள்

வெளியே பெருத்த சத்தத்துடன் பெய்து கொண்டிருந்தது மழை. பிரெஞ்சு ஜன்னலைத் திறந்து மழையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கே உரித்தான எவ்வித அறிகுறியும் காட்டாமல் கொட்டிக்கொண்டிருக்கும் மழை. எதிரே இருக்கும் கட்டிடம் கூடத் தெரியவில்லை.

பொதுவாக மழை நாட்கள் நிறைய ஞாபகங்களைக் கொண்டு வரும். என் மழை நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்து கொண்டு இருந்தன.சிறு வயதில் அம்மா நிலக்கடலைவறுத்துக் கொடுக்க, அப்பாவுடன் சேர்ந்து காபியில் இரண்டு சொட்டு மழை நீரைப் பிடித்து மழைக்காபி குடித்த நாட்கள்,
பள்ளி முடிந்து சைக்கிளில் வரும்போது மழை வந்து விட, நனைந்து கொண்டே வந்து புத்தகங்களைக் காய வைத்துக் கொண்டிருந்த நாட்கள்

கல்லூரியில் இருக்கும்போது மழை பெய்து கொண்டிருக்க, விடுதியில் காயப் போட்டிருக்கும் துணிகள் பற்றி தோழிகளிடம் புலம்பிக் கொண்டிருந்த நாட்கள்
சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பெருமழை பெய்து ஊரே வெள்ளக் காடாகி விட, தீபாவளிக்கு ஊருக்குப் போக வேண்டி பரபரத்து, 2 மணி நேரம் காத்திருந்து ஆட்டோ பிடித்து, கோயம்பேடு அருகில் ஆட்டோவுக்குள் தண்ணீர் ஏறிவிட, கடைசியில் ஒரு வழியாக பேருந்து நிலையம் போய் அங்கு ஒரு 3 மணி நேரம் பேருந்துக்குக் காத்திருந்து ஏதோ சாகசம் போல் ஊர் போய் சேர்ந்த தினம்

இன்னும் நிறைய ஞாபகங்கள்....

ஒரு மழை நாள் இத்தனை ஞாபகங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து, அன்றைய நாளுக்குமாய் புதியதொரு அனுபவத்தை நெய்து கொண்டிருக்கும். இன்றோ எனக்கு மழையைப் பார்க்க சுவாரசியம் ஏதும் இல்லாமல் இருந்தது. நம் ஊரின் மழை நாளின் ஈரத்தையோ, குளுமையையோ, வண்டுகளின் இரைச்சலையோ இந்த ஊர் கொண்டிருப்பதில்லை என்பதும் காரணமாய் இருக்கலாம்.

நிசப்தம் நிறைந்த இரவைப் போல மழையும் மனதின் எண்ணங்களை உணர்வுப் பூர்வமான பரிணாமத்தில் வெளிக் கொணரக் கூடியது. எல்லா மழை நாட்களின் ஞாபகங்களும் எனக்கும் பிரிந்திருக்கும் தாய்நாடு பற்றியே நினைவுபடுத்திக் கொண்டிருக்க, எரிச்சலுடன் ஜன்னலை மூடி விட்டு வந்து அமர்ந்தேன்.

 இந்த மழை நாட்கள் ஏக்கத்தைத் தவிர வேறு என்ன ஞாபகம் தர முடியும் என யோசித்தபடி அமர்ந்து இருந்தேன். வாழ்வின் எல்லாக் கோணங்களையும் பார்க்கும் ஒரு வாய்ப்புக்கு இந்த நாட்களின் நினைவுகளும் பாதை இடுமோ என எண்ணிக் கொண்டே இணையத்தில் நுழைந்தேன்.
இடியையும் மின்னலையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மேலும் பெரிதாய் உருமிப் பெய்து கொண்டிருந்தது என் ஞாபகங்களுக்கான பெரு மழை....

2010-08-15

மழைத் தோழி...

சிறு வயதில் அரிசி தின்றதாய்
சுற்றம் எல்லாம் கேலி பேச,
நாற்றங்காலில் இருந்து
சட்டென பிடுங்கப்படும்
சொல்லொணாத வலியை,
வெளிச்சப் பார்வையின் நடுவில்
புன்னகைத்துக் கொண்டிருக்கும் எனக்காக,
உரத்துச் சொல்லித் தேம்புகிறது
என் மனப் பந்தலில் பெய்யும் கனமழை...