2025-08-15

                                                                 தெற்றுப்பல்


உள்ளே நுழையும்போதே ஏதோ மாறுபாடாகப் பட்டது. கோவிலுக்கான வழக்கமான அமைப்பே இல்லை. எந்தப்பக்கம் போய் எந்தப்பக்கம் வருவது என்றே புரியவில்லை. கூடவே காரணமே இல்லாத மனப்பதட்டம். பதறிப்பதறி அமைவது என் உள்ளத்துக்கு ஒன்றும் புதிதில்லை என்றாலும்  ஒரு கோவிலுக்குள் நுழைவதற்கு ஏன் இப்படி?! ஏதாவது துர்சக்தி பீடித்திருக்கிறதா என்னை??

‘வெள்ளிக்கிழமைதான இன்னைக்கி, போற வழில வராகியம்மன் கோவிலுக்குப் போய்ட்டு போயிருவோம்’ என்று அக்கா சொன்னபோது எந்த எண்ணமுமே மனதில் இல்லை. ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு புகழ் பருவம் போல அப்போது எங்கு பார்த்தாலும் வராகி புகழ்தான். இணையத்தைத் திறந்தாலே எப்படியெல்லாம் வராகியம்மனுக்குப் பூசை செய்வது, விரதம் இருப்பது, அஷ்டகம் படிப்பது, அவள் மனம் இரங்கினால் எப்படி நம் பகைமை எல்லாம் பொடிப்பொடியாகிச் சிதறும் என்று காணொளிகளாக வந்து கொட்டின. உழைத்து, உண்டு, உறங்கி மிக எளிமையாக பிழைத்துக் கிடப்போருக்குமே கூட மனம் கசந்து, வெறுத்து, பெரும் சக்தியின் துணை கொண்டு நாசமாக்கி வென்று நிறைந்திட ஏதோ ஒரு பகைமை அவர்கள் வழியை அடைத்து நின்றது. இந்தக் கோவிலும் அந்தப் புகழின் விளைவு போல என்று நினைத்து இருந்தேன்.

முதல் அறைக்குள் பிள்ளையாரைச் சுற்றி எல்லாரும் திரண்டிருக்க, என் கண்ணில் முதலில் பட்டது சுவரில் இருந்த ஓவியம்தான். ஏதோ குமரி தெய்வம். கன்னியாகுமரி அம்மனா? இல்லையே, குமரி பகவதிக்கு பூப்பாவாடை, சட்டை போட்ட கோலமாகப் பார்த்தது இல்லை. சங்கரன்கோவில் கோமதி அம்மனுக்குத்தான் ஆடித்தபசு சமயம் இப்படி பூவாடை போட்டுப் பார்த்து நினைவு. இது கோமதியம்மன் மாதிரியும் தெரியவில்லையே. அந்த முகத்தில் எதுவோ இயல்பாக இல்லை என்பது மட்டும் தெரிந்தது.  

தொலைவில் இருப்பது மங்கத் தொடங்கும் நடு வயதாகி விட்டது. கூட்டத்தில் இருந்து மெல்ல விலகி படத்தின் பக்கம் போய்ப் பார்த்தேன். அந்த முகம் தெய்வங்களின் முகமாக இல்லை. மனிதத் தன்மை மிகுந்த, தெய்வம் போல் வரையப்பட்ட ஒரு ஓவியம். யாரோ ஒரு வளரிளம் சிறுமி. அதனால்தான் பாவாடை சட்டை.

அந்தப் படத்தின் மேலே எழுதி இருப்பதை கண்கள் வாசிக்கும் முன்னரே மனம் கண்டுகொண்டது. ‘மகாலஷ்மி அம்மன்’. ‘மகா...’ இது அவளா? முகம் அவள் மாதிரி இல்லை. ஆனால் அவளைத்தான் வரைந்து வைத்திருக்கிறது என்று உள்ளுணர்வுக்குப் புரிந்துவிட்டது. இவ்வளவு நேரம் மனம் அமைதி இல்லாமல் அலைந்ததன் காரணமும்.

பக்கத்தில் வந்த அக்கா மெதுவாகச் சொன்னாள்... ‘அது உன் ஸ்கூல்ல படிச்சதே... அந்தப் பொண்ணுதான்’. வேறு எதுவுமே அந்தப் படத்தில் எழுதி இருக்கவில்லை. அக்கா வண்டியை இந்தப் பகுதியில் இடதுபுறம் திருப்பும்போதே என் பதட்டம் ஆரம்பித்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். எப்போதும் கடந்து போகும் வழிதான் என்றாலும் ஒருநாளும் இந்தப்பக்கம் கண்களைக் கூட திருப்பியதில்லை.

‘இங்க என் இந்தப் படம் வைத்திருக்கிறது?’

‘இது அவளோட கோவில்தான். அவங்க வீட்ல இருந்து கட்டினது’

‘ஓ!’

இது அவள் பாட்டி வீடா? வீடாக இருப்பதால்தான் கோவில் அமைப்பு இல்லையா? இந்த வீட்டுக்குத்தான் அவள் அன்று வந்து கொண்டு இருந்தாளா? இன்று முழுக்க வீடுகளாக நிறைந்து கிடக்கிறதே... அன்று அவள் அலறல் கூட கேட்காதபடிக்கு அத்துவானக் காடாகக் கிடந்ததா இந்தப் பகுதி? இருக்கலாம். 25 வருடங்களுக்கு மேல் ஆகிறதே. அவள் மிதந்து கிடந்த கிணறும் இங்கேதான் எங்கோ பக்கத்தில் இருக்கிறதா? அதைச் சுற்றியும் வீடுகளாக ஆகிவிட்டனவா? அவள் சைக்கிள் விழுந்து கிடந்த வயல்காட்டுப் பகுதியும் இந்தப் பகுதிதானா? காலத்தில் முன்னும் பின்னுமாக ஊசலாடி கிறுகிறுத்து நின்றன எண்ணங்கள்.

‘அடுத்த வெள்ளிக்கிழமைக்கு பூஜைக்கு எழுதிக்கோங்க. சேலை நானே வாங்கிட்டு வந்துர்றேன். மத்த ஜாமான்லாம் நீங்க வாங்கி வச்சிருங்க’ என்று பணத்தை நீட்டிக் கொண்டிருந்த பெண்மணியை வெற்றுக்கண்களோடு நிமிர்ந்து பார்த்தேன். அவர் முகமெல்லாம் மலர்ச்சி. இந்தப் பெண்ணை எனக்குத் தெரியுமே... அதுவும் இந்த மாகாவோடு சம்பந்தப்படுத்தியே தெரியுமே...

இது யார்? அவள் அக்காவா? இல்லை, அவள் அக்காவை நான் பார்த்ததே இல்லை. அந்த அக்காவை வம்பிழுத்ததை எதிர்த்துப் பேசியதால்தான் அவளுக்கு இந்த நிலை நேர்ந்ததாக எங்களுக்குச் சொல்லப்பட்டது. அப்படி எதுவும் எங்களுக்கு நேராமல் இருக்க, சைக்கிளில் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் முன் சக்கரத்தை மட்டுமே பார்த்து ஓட்டும்படியும், வலிய வந்து யாராவது வம்பிழுத்தாலும் மூச்சுக் கூட விடாமல் வேகமாக அழுத்தி வீடு வந்து சேரும்படியும் அறிவுரைகள் சொல்லப்பட்டன.

‘யாரோ ஒரு ஒன்பதாம் வகுப்புப் பிள்ளை காணாமப் போயிருச்சாம்’ என்றுதான் பேச்சு ஆரம்பித்தது. கவலையை விட, அவள் ஓடிப்போய் திரும்ப வந்து நிற்கப் போகும் நிமிடத்தின் ஆர்வம்தான் எங்கும் தெரிந்தது. இரண்டாம் நாள் ஊரையே உறைய வைத்த செய்தி கிடைக்கும் வரை. செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த கிணற்றின் படம்... அதில் தெரிந்த பள்ளிச் சீருடை... நேற்று வரை பக்கத்து வகுப்பில் இருந்த பிள்ளை...

அவள் அழகாக இருந்ததுதான் காரணம் என்பது பரவலாகவே நம்பப் பட்டது. முழுநாளும் பள்ளியில் இருந்து விட்டு வீடு திரும்பும் ஒரு ஒன்பதாம் வகுப்புப் பிள்ளையிடம், ஆபத்தை விலைக்கு வாங்கும்படி எங்கோ அழகு வெளிப்பட்டிருந்ததன் குற்றம்தான் முதன்மையாகக் கருதப்பட்டது. மிச்சமிருக்கும் பிள்ளைகளை எப்படியெல்லாம் அடக்கமாக நடந்து கொள்ள வைப்பது என்பது பற்றித் தீவிரமாக விவாதித்து, துப்பட்டாவில் எட்டு ஊக்குகளைக் குத்திக்கொள்ள வேண்டும் என்பது முதல் கட்டளையாக விதிக்கப்பட்டது. ஏற்கனவே குத்தப்பட்டுக்கொண்டிருந்த மூன்று ஊக்குகளால் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. துப்பட்டாவின் இரு முனைகளும் காற்றில் பறந்து யார் மேலாவது பட்டால் அது சிக்கலை தானாகவே போய் அழைத்து வரும் என்று இந்த முடிவு. கண்மை போடக்கூடாது, பூவை அலங்காரமாகவெல்லாம் வைக்கக் கூடாது, பண்பாட்டைக் காக்கும் அளவில் வைத்தால் போதும், சத்தமாக பேசிக்கொண்டு வரக்கூடாது...

பள்ளியில் பிள்ளைகளை மொத்தமாகக் கூட்டி இந்தக் கட்டளைகளை எல்லாம் சொல்லி முடித்துக் கலையும்போது எல்லோருமே இத்தனை நாட்கள் மெத்தனமாக இருந்து விட்டதற்காக குற்ற உணர்வு கொள்ளத் தொடங்கி இருந்தோம். பெண்கள் பள்ளிதான் என்றாலும், அலங்காரங்களுக்கான வாய்ப்புகள் எங்குமே இருந்ததில்லை என்றாலும், இன்னும் எப்படி அடக்க ஒடுக்கமாக இருப்பது என்று பேசிக்கொண்டிருந்தோம். ‘தினமும் கொஞ்சமா கரியை அள்ளி மூஞ்சில அங்கங்க அப்பிட்டுப் போங்க’ என்று பக்கத்து வீட்டு அக்கா சொன்னதைக் கூட ‘செய்யலாமோ’ என்று ஒரு கணம் நினைத்தோம்.

பூஜைக்குக் கொடுத்த அந்தப் பெண்ணை மறுபடியும் பார்த்தேன். அடுத்த அறையில் இருந்த தெய்வத்தின் முன் தீவிரமான முகத்துடன் கும்பிட்டுக் கொண்டு இருந்தார். இப்போது நினைவில் தெளிந்து வந்து விட்டது. இதே போன்ற தீவிரமான ஆனால் கவலை தோய்ந்த முகம் அன்று. அப்போதுதான் திருமணம் ஆகி இருந்த இளம் ஆசிரியர். இரண்டு நாள் பள்ளி மூடப்பட்டு பின் திறந்த அன்று முதல் வகுப்பில் எங்களை பத்திரமாக இருக்கச் சொல்லி இருள் சூழ்ந்த முகத்தோடு கண்ணெல்லாம் சிவந்து கலங்கச் சொன்னது அவளைப் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் பின்னணியில் கேட்கும். ‘நாலஞ்சி பேராம், பிள்ளை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுச்சோ’... வேறொரு இடமாக இருந்திருந்தால் போய்ப் பேசி இருப்பேன். இப்போது எதுவுமே புரியவில்லை.

அக்கா பிள்ளையாரை வணங்கி முடித்து அடுத்த அறை நோக்கி நடக்க, பின்னால் கேட்டுக்கொண்டே போனேன்.

‘அவ வீட்ல இருந்து கட்டினதா? அவ ஞாபகமாவா?’

‘ஆமா, அவங்க அம்மா கனவில் வந்து சொல்லுச்சாம். நான் இங்கதான் வராகி ரூபத்துல இருக்கேன்னு. ரொம்ப வருசமாச்சே, உனக்குத் தெரியாதா? நிறைய ஆளுங்க வராங்க. சக்தி வாய்ந்த சாமி’.

அவள் சொன்னதை முழுக்க உள்வாங்கும் முன் அடுத்த சந்நிதியில் நின்றிருந்தேன். சட்டென்று யாரோ காலடித்தரையை இழுத்து விட்ட உணர்வு. திடுமென பெருவெளிச்சம் பாய்ந்து வெள்ளை இருட்டு சூழ்ந்த நிலை. உடலுக்கு வெள்ளிக் கவசம் சூட்டி இருப்பதாலா? இல்லை, அந்தச் சிலையை மனத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதற்கு முன் எந்த வராகி கோவிலுக்கும் போனதில்லை. ஆனால் வராகி சிலைகளை இணையத்தில் பார்த்திருக்கிறேன். இது ஏதோ மிக வேறுபட்டு இருந்தது. வெண்கலத்தால் ஆனா சிலை. மூக்குப் பகுதியில் சாற்றி இருந்த சிவப்பு எடுத்துத் தெரிந்தது. அதனால்தானா? இருக்கலாம். ஆனால் கண்களின் அலங்காரமும் அதில் தெரிந்த வெறிப்புமே கூட தனித்துதான் தெரிந்தது. மூக்குத்தியா போட்டிருக்கிறார்கள்? ஆமாம். கடவுள் சிலை என்பதைத் தாண்டிய ஒரு உணர்வு. ஒருவேளை என் மனக்குழப்பம்தானா? சுற்றி இருந்த அனைவரும் எந்த ஒரு கோவிலிலும் இருக்கும் மனநிலையோடுதான் நிற்கிறார்கள். முதல்முறையாக வருவதாலா? இல்லை என்பதும் உடனே தெரிந்தது.

வெளிச்சம் மங்கி மெல்ல மெல்ல எல்லாமும் இருளத் தொடங்கியது. கைகளை இறுக்கமாகக் கோர்த்து கும்பிடுவதான பாவனையில் நின்றேன். சட்டென்று வெளியே போக முடியாது. எப்படியாவது சில நிமிடங்களை நிதானமாகக் கடந்து விட வேண்டும்.  

எத்தனையோ சிறு தெய்வங்களின் கோவில்களுக்குப் போவதுண்டுதான். சுற்றி இருக்கும் பெரும்பாலான தெய்வங்கள் அகாலமாக வாழ்வு முடிந்தவைதான். குல தெய்வங்களே தீயில் பாய்ந்த அம்மன்கள்தான். இழிவையும் சுடுசொல்லையும் தாங்காது, பிள்ளைகளைத் தூக்கி எறிந்து தானும் கிணற்றில் விழுந்து மாண்ட நல்லதங்காள் கூட இதே கரிசல் நிலத்துகாரிதான்.

குலப்பெருமை காக்க உயிர்விட்ட எத்தனையோ சிறுதெய்வங்கள் குறித்து தேடிப் படித்திருக்கிறேன், ‘குலதெய்வமாக்கப் பட்டவர்கள்’ என்று கட்டுரை எழுதி இருக்கிறேன், இது குறித்து ஒரு பண்பலை உரையாடலில் கூட கலந்து கொண்டு பேசி இருக்கிறேன். ஆனால் பக்கத்து வகுப்பில் இருந்த, கூட விளையாடித் திரிந்த ஒரு சிறு பெண், சமகாலத்திலேயே கண்முன்னே தெய்வமாகி அமர்ந்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ விளங்கிக் கொள்ளவோ முடியவில்லை.

கவனத்தைத் திருப்ப கண்களை சிலையில் இருந்து அகற்றினேன். மேலே பெயர் எழுதப் பட்டிருந்தது. ‘அஷ்ட புஜ மகா வராகி’. அஷ்ட புஜம்... எட்டுக் கரங்கள்... ‘பொற்கரங்கள் பதினெட்டும் நம்மைச் சுற்றி வரும் பகை விரட்டும்’... எட்டுக்கரங்களே கூட போதுமானதாக இருந்திருக்கலாம்.

துடியான சாமி... துடியாகத்தான் இருக்க வேண்டும். ஊரெல்லாம் துடியான பெண் தெய்வங்கள்தான். தங்களுக்குக் கிடைக்காத நீதியை வேண்டுவோருக்கெல்லாம் வழங்கிகொண்டு...

மகாவின் வீடு வசதியானது. எல்லா சட்டப்போராட்டங்களையும் நடத்தி முடித்து, பின் பிள்ளைக்காக ஒரு கோவில் கட்டி எதோ ஒரு வகையில் அமைய முடிந்திருக்கிறது. எத்தனை கேவல்கள் காற்றோடு கரைந்திருக்கும்?! அல்லது மனதோடு பெண் தெய்வங்களாக முடிந்திருக்கும். இத்தனையையும் செய்து, சில வருடங்களில் வெளியே வந்து இயல்பாக வாழ்ந்து கொண்டிருப்பவன்களுக்கு இந்தக் கோவில் பற்றித் தெரியுமா? அவர்கள் வீட்டுப் பெண்களுக்காவது தெரிந்திருக்கும்தானே? 

‘வஞ்சிக்கப் பட்டவர்கள் மீட்பர்களாக ஆவது’ என்ற போகன் சங்கரின் ஒரு பதிவு எண்ணங்களின் இடையில் ஓடியது. யாருக்கு மீட்பு என்று தெரியவில்லை. வஞ்சித்தவர்களுக்கேவா? இல்லை உடன் இருந்தும் ஒன்றும் செய்யாமல் போனவர்களுக்கா?

கண்கள் மறுபடி வராகியை நோக்கித் திரும்பின. ஆறு கரங்களில் ஆயுதங்கள். இரு கரங்கள் அஞ்சலும் அருளலுமாக. அஞ்சுவதற்கானவை எல்லாப் பக்கங்களிலும் மீண்டும் மீண்டும் கிளைத்துக் கொண்டுதான் உள்ளன.

எதற்கு வராக உருவம்? பூமியைத் அகழ்ந்தெடுக்கவா? துளைத்துத் தூளாக்கி விடவா?

‘சரி கிளம்புவோமா?’ அக்கா சொன்னதும் அங்கிருந்து ஓடிவிடக் காத்திருந்த கால்கள் வேகமாகத் திரும்பின. கண்கள் தானாக மறுபடி ஒருமுறை வராகியை ஏறிட்டன.

பட்டுப்புடவை, மலர் அலங்காரம், காலில் கொலுசு கூட. முழுமையான அலங்காரத்தில் நிறைந்து இருந்தாள். வாயின் இரு ஓரங்களிலும் இருந்து வளைந்து மேலெழுந்த வீரப்பற்கள் வெண்மையில் மிளிர்ந்தன.

மகாவை எனக்குத் தனிப்பட்ட முறையில் பழக்கம் இல்லை. அவள் காணாமல் போவதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பு பள்ளி முடிந்து திரும்ப சைக்கிளை எடுக்க கூடைப்பந்து மைதானத்தைக் கடந்து போகும்போது அவளைக் கடந்துதான் போனேன். நான் எடுப்பதற்காக சில வினாடிகள் விளையாடுவதை நிறுத்தியவளைப் பார்த்து நன்றி சொல்லும் பாவனையில் புன்னகைத்தேன். அவள் மறுபடி மலர்ந்து சிரித்தபடி பந்தைத் தட்டிக்கொண்டே அகன்று போனாள். சிரிப்பு அழகாக இருந்ததாக நினைத்துக் கொண்டேன். 

அந்தச் சிரிப்பிற்கு அழகு சேர்த்த அவள் தெற்றுப்பல், நினைவின் அடுக்குகளுக்குள் இருந்து மின்னியது. மொத்த இருண்மையிலும் சிறுபொட்டு வெளிச்சமாக.



No comments: