2025-08-15

                                                                 தெற்றுப்பல்


உள்ளே நுழையும்போதே ஏதோ மாறுபாடாகப் பட்டது. கோவிலுக்கான வழக்கமான அமைப்பே இல்லை. எந்தப்பக்கம் போய் எந்தப்பக்கம் வருவது என்றே புரியவில்லை. கூடவே காரணமே இல்லாத மனப்பதட்டம். பதறிப்பதறி அமைவது என் உள்ளத்துக்கு ஒன்றும் புதிதில்லை என்றாலும்  ஒரு கோவிலுக்குள் நுழைவதற்கு ஏன் இப்படி?! ஏதாவது துர்சக்தி பீடித்திருக்கிறதா என்னை??

‘வெள்ளிக்கிழமைதான இன்னைக்கி, போற வழில வராகியம்மன் கோவிலுக்குப் போய்ட்டு போயிருவோம்’ என்று அக்கா சொன்னபோது எந்த எண்ணமுமே மனதில் இல்லை. ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு புகழ் பருவம் போல அப்போது எங்கு பார்த்தாலும் வராகி புகழ்தான். இணையத்தைத் திறந்தாலே எப்படியெல்லாம் வராகியம்மனுக்குப் பூசை செய்வது, விரதம் இருப்பது, அஷ்டகம் படிப்பது, அவள் மனம் இரங்கினால் எப்படி நம் பகைமை எல்லாம் பொடிப்பொடியாகிச் சிதறும் என்று காணொளிகளாக வந்து கொட்டின. உழைத்து, உண்டு, உறங்கி மிக எளிமையாக பிழைத்துக் கிடப்போருக்குமே கூட மனம் கசந்து, வெறுத்து, பெரும் சக்தியின் துணை கொண்டு நாசமாக்கி வென்று நிறைந்திட ஏதோ ஒரு பகைமை அவர்கள் வழியை அடைத்து நின்றது. இந்தக் கோவிலும் அந்தப் புகழின் விளைவு போல என்று நினைத்து இருந்தேன்.

முதல் அறைக்குள் பிள்ளையாரைச் சுற்றி எல்லாரும் திரண்டிருக்க, என் கண்ணில் முதலில் பட்டது சுவரில் இருந்த ஓவியம்தான். ஏதோ குமரி தெய்வம். கன்னியாகுமரி அம்மனா? இல்லையே, குமரி பகவதிக்கு பூப்பாவாடை, சட்டை போட்ட கோலமாகப் பார்த்தது இல்லை. சங்கரன்கோவில் கோமதி அம்மனுக்குத்தான் ஆடித்தபசு சமயம் இப்படி பூவாடை போட்டுப் பார்த்து நினைவு. இது கோமதியம்மன் மாதிரியும் தெரியவில்லையே. அந்த முகத்தில் எதுவோ இயல்பாக இல்லை என்பது மட்டும் தெரிந்தது.  

தொலைவில் இருப்பது மங்கத் தொடங்கும் நடு வயதாகி விட்டது. கூட்டத்தில் இருந்து மெல்ல விலகி படத்தின் பக்கம் போய்ப் பார்த்தேன். அந்த முகம் தெய்வங்களின் முகமாக இல்லை. மனிதத் தன்மை மிகுந்த, தெய்வம் போல் வரையப்பட்ட ஒரு ஓவியம். யாரோ ஒரு வளரிளம் சிறுமி. அதனால்தான் பாவாடை சட்டை.

அந்தப் படத்தின் மேலே எழுதி இருப்பதை கண்கள் வாசிக்கும் முன்னரே மனம் கண்டுகொண்டது. ‘மகாலஷ்மி அம்மன்’. ‘மகா...’ இது அவளா? முகம் அவள் மாதிரி இல்லை. ஆனால் அவளைத்தான் வரைந்து வைத்திருக்கிறது என்று உள்ளுணர்வுக்குப் புரிந்துவிட்டது. இவ்வளவு நேரம் மனம் அமைதி இல்லாமல் அலைந்ததன் காரணமும்.

பக்கத்தில் வந்த அக்கா மெதுவாகச் சொன்னாள்... ‘அது உன் ஸ்கூல்ல படிச்சதே... அந்தப் பொண்ணுதான்’. வேறு எதுவுமே அந்தப் படத்தில் எழுதி இருக்கவில்லை. அக்கா வண்டியை இந்தப் பகுதியில் இடதுபுறம் திருப்பும்போதே என் பதட்டம் ஆரம்பித்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். எப்போதும் கடந்து போகும் வழிதான் என்றாலும் ஒருநாளும் இந்தப்பக்கம் கண்களைக் கூட திருப்பியதில்லை.

‘இங்க என் இந்தப் படம் வைத்திருக்கிறது?’

‘இது அவளோட கோவில்தான். அவங்க வீட்ல இருந்து கட்டினது’

‘ஓ!’

இது அவள் பாட்டி வீடா? வீடாக இருப்பதால்தான் கோவில் அமைப்பு இல்லையா? இந்த வீட்டுக்குத்தான் அவள் அன்று வந்து கொண்டு இருந்தாளா? இன்று முழுக்க வீடுகளாக நிறைந்து கிடக்கிறதே... அன்று அவள் அலறல் கூட கேட்காதபடிக்கு அத்துவானக் காடாகக் கிடந்ததா இந்தப் பகுதி? இருக்கலாம். 25 வருடங்களுக்கு மேல் ஆகிறதே. அவள் மிதந்து கிடந்த கிணறும் இங்கேதான் எங்கோ பக்கத்தில் இருக்கிறதா? அதைச் சுற்றியும் வீடுகளாக ஆகிவிட்டனவா? அவள் சைக்கிள் விழுந்து கிடந்த வயல்காட்டுப் பகுதியும் இந்தப் பகுதிதானா? காலத்தில் முன்னும் பின்னுமாக ஊசலாடி கிறுகிறுத்து நின்றன எண்ணங்கள்.

‘அடுத்த வெள்ளிக்கிழமைக்கு பூஜைக்கு எழுதிக்கோங்க. சேலை நானே வாங்கிட்டு வந்துர்றேன். மத்த ஜாமான்லாம் நீங்க வாங்கி வச்சிருங்க’ என்று பணத்தை நீட்டிக் கொண்டிருந்த பெண்மணியை வெற்றுக்கண்களோடு நிமிர்ந்து பார்த்தேன். அவர் முகமெல்லாம் மலர்ச்சி. இந்தப் பெண்ணை எனக்குத் தெரியுமே... அதுவும் இந்த மாகாவோடு சம்பந்தப்படுத்தியே தெரியுமே...

இது யார்? அவள் அக்காவா? இல்லை, அவள் அக்காவை நான் பார்த்ததே இல்லை. அந்த அக்காவை வம்பிழுத்ததை எதிர்த்துப் பேசியதால்தான் அவளுக்கு இந்த நிலை நேர்ந்ததாக எங்களுக்குச் சொல்லப்பட்டது. அப்படி எதுவும் எங்களுக்கு நேராமல் இருக்க, சைக்கிளில் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் முன் சக்கரத்தை மட்டுமே பார்த்து ஓட்டும்படியும், வலிய வந்து யாராவது வம்பிழுத்தாலும் மூச்சுக் கூட விடாமல் வேகமாக அழுத்தி வீடு வந்து சேரும்படியும் அறிவுரைகள் சொல்லப்பட்டன.

‘யாரோ ஒரு ஒன்பதாம் வகுப்புப் பிள்ளை காணாமப் போயிருச்சாம்’ என்றுதான் பேச்சு ஆரம்பித்தது. கவலையை விட, அவள் ஓடிப்போய் திரும்ப வந்து நிற்கப் போகும் நிமிடத்தின் ஆர்வம்தான் எங்கும் தெரிந்தது. இரண்டாம் நாள் ஊரையே உறைய வைத்த செய்தி கிடைக்கும் வரை. செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த கிணற்றின் படம்... அதில் தெரிந்த பள்ளிச் சீருடை... நேற்று வரை பக்கத்து வகுப்பில் இருந்த பிள்ளை...

அவள் அழகாக இருந்ததுதான் காரணம் என்பது பரவலாகவே நம்பப் பட்டது. முழுநாளும் பள்ளியில் இருந்து விட்டு வீடு திரும்பும் ஒரு ஒன்பதாம் வகுப்புப் பிள்ளையிடம், ஆபத்தை விலைக்கு வாங்கும்படி எங்கோ அழகு வெளிப்பட்டிருந்ததன் குற்றம்தான் முதன்மையாகக் கருதப்பட்டது. மிச்சமிருக்கும் பிள்ளைகளை எப்படியெல்லாம் அடக்கமாக நடந்து கொள்ள வைப்பது என்பது பற்றித் தீவிரமாக விவாதித்து, துப்பட்டாவில் எட்டு ஊக்குகளைக் குத்திக்கொள்ள வேண்டும் என்பது முதல் கட்டளையாக விதிக்கப்பட்டது. ஏற்கனவே குத்தப்பட்டுக்கொண்டிருந்த மூன்று ஊக்குகளால் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. துப்பட்டாவின் இரு முனைகளும் காற்றில் பறந்து யார் மேலாவது பட்டால் அது சிக்கலை தானாகவே போய் அழைத்து வரும் என்று இந்த முடிவு. கண்மை போடக்கூடாது, பூவை அலங்காரமாகவெல்லாம் வைக்கக் கூடாது, பண்பாட்டைக் காக்கும் அளவில் வைத்தால் போதும், சத்தமாக பேசிக்கொண்டு வரக்கூடாது...

பள்ளியில் பிள்ளைகளை மொத்தமாகக் கூட்டி இந்தக் கட்டளைகளை எல்லாம் சொல்லி முடித்துக் கலையும்போது எல்லோருமே இத்தனை நாட்கள் மெத்தனமாக இருந்து விட்டதற்காக குற்ற உணர்வு கொள்ளத் தொடங்கி இருந்தோம். பெண்கள் பள்ளிதான் என்றாலும், அலங்காரங்களுக்கான வாய்ப்புகள் எங்குமே இருந்ததில்லை என்றாலும், இன்னும் எப்படி அடக்க ஒடுக்கமாக இருப்பது என்று பேசிக்கொண்டிருந்தோம். ‘தினமும் கொஞ்சமா கரியை அள்ளி மூஞ்சில அங்கங்க அப்பிட்டுப் போங்க’ என்று பக்கத்து வீட்டு அக்கா சொன்னதைக் கூட ‘செய்யலாமோ’ என்று ஒரு கணம் நினைத்தோம்.

பூஜைக்குக் கொடுத்த அந்தப் பெண்ணை மறுபடியும் பார்த்தேன். அடுத்த அறையில் இருந்த தெய்வத்தின் முன் தீவிரமான முகத்துடன் கும்பிட்டுக் கொண்டு இருந்தார். இப்போது நினைவில் தெளிந்து வந்து விட்டது. இதே போன்ற தீவிரமான ஆனால் கவலை தோய்ந்த முகம் அன்று. அப்போதுதான் திருமணம் ஆகி இருந்த இளம் ஆசிரியர். இரண்டு நாள் பள்ளி மூடப்பட்டு பின் திறந்த அன்று முதல் வகுப்பில் எங்களை பத்திரமாக இருக்கச் சொல்லி இருள் சூழ்ந்த முகத்தோடு கண்ணெல்லாம் சிவந்து கலங்கச் சொன்னது அவளைப் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் பின்னணியில் கேட்கும். ‘நாலஞ்சி பேராம், பிள்ளை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுச்சோ’... வேறொரு இடமாக இருந்திருந்தால் போய்ப் பேசி இருப்பேன். இப்போது எதுவுமே புரியவில்லை.

அக்கா பிள்ளையாரை வணங்கி முடித்து அடுத்த அறை நோக்கி நடக்க, பின்னால் கேட்டுக்கொண்டே போனேன்.

‘அவ வீட்ல இருந்து கட்டினதா? அவ ஞாபகமாவா?’

‘ஆமா, அவங்க அம்மா கனவில் வந்து சொல்லுச்சாம். நான் இங்கதான் வராகி ரூபத்துல இருக்கேன்னு. ரொம்ப வருசமாச்சே, உனக்குத் தெரியாதா? நிறைய ஆளுங்க வராங்க. சக்தி வாய்ந்த சாமி’.

அவள் சொன்னதை முழுக்க உள்வாங்கும் முன் அடுத்த சந்நிதியில் நின்றிருந்தேன். சட்டென்று யாரோ காலடித்தரையை இழுத்து விட்ட உணர்வு. திடுமென பெருவெளிச்சம் பாய்ந்து வெள்ளை இருட்டு சூழ்ந்த நிலை. உடலுக்கு வெள்ளிக் கவசம் சூட்டி இருப்பதாலா? இல்லை, அந்தச் சிலையை மனத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதற்கு முன் எந்த வராகி கோவிலுக்கும் போனதில்லை. ஆனால் வராகி சிலைகளை இணையத்தில் பார்த்திருக்கிறேன். இது ஏதோ மிக வேறுபட்டு இருந்தது. வெண்கலத்தால் ஆனா சிலை. மூக்குப் பகுதியில் சாற்றி இருந்த சிவப்பு எடுத்துத் தெரிந்தது. அதனால்தானா? இருக்கலாம். ஆனால் கண்களின் அலங்காரமும் அதில் தெரிந்த வெறிப்புமே கூட தனித்துதான் தெரிந்தது. மூக்குத்தியா போட்டிருக்கிறார்கள்? ஆமாம். கடவுள் சிலை என்பதைத் தாண்டிய ஒரு உணர்வு. ஒருவேளை என் மனக்குழப்பம்தானா? சுற்றி இருந்த அனைவரும் எந்த ஒரு கோவிலிலும் இருக்கும் மனநிலையோடுதான் நிற்கிறார்கள். முதல்முறையாக வருவதாலா? இல்லை என்பதும் உடனே தெரிந்தது.

வெளிச்சம் மங்கி மெல்ல மெல்ல எல்லாமும் இருளத் தொடங்கியது. கைகளை இறுக்கமாகக் கோர்த்து கும்பிடுவதான பாவனையில் நின்றேன். சட்டென்று வெளியே போக முடியாது. எப்படியாவது சில நிமிடங்களை நிதானமாகக் கடந்து விட வேண்டும்.  

எத்தனையோ சிறு தெய்வங்களின் கோவில்களுக்குப் போவதுண்டுதான். சுற்றி இருக்கும் பெரும்பாலான தெய்வங்கள் அகாலமாக வாழ்வு முடிந்தவைதான். குல தெய்வங்களே தீயில் பாய்ந்த அம்மன்கள்தான். இழிவையும் சுடுசொல்லையும் தாங்காது, பிள்ளைகளைத் தூக்கி எறிந்து தானும் கிணற்றில் விழுந்து மாண்ட நல்லதங்காள் கூட இதே கரிசல் நிலத்துகாரிதான்.

குலப்பெருமை காக்க உயிர்விட்ட எத்தனையோ சிறுதெய்வங்கள் குறித்து தேடிப் படித்திருக்கிறேன், ‘குலதெய்வமாக்கப் பட்டவர்கள்’ என்று கட்டுரை எழுதி இருக்கிறேன், இது குறித்து ஒரு பண்பலை உரையாடலில் கூட கலந்து கொண்டு பேசி இருக்கிறேன். ஆனால் பக்கத்து வகுப்பில் இருந்த, கூட விளையாடித் திரிந்த ஒரு சிறு பெண், சமகாலத்திலேயே கண்முன்னே தெய்வமாகி அமர்ந்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ விளங்கிக் கொள்ளவோ முடியவில்லை.

கவனத்தைத் திருப்ப கண்களை சிலையில் இருந்து அகற்றினேன். மேலே பெயர் எழுதப் பட்டிருந்தது. ‘அஷ்ட புஜ மகா வராகி’. அஷ்ட புஜம்... எட்டுக் கரங்கள்... ‘பொற்கரங்கள் பதினெட்டும் நம்மைச் சுற்றி வரும் பகை விரட்டும்’... எட்டுக்கரங்களே கூட போதுமானதாக இருந்திருக்கலாம்.

துடியான சாமி... துடியாகத்தான் இருக்க வேண்டும். ஊரெல்லாம் துடியான பெண் தெய்வங்கள்தான். தங்களுக்குக் கிடைக்காத நீதியை வேண்டுவோருக்கெல்லாம் வழங்கிகொண்டு...

மகாவின் வீடு வசதியானது. எல்லா சட்டப்போராட்டங்களையும் நடத்தி முடித்து, பின் பிள்ளைக்காக ஒரு கோவில் கட்டி எதோ ஒரு வகையில் அமைய முடிந்திருக்கிறது. எத்தனை கேவல்கள் காற்றோடு கரைந்திருக்கும்?! அல்லது மனதோடு பெண் தெய்வங்களாக முடிந்திருக்கும். இத்தனையையும் செய்து, சில வருடங்களில் வெளியே வந்து இயல்பாக வாழ்ந்து கொண்டிருப்பவன்களுக்கு இந்தக் கோவில் பற்றித் தெரியுமா? அவர்கள் வீட்டுப் பெண்களுக்காவது தெரிந்திருக்கும்தானே? 

‘வஞ்சிக்கப் பட்டவர்கள் மீட்பர்களாக ஆவது’ என்ற போகன் சங்கரின் ஒரு பதிவு எண்ணங்களின் இடையில் ஓடியது. யாருக்கு மீட்பு என்று தெரியவில்லை. வஞ்சித்தவர்களுக்கேவா? இல்லை உடன் இருந்தும் ஒன்றும் செய்யாமல் போனவர்களுக்கா?

கண்கள் மறுபடி வராகியை நோக்கித் திரும்பின. ஆறு கரங்களில் ஆயுதங்கள். இரு கரங்கள் அஞ்சலும் அருளலுமாக. அஞ்சுவதற்கானவை எல்லாப் பக்கங்களிலும் மீண்டும் மீண்டும் கிளைத்துக் கொண்டுதான் உள்ளன.

எதற்கு வராக உருவம்? பூமியைத் அகழ்ந்தெடுக்கவா? துளைத்துத் தூளாக்கி விடவா?

‘சரி கிளம்புவோமா?’ அக்கா சொன்னதும் அங்கிருந்து ஓடிவிடக் காத்திருந்த கால்கள் வேகமாகத் திரும்பின. கண்கள் தானாக மறுபடி ஒருமுறை வராகியை ஏறிட்டன.

பட்டுப்புடவை, மலர் அலங்காரம், காலில் கொலுசு கூட. முழுமையான அலங்காரத்தில் நிறைந்து இருந்தாள். வாயின் இரு ஓரங்களிலும் இருந்து வளைந்து மேலெழுந்த வீரப்பற்கள் வெண்மையில் மிளிர்ந்தன.

மகாவை எனக்குத் தனிப்பட்ட முறையில் பழக்கம் இல்லை. அவள் காணாமல் போவதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பு பள்ளி முடிந்து திரும்ப சைக்கிளை எடுக்க கூடைப்பந்து மைதானத்தைக் கடந்து போகும்போது அவளைக் கடந்துதான் போனேன். நான் எடுப்பதற்காக சில வினாடிகள் விளையாடுவதை நிறுத்தியவளைப் பார்த்து நன்றி சொல்லும் பாவனையில் புன்னகைத்தேன். அவள் மறுபடி மலர்ந்து சிரித்தபடி பந்தைத் தட்டிக்கொண்டே அகன்று போனாள். சிரிப்பு அழகாக இருந்ததாக நினைத்துக் கொண்டேன். 

அந்தச் சிரிப்பிற்கு அழகு சேர்த்த அவள் தெற்றுப்பல், நினைவின் அடுக்குகளுக்குள் இருந்து மின்னியது. மொத்த இருண்மையிலும் சிறுபொட்டு வெளிச்சமாக.



2023-09-16

அன்னை இட்ட தீ

 ‘‘என்ன ரங்கம்மா, இவ்ளோ நேரமாகிப் போச்சி… உன்னப் பாத்துதான் காத்துக்கிட்டிருக்கோம். மதுர வர போய்த் திரும்பணும்ல… ஆற அமரவும் வர முடியாது. வந்து ஒன்னய அனுப்பனும்… நிம்மதியா ஒரு வேலை ஆகுதா?’’ காசெதுவும் வாங்காமல் புண்ணியத்துக்கு வருபவளிடம் உரத்தும் சொல்ல முடியாத புலம்பல் தொடங்கியது.


வந்து இறக்கி விட்ட மகன் வண்டியைத் திருப்பும் முன்னரே வந்த அங்கலாய்ப்பைக் கேட்டுக்கொண்டே ‘‘நானே சாயங்காலம் வந்துர்ரன் தம்பி’’ என்று சொல்லத் திரும்பி, அவனது ‘இது தேவையா ஒனக்கு’ பார்வையைப் பெற்றுத் திரும்பி வீட்டுக்குள் விரைந்தாள் ரங்கம்மா.

‘யம்மா, தனியாக் கெடந்து பாடுபட்ட காலமெல்லாந்தான் சீரழிஞ்ச… இப்பதான் நல்லாயிருக்கம்ல… பேரம் பேத்திகளே தலையெடுக்குற காலம்… நிம்மதியா ஒக்காந்து கிட்ணா ராமான்னு இருக்காம வயசானவகளப் பாக்குற வேலை தேவையா இப்ப?’

எத்தனை முறை மகன் வைதாலும் ஒரே பதில்தான் ரங்கம்மாவிடம் இருந்து வரும். ‘யய்யா, தாயாரம்மாக்கு நான் பட்ட கடனை எப்படியும் தீக்க முடியாது. இது என் மனசு திருப்திக்குத்தான். இந்த விசயத்துல மட்டும் என்னத் தட சொல்லாத.’


அன்னை இட்ட தீ - சிறுகதை
ஓவியங்கள்: ரமணன் (விகடன்)

அதற்கு மேல் எதுவும் பேச முடியாது. டவுனில் குடிபோன பிறகு எடுத்தேறி வர முடியாததால் மூன்று நாள்களுக்கு ஒரு முறை வந்து குளிப்பாட்டி, பவுடர் அடித்து, சாப்பாடு கொடுத்து, நகம் வெட்டி விட்டு சாயங்காலமாகத் திரும்புவது வழக்கம். மற்ற நாள்களில் வீட்டாள்கள் பாடுதான்.

‘‘ரங்கம்மா, அடுப்படில அரிசி எடுத்து வச்சிருக்கேன், தண்ணியாக் கஞ்சி வச்சுக்குடு. போன தடவை ஒம்பாட்டுக்க நெறய அரிசி போட்டு கெட்டியாக் குடுத்துட்டுப் போய்ட்ட… அடுத்த ரெண்டு நாள் நாங்க சீப்பட வேண்டியதாப்போச்சி. இந்த எளவெடுத்த பட்டிக்காட்ல வேலைக்கி ஆள் கெடைக்கிதா, இல்ல நமக்குத்தான் முடியுதா? மத்த எல்லாரும் அங்கங்க டவுன்ல போய் பதுங்கிட்டாக. நீகூடப் பாரு, மகன், பேரம் பாக்கவும் சாத்தூருக்குப் போய்ட்ட. இந்த மனுசனக் கெட்ன தலையெழுத்து… இன்னும் மண்ணக் கிண்டிக்கிட்டு இங்கயே கெடக்க வேண்டி இருக்கு. இதான் சாக்குன்னு எங்க தலையில கட்டிட்டாக. காலக் கெட்டிப் போட்டாக்கூட லேசா அசஞ்சிக்கலாம் போல, இந்தப் பெருச விட்டு எங்கிட்டும் நகர முடியல… நம்ம தலையெழுத்து…’’

பேசிக்கொண்டே போன அம்மாவை அவள் மகள் கடுப்பாக இடைமறித்தாள். ‘செரி வந்து கார்ல ஏறும்மா… ஏற்கெனவே லேட்டு.’

வண்டி கிளம்பும்வரை பார்த்துவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு தளர்ந்து வீட்டினுள் நடந்தாள் ரங்கம்மா.

அசைவு தெரிந்து மெல்லக் கண்களைத் திறந்து, ‘‘களையெடுப்பு முடிச்சிட்டுதான் வந்தியா’’ என்றாள் தாயாரம்மா. இரண்டு வருடங்களாகவே அவளுக்குக் கால சிந்தனை நேர்க்கோட்டில் இல்லை. பெரும்பாலும் அவள் சம்சாரியாக இருந்த காலத்திலேயே தங்கி இருக்கும். வெகு அரிதாக நிகழ் காலத்திற்கு வரும்.

அப்படி வரும்போது பெருகும் வேதனை தாங்க இயலாது அவள் மனமே அவளைப் பழைய நாள்களுக்குக் கூட்டிப் போய்விடும் போல. ‘‘ஆமாம்மா, முடிச்சி அய்யா பாத்தி கட்டிக்கிட்டு இருக்காரு. நான் இந்தப் பக்கம் வந்துட்டேன்…’’ அவள் காலத்துக்கே போய்ப் பேசுவது ரங்கம்மாவுக்கும் கொஞ்சம் சமாதானமாக இருந்தது. கரிசல் மண்ணைப் பொன்னாக்கிப் பாடுபட்ட அய்யா கொஞ்சம் கொடுத்து வைத்தவர். வைகுண்டம் ஏகிப் பத்து வருடங்களாகிப்போனது.

இன்றைக்கு சிமெண்ட் போட்டு ஈரம் இறங்காது நிற்கும் இதே தெருவில், இந்த வீட்டின் ஈரம் சுரந்த வாசற்படியில் எத்தனை முறை நடந்து திரிந்திருக்கும் ரங்கம்மாவின் கால்கள்.

சாத்தூரில் கட்டிக்கொடுத்து, இரண்டே வருடங்களில் வெள்ளைச்சீலையோடும் கைப்பிள்ளையோடும் தாயில்லாத தாய் வீட்டுக்குத் திரும்பி வருகையில் ரங்கம்மாவுக்குப் பதினேழு வயது. மலங்க மலங்க முழித்துக்கொண்டு சில நாள்களைக் கடந்த பின், பிள்ளையையும் இடுக்கிக்கொண்டு தகப்பனோடு காட்டு வேலைக்குக் கிளம்பினாள். ஊரிலேயே பெரிய சம்சாரியான கார வீட்டுக்காரர் காடு அவளுக்கு இடமில்லை என்றா சொல்லும்.

காட்டுக்குள் நின்ற மங்கத்தாயாரு, கைப்பிள்ளையோடு இவள் வருவதைப் பார்த்து விரைந்து வந்தாள். ‘ரங்கா, உன் நிலமையும் இப்படி ஆகிப்போச்சே… சரி, கலங்காத… பயல வச்சிக்கிட்டு காட்டுக்கு வரவேணாம். நம்ம வீட்ல பயறு திரிக்க, அரிசி குத்தன்னு நெறய வேல கெடக்கு… பிள்ளையத் தொட்டில் கட்டிப் போட்டு நெனல்ல வேலையப் பாரு…’ என்று அனுப்பி வைத்தாள். திரும்பி நடக்கையில், ‘பொழுதுசாய மறக்காம வந்து பிள்ளைக்குச் சோறு எடுத்துட்டுப் போ’ என்ற குரல் தொடர்ந்து வந்தது. பிள்ளை இடுப்பளவு வளரும் வரை காட்டு வேலைக்குப் போனதில்லை.

இதே தெருதான்… இன்றைக்கு டைல்ஸ் போட்ட இதே வீடு இருக்கும் இடத்தில் இருந்த காரை வீட்டு முற்றத்தில்தான் சாயங்கால நேரங்களில் நெய் மணந்து தெருவையே நிறைக்கும்.

மங்கத்தாயாரு திருமணமாகி வருகையில் ரங்கம்மா ஏழெட்டு வயது நிரம்பிய சின்னப்பிள்ளை. பெரிய வீட்டுக்கு வரும் மருமகளைப் பார்க்க ஊரின் எல்லையிலேயே போய் நின்று மாட்டு வண்டியில் பின்னாலேயே ஓடி வந்த பொடுசுகளில் அவளும் ஒருத்தி.

மனைவியை அகாலத்தில் இழந்த காரைவீட்டுப் பெரியய்யா, அவர் மக்களோடு வீட்டை ஆளப் பெண் இல்லாது தவித்துக்கொண்டிருந்த காலத்தில் வெயிலுக்குப் பதினியாக வந்து சேர்ந்தாள் மங்கத்தாயாரு. தளர்ந்து கிடந்த பெரியய்யாவின் தாயாருக்கும் தனித்தெம்பு வந்தது. ‘எங்க குலம் விளங்க வந்து சேர்ந்தியே தங்கமே… வீட்டுக்குப் பின்னால் போய் அக்கம்மாவுக்கு உன் கையால விளக்கேத்தி வை… நீளாயுளோட நிறைஞ்சு வாழணும்’ என்று நெகிழ்ந்தாள்.

வந்து சேர்ந்த சில வருடங்கள், இரண்டு மகன்கள், இரண்டு பெண்கள் என பிள்ளைக் காலமாகவே ஓடிப்போனது. விளக்குக்குத் திரி திரிக்கும்போது திடீரென ஒரு நாள் முழிப்பு வந்தவள் போல் கேட்டாள். ‘ஆமா, எதுக்கு அக்கம்மாவுக்கு நாம வீட்டுக்குப் பின்னால விளக்கேத்தறோம்? இங்க எதுவும் மாடு முட்டி இறந்த பெண்ணா?’

‘அட பெண்ணே, ஒனக்கு அந்தக் கதையை இன்னும் நான் சொல்லலையா?’ என்று ஆரம்பித்தார் பாட்டியம்மா.

‘ஒன்னையும் என்னையும் போல இந்த வீட்டுக்கு மருமகளா வந்தவதான் அக்கம்மா… பிறந்த வீட்டுக்குச் செல்லப்பெட்டி. அருமையாக வளர்ந்த ஒற்றை மகள். தாயில்லாத பிள்ளையாதலால் சாப்பிட்ட தட்டைக்கூட எடுத்து வைக்க விடாமல் தகப்பனாரும் அண்ணன்மாரும் வளர்த்தார்கள். அவ்வளவு செல்லத்திலும் குணத்தில் குறையாத, கொஞ்சமும் அதிர்ந்துபேசாத பெண். இந்த ஊரிலேயே பெரிய வீட்டில், முதல் மருமகளாகக் கட்டிக் கொடுக்கிறோம் என்ற பெருமிதத்தில் கட்டிக் கொடுத்த அவள் தகப்பனாருக்கு, அதுதான் பெரிய வினையாகப் போகிறதுன்னு தெரியலை.

தினமும் வீட்டில் வடிக்கும் சாப்பாட்டுக்கு கம்போ பிற தானியங்களோ குத்த வேண்டியது இவள் வேலை. வேலையாட்கள் எல்லாம் காட்டுக்கு மட்டும்தான்.

அன்னை இட்ட தீ - சிறுகதை

அவள் கணவனையும் சேர்த்து வீட்டில் ஐந்து ஆண்களுக்கு, காட்டு வேலை, கால்நடை கவனிப்பு என்று திரிந்து வீடு திரும்பும் வயிறுகளுக்கு தினமும் வட்டிலில் குமித்து வைத்துச் சோறிட வேண்டும். சமையலும் பிற வேலைகளும் அத்தையம்மா பார்த்துக் கொண்டாலும், வீட்டில் வடிக்கிற சோற்றின் அளவுக்கு நாளெல்லாம் உரலோடு மல்லுக்கட்ட வேண்டும். கன்றுக்குட்டியைப் பிடித்து நுகத்தடி மாட்டினாற்போல ஒரு நிலைமை அக்கம்மாவுக்கு.

இந்த வேதனையை மேலும் பெரியதாக்கி விடுவது, தினமும் இரவு கால் வயிற்றோடு உறங்க வேண்டி இருக்கும் நிலைதான். வடித்த மொத்தச் சோற்றையும் பெரிய குண்டானில் வைத்துப் பரிமாறுவதற்கு வைத்துவிட்டு, தன் கணவருக்குப் பரிமாறிய கையோடு தானும் உண்டுவிட்டு அத்தையம்மா உறங்கப் போய்விடுவார். அடுத்து உண்ண வரும் இளவட்டங்களுக்கு ஆனது போக மிச்சமிருப்பது ஒரு கைச் சோறுதான். கூடக் கொஞ்சம் சேர்த்து ஆக்கச் சொல்லிச் சொல்வது சின்னத்தனமாகப் போகுமே என்று பெரும் தயக்கம்.

அவள் வயிற்றில் அனல் எரிய உறங்கப் போவது யாருக்குமே தெரியவில்லை. தன் தகப்பனார் கிண்ணத்தோடு சுடுசோற்றில் கவிழ்த்துப் பிசைந்து தரும் நெல்லரிசி நெய்ச்சோற்றின் நினைப்போடு ஒவ்வொரு இரவும் கழியும்.

ஆறேழு மாதங்கள் வரை தனக்குத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு வேலையைத் தொடர்ந்தாள் அக்கம்மா. பசி தாங்க முடியாமல் மாட்டுக்கு வைப்பதற்கான பருத்திப் பிண்ணாக்கை யாரும் அறியாமல் ஒரு கை அள்ளித் தின்றுவிட்டு இரண்டு நாள்கள் வயிற்று வலியால் அவதிப்பட்டாள். பிறந்த வீடு திரும்பலாம் என்று வேதனை பொங்கி வந்தாலும் அப்பாவுக்கு அவமானமாச்சே என்று மருகி அமைதியாவாள். அவள் வேதனையை அறிவார் யாருமில்லை.

எதுவுமே சமாதானமாகாத, வலியையும் பசியையும் தவிர வேறேதும் அறிய முடியாத ஒரு பின்னிரவில் அக்கம்மா ஓடிப்போய் வீட்டுக்குப் பின்னிருந்த கிணற்றில் குதித்துவிட்டாள்.

அதிர்ந்துபோன வீட்டினருக்கு, காரணம் புலப்படவே இல்லை. இரண்டு நாள்கள் முன்னர் ‘இனியும் இந்த உரலோடு மல்லுக்கட்ட ஏலுமான்னு தெரியலை…’ என்று லேசாகப் புலம்பியதை மாட்டுக்குப் புல்லறுத்துப் போட வந்த சீனித்தாய் சொன்ன பின்னர்தான் புரிந்தது.

அவள் போய்ச்சேர்ந்த பின்னர்தான், நாலு நாளாவது கூட்டிக் கொண்டு போய் நெய்ச்சோறு ஆக்கிப் போடச்சொல்லிச் சொல்லி விட்ட தாக்கல் தகப்பனாருக்குப் போய்ச் சேர்ந்தது. அதைச் சத்தமாகச் சொல்லியழுதால் சம்பந்தக்காரர்களுக்கு மிதமாகிப்போகுமே என மனசுக்குள் கதறியழுதுவிட்டுப் போனார்.

இப்படி ஆகிப்போச்சே என்ற பெரும் வருத்தத்தில் அதோடு அந்தக் கிணற்றை மெத்திப் பீடம் கட்டினார்கள். அவர்தான் நம் வீட்டுத் தெய்வம். இன்றைக்கு வரை நெய் விளக்கேத்தி மனசைத் தேத்திக்கொள்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தெய்வமாவது இப்பிடி ஏதாவது ஒரு காரணத்தால்தான்’ சொல்லிப் பெருமூச்சு விட்டாள் பாட்டி.

‘இப்படிப் பசியோடும் வலியோடும் இங்க வாழ வந்த பிள்ளை மாண்டுபோனதே’ என மங்கத்தாயாருக்கு துக்கம் தாளவில்லை. ‘விளக்கேத்தி வச்சி அவள் மனசு ஆறுமா? இல்லை நாமதான் சமாதானப்படலாமா?’ ஒரு வாரமாக யோசித்து, கணவரிடம் பேசினாள்.

எப்போதாவது ‘பிள்ளைச் சோறு’ கேட்டுத் தயங்கி நிற்கும் பெண்களுக்கு அதன் பிறகு காரைவீடு அமுத சுரபியானது. தினமும் வயல் விட்டுத் திரும்பும் நேரத்தில் காரை வீட்டை ஒட்டிய சிறுவீட்டுத் திண்ணையில் சுடச்சுட நெல்லரிசிச் சோறு ஒரு ஆள் தூக்க முடியாத பானை நிறைய வைக்கப்பட்டிருக்கும். பக்கத்திலேயே பெரிய சட்டி நிறைய கடைந்த மணமான பருப்பும், பெரிய தூக்கு நிறைய நெய்யும், அப்போதுதான் கறந்து வைத்த பசும்பாலும்.

பிள்ளைச்சோறு காய்ச்சவே தனி ஆள் போட்டுத் தயாரானது.

யாரையும் கேட்க வேண்டியதில்லை. வேண்டுமளவு பிள்ளைகளுக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த நேரங்களில் வீட்டு ஆட்களோ வேலை ஆட்களோ அந்தப் பக்கம் நடமாடக் கூடாது என்பது மங்கத்தாயாரின் ஆணை. அறிந்தோ அறியாமலோ, சோறு எடுக்கும் கைகளைத் தயங்கச் செய்துவிடக் கூடாது.

அலுத்துச் சலித்து வயல்வேலை முடித்து வரும் தாய்மாருக்கெல்லாம் ‘யம்மா பசிக்கி பசிக்கி’ என்ற குரல்களை அமத்தி அரக்கப்பறக்கக் கஞ்சி காய்ச்சவோ, பாதிப் பசியோடு பிள்ளைகளை அமட்டி உறங்க வைக்கவோ தேவையே இல்லாமற்போனது.

பிள்ளைச்சோறு எடுக்க அடுத்த பிள்ளையை வயிற்றில் சுமந்து வரும் தாய்மாருக்கு ‘பெரிய சட்டியா எடுத்துட்டு வந்து வயித்துப்பிள்ளைக்கும் சேத்து எடுத்துட்டுப் போ’ என்ற அதட்டல் வந்து விழும்.

கூடாரவல்லிக்கு ஊர்ப் பெரிய சம்சாரிகளெல்லாம் பெருமாளுக்குப் படைத்து விட்டு ஆண்டாளைப் பார்க்க வண்டி கட்டிப் போகும் நேரத்தில், காரை வீட்டுத் திண்ணையில் சிறு அண்டா நிறைய சர்க்கரைப் பொங்கல் பொன்னொளிர வந்து அமரும்.

வெய்யக்காலங்களில் மோரும் பானக்கரமும் பாதி ஆளுயர மண்பானைகளில் காலையில் இருந்து காத்துக் கிடக்கும். இருக்கங்குடிக்கு நடந்து போகும் ஆட்களெல்லாம் சாலையில் இருந்து ஓரெட்டு விலகி தாகந்தீர்த்துவிட்டுப் போவார்கள்.

வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டாலும்கூட ஒருநாள் விடாது எரியும் அணையா அடுப்பாக மங்கத்தாயாரு முதல் நாள் இட்ட தீ எரிந்தது.

அடுப்பெரிக்கும் விறகு குமிக்க, பிள்ளைச்சோறுக்கான அரிசியும் பருப்பும் ஒதுக்க, நெய்க்கும் பாலுக்கும் என்று கூட இரண்டு பால்மாடுகள் வாங்கிவிட என்று மங்கத்தாயாரின் கணவரும் நிறை மனதோடு அனைத்தையும் செய்து கொடுத்தார்.

அக்கம்மாவின் விளக்கு மிகப் பிரகாசமாக எரிவதாகப் பட்டது அவருக்கு. விளக்கு நெய்யா அவ மனசத் தணிச்சிருக்கும்?!

பொன் நிறையாத காரை வீடுகள் குறைவே… ஆனால் குணம் எல்லாருக்குமா நிறைந்து இருக்கிறது?! மங்கத்தாயாரு அதற்குப்பின் ஊருக்கே தாயாரம்மாதான்.

‘‘தண்ணி… தண்ணி… கெஞ்சி… கெஞ்சி…’’ அடுப்படியில் நிற்கும்போதே மனதை அறுப்பது போல குரல் கேட்டது. நைந்து கிடக்கும் அந்த மொத்த சீவனும் தன்னைத் திரட்டிப் பேசுவது பெரும்பாலும் இந்த ஒரு கெஞ்சலைத்தான்.

‘தண்ணியாகக் கிடக்கும் கஞ்சியை எடுத்துக் கொண்டு போய்த் தரணுமே… கொஞ்சம் கூழாகக் கொடுத்தாலும் தன்னையும் போய்ச்சேரவும் வழியற்றுக் கிடக்கும் உயிரையும் சாபங்கொடுத்து வசவு விழும். பெருமாளே… இப்படியும் ஒரு வேதனையான நிலையைப் பார்க்க வச்சிட்டியே’ மனது உடைந்து கட்டிலில் கிடக்கும் சிறுத்த உருவத்தை நோக்கி நடந்தாள் ரங்கம்மா.

‘‘நீ வரப்ப தாற கஞ்சி கொஞ்சம் தாங்குது’’ குழறி வந்த குரல் நிகழ்காலத்தில் இருந்தது. பசியையும் தாகத்தையும் மட்டுமே அறியும் உயிரின் தவிப்புக் குரல்.

எத்தனை வயிறுகள் வாழ்த்தியிருக்கும்… எத்தனை வறண்ட நாவுகள் போற்றியிருக்கும்… மூத்திர வாடைக்குள் பசித்து வெறும் வெளியைத் துழாவும் இந்தக் கைகள்தானே இதே இடத்தில் முழங்கை வழிவார நெய் பெய்து அள்ளி அள்ளித் தந்து பசியாற்றியது…

வானம் மங்கும் வேளையில் வீட்டார் வந்து சேர, சொல்லிக்கொண்டு புறபட்டாள் ரங்கம்மா. கட்டிலில் குனிந்து ‘‘யம்மா, போய்ட்டு வாரேன். ரெண்டு நாள் செண்டு வாரேன்’’ என்று உரத்துச் சொல்லி, தலையசைப்பை பதிலாகப் பெற்றுக் கொண்டு திரும்பினாள் ரங்கம்மா.

நாலெட்டு எடுத்து வைக்கவும் பின்னாலிருந்து தீனமாகக் குரல் கேட்டது…

‘‘ரங்கா, ஏனம் கொண்டு வரலேன்னா இங்க இருந்து எடுத்துக்கோ. மறக்காம பிள்ளைக்குச் சோறு எடுத்துட்டுப் போ...

2023-09-09

வெற்றுத்தளம்

  

‘அம்மா… பிரவுன் பூனேஏஏஏஏய்’ சாப்பாடு வைக்க வருபவரை எதிர்பார்த்துக் காத்திருந்த பூனைகள் சின்னவளின் சத்தம் கேட்டு லேசாக கழுத்தைத்தூக்கிப் பார்த்து விட்டு மறுபடியும் தூக்கத்தைத் தொடர்ந்தன. அக்காவின் பள்ளி வாகனம் வரும் வரை காத்திருக்கத்துணை இந்தப் பூனைகள்தான். சிங்கப்பூர் நகரம் முழுக்க அமைதியாக, ஆணவமாக நிறைந்து திரியும் குடியிருப்பாளர்கள்.

உறைமோர் வாங்கக் கூட வழியற்ற இந்தப் பெருநகரில் வெளிறிப்போன இந்தப்பகல், தனிமையின் அடர்த்தியைத் தன் பங்கிற்குச் சற்று உயர்த்தி கருணையற்று வெறிக்கிறது.

கடந்த வருடம் வரை இப்படி இல்லை. கூடிப் பேசும் முதியவர்கள் இல்லாத அடுக்கக வெற்றுத்தளங்களையே நினைத்துப் பார்க்க இயலாது.  பெருந்தொற்று தொடக்கத்திலிருந்து அவரவர் கூடுகளுக்குள் இன்னும் இறுக்கமாகச் சுருண்டுகொள்ள, பெரியவர்களுக்கு வீட்டில் முடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. பூனைகளைப் போலவே இந்நகர முதியோரும்… எங்கும் நிறை ஒளியாக… அல்லது இருளாக.

வாழ்வெல்லாம் நின்று, ஓடி உழைத்ததில் வெளிப்பக்கமாக வில்லாக வளைந்து கிடக்கும் கால்களுடன், ஒன்றுமே செய்யத் தேவையில்லாத முழு நாளை என்ன செய்யவென்று தெரியாமல் கம்பு ஊன்றித் திகைத்து நோக்கிக் கொண்டிருப்போர் சிலர். பேரப்பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு, குழந்தைகளின் தள்ளு வண்டியின் தயவிலேயே நடந்து திரிவோர், பேட்டரி வண்டிகளின் துணை கொண்டு கடைகளுக்குப் போய் வருவோர், அதிகாலையிலேயே குழுவாக தாய்ச்சீ செய்து கொண்டிருப்போர், தாதிப் பெண்கள் தள்ளி வரும் சக்கர நாற்காலிகளில் உயிரே இல்லாத கண்களுடன் வெறுமையை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருப்போர், அதிதீவிரத்துடன் உடற்பயிற்சிக் கருவிகளில் இயங்கிக் கொண்டு அல்லது வியர்க்க விறுவிறுக்க ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு இருப்போர்…

‘அம்மா… தாத்தால்லாம் காணோம்?’ – என் அப்பாவைப் போன்ற சாயல் கொண்ட தாத்தாவைத் தேடுகிறது பிள்ளை. எதிர்ப்படும்போதெல்லாம் ‘ஹல்லோஓஓஓ’ உற்சாகமாக ஆரம்பித்து தொடர்ந்து குறைந்தது ஐந்து நிமிடங்களாவது பேசிக் கொள்வோம். வேடிக்கை என்னவென்றால் எனக்கு சீனமோ மலாயோ தெரியாது, அவருக்குத் தமிழ் தெரியாது. ‘ஹலோ அங்கிள், மக்கான் ரெடி? (சாப்பிட்டாச்சா)’ என தமிழர்களின் வழக்கமான எனது விசாரிப்பில் ஆரம்பித்து, ‘சாப்பாடு வாங்கத்தான் போகிறேன், பிள்ளை பள்ளிக்குப் போய்விட்டாளா? இன்று பெரிய மழை வரும், கால் முட்டுகளில் கடும் வலி, தொழுகைக்குப் போகிறேன், பிள்ளைக்கு மருத்துவரிடம் போகிறோம்’ என்று அனைத்து உரையாடலும் புரியும் விதமான சைகையில்தான். பிண்ணனி இசை போல அவரது மலாயும் என் ஆங்கிலமும் ஒலிக்கும்.

சக்கர நாற்காலியில் தினமும் முதியோர் நிலையத்துக்குப் பகலைக் கழிக்கச் செல்லும் அவரது மனைவி எதிர்ப்பட்டாலே ‘தங்கச்சீ, என்ன சாப்பாடு’ என்று முகம் மலர வருவார்.  இளவயதில் மலேசியத்தோட்டங்களில் வசித்த போது தமிழர்களிம் கற்றுக் கொண்ட சிலபல சொற்களில் அவருக்குப் பிடித்தமானது ‘தங்கச்சீ’தான் என்று தோன்றும். ‘அவளுக்கு முதியோர் இல்லத்தில் தான் நண்பர்கள், எனக்கு எல்லா இடத்தும் நண்பர்கள்தான்’ என்று பெரியவர் பெரிதாகச் சிரிப்பார். தாத்தா பாட்டியை தொலைபேசி வழியாக மட்டுமே காணும் பிள்ளைகளுக்கு இங்கு இவர்கள்தான் தாத்தாவும் பாட்டியும்.

‘தாத்தா வீட்ல தூங்குறாங்க போல…’ என்று பிள்ளைக்குப் பதில் சொல்லும்போதுதான் யோசித்தேன், யாருமே வெளியில் வராத ஊரடங்குக் காலங்களில் ஒரே முறை அவர்களைப் பார்த்ததுதான்… கட்டுப்பாடுகளில் தளர்வு வந்துமே தட்டுப்படவில்லையே… சட்டென ஒரு பெரும்பயம். ஒருவர் விடாது கொரோனா விதைத்துப் போனது இந்தப் பயத்தைத்தான். கொஞ்ச தூரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த நான்கைந்து முதியவர்களிலும் பெரியவர் இல்லை. மகன் வீடு இரண்டு பிளாக் தள்ளி இருப்பதாகச் சொன்னார்கள்… அங்கு போயிருப்பார்களோ…’

கைப்பேசியிலேயே தம்மைப் புதைத்துக் கொள்ளும் இளவயது, நடு வயது ஆட்கள் போலன்றி, மின் தூக்கியில் பிள்ளைகளோடு நின்றால் உடன் வரும் எந்த முதியவரும் இரண்டு சொற்கள் புன்னகைத்து விசாரிக்காமல் கடக்க மாட்டார்கள். உலகை தம் கண்கொண்டு நேராகப் பார்க்கும் தலைமுறை அவர்களோடு முடிந்து போகும் போல. அந்தக் கண்களைச் சந்திக்கும் ஆளின்றி, அவர்களும் மிட்டாய் உடைக்கும் விளையாட்டுகளில் மூழ்கிப் போவதையும் காணலாம்.

பணத்துக்குக் குறைவில்லாத முதுமைக் காலம் இங்கு அத்தனை பெரிய சிக்கல் இல்லை. பணிப்பெண் துணையுடன் சிங்கையின் கேசினோக்களில் மணிக்கணக்கில், ஆயிரக்கணக்கான டாலர்களுக்கான வில்லைகளுடன் சக்கர நாற்காலிகளிலேயே அமர்ந்து சுற்றி வரலாம். ஆற்றோர கேளிக்கைக் கூடங்களில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டே வாழ்வின் இறுதிக்கால இனிமையைக் கொண்டாடலாம், அக்கம்பக்க முதியோருடன் விளையாட்டுகளில் களிக்கலாம்…. இவர்கள் யாருடைய முதுமையும் அவர்களுக்கோ நமக்கோ பெரிதாகப் படுவதில்லை.

மாறாக, கூன் விழுந்த முதுகுடன் பொருட்கள் வைக்க உதவும் சக்கர வண்டிகளைத் தள்ளிக் கொண்டு, காலி அட்டைப் பெட்டிகளைத் தேடிச் சேர்த்து கடையில் எடைக்குப் போட்டு சில டாலர்கள் பெற்று அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் முதிய பெண்கள், மெட்ரோ நிலையங்களின் வாசல்களில் தம் மொத்த வலிமையையும் திரட்டி டிஷ்யூ தாள் பொட்டலங்களை ஏந்தி விற்பதற்காக நிற்போர், காசு இடுவோர் பற்றிக் கண்டுகொள்ளாது, தமக்குத் தெரிந்த இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டே இருக்கும் கிழவர்கள், ஒவ்வொரு அடியாகக் காலை இழுத்து இழுத்து நடந்து, துப்புரவுப் பணி செய்வோர்….


                                                     PC: Google

நகராது நின்றால் தள்ளி மிதித்து நசுக்கி மேலே ஏறிப்போய்விடும் உலகில் இவர்களை நிதானித்து நோக்குவோர் யாருமில்லை. கண்ணில் பட்ட அடுத்த நொடி பார்வையை விலக்கிகொண்டு ஓடுவதுதான் வாய்க்கும். உணவகங்களில் ஈரத்துணி கொண்டு நம் மேசையைத் துடைக்கும் தோல் சுருங்கிய நடுங்கும் கைகளைப் பார்க்கையில் நம் அகம் ஆழத்தில் நடுங்கிப் போகும். பொங்கி வரும் குற்ற உணர்வு என்ன செய்ய என்று திகைத்து விட்டு மறுபடி உள்ளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். பணத்தின் துணையோடு மட்டுமே ஊரில் விட்டு வந்த பெரியவர்களின் முகங்கள் சட்டென மனதில் வந்து போகும்.

                                                

‘அவரவர் பிழைப்பு அப்படி… யார்தான் என்ன செய்ய முடியும்’ என்ற வெற்றுச் சமாதானத்துடன் இப்படியான கணங்கள் கடந்தும் போகும்.

சீனர்களது முன்னோர் வழிபாட்டுக்கான மேசை ஏற்பாடுகள் அருகில் நடந்து கொண்டிருந்தன. சிங்கப்பூரின் இந்த வெற்றுத்தளங்களுக்கான பயன்பாடுகள் வெவ்வேறு வண்ணம் கொண்டவை. தீபாவளி நேரங்களில் மத்தாப்புகள் சிதறும். ஆகஸ்ட் மாத ‘பசித்திருக்கும் பேய்’களுக்கான வழிபாட்டில் சிங்க நடனமும் ட்ராகன் நடனமும் ஆர்ப்பாட்டமாக் நடக்கும். சட்டென அலங்கரிக்கப்பட்டு திருமணமும் விருந்தும் நடக்கும். காப்பீட்டு முகவர்கள் குடியிருப்பாளர்களைச் சந்திப்பதற்கான வரவேற்பறையாக மாறும். எப்போதுமே முதியோருக்கான எளிதான ஒன்று கூடல் இடம் இதுதான்.



மஞ்சள் திரைகளால் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டு இருந்தால் யாரோ ஒருவரின் இறுதிப் பயணத்துக்கான நாட்கள் என்று பொருள். கவனமாக அவ்விடம் தவிர்த்து சுற்றிக் கொண்டு செல்வோம். ஓரிரு நாட்களில் சடங்குகள் முடிந்த பின் மறுபடி பழைய நிறம் கொண்டு விடும். இந்த வெற்றுத்தளங்கள் அறியாதவை என்று ஏதுமில்லை.

இன்னொரு வாரமும் கடந்து போனது. கடைக்குப் போக மின் தூக்கியில் இறங்கி வந்து ஐந்தாறு அடிகள் வைத்ததுமே கண்ணில் பட்டது மஞ்சள் நிறத் தடுப்புத் திரை. சட்டென ஒரு திகைப்பு. இந்த அடுக்ககத்தின் கீழேயே இறுதிச்சடங்கு நடக்கிறதென்றால் இங்கிருந்த யாரோதானா?? தெரிந்த முதியவர் யாராவதா? சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து கொண்டிருந்த, சின்ன விரல் அசைவுகளில் மட்டுமே உயிர் கொண்டிருந்த 5ம் தளத்தின் பாட்டியாக இருக்குமோ? ஒருவேளை….?!  சே… அப்படி இருக்கக்கூடாது… வேறு யாராவது என்றால் பரவாயில்லையா? மனது இரண்டாகப் பிரிந்து கொண்டு குழம்பி நின்றது.

சரி, வேறு வழியில்லை… அங்கே வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டியின் முன்னே இறந்தவரது படம் வைக்கப்பட்டிருக்கும். அந்த வழியே கடந்து சென்றால் பார்த்து விடலாம் என்று இரண்டு எட்டுகள் வைத்திருப்பேன்.

 ‘தங்கச்சீஈஈ…’ என்று பத்தடிகள் பின்னால் குரல் கேட்டது. படுவேகமாகத் திரும்பினேன். பெரியவர் நாற்காலியைத் தள்ளிக் கொண்டு வர, அவர் மனைவி என்னை நோக்கி மகிழ்வாகக் கையசைத்தார். மனமெல்லாம் பொங்க வேகமாக அருகில் போனேன். ‘எங்கே போனீர்கள் பார்க்கவே முடியவில்லையே?’ என சைகை நடனம் ஆடி நான் கேட்க,  ‘வீட்டை சற்று பழுது பார்க்க வேண்டி வந்ததால் சில மாதங்கள் மகன் வீட்டுக்குப் போய் விட்டோம்’ என்று பதில் நடனம் வந்தது.

விடுபடுதலும் நிறைவுமாக கையில் ஏந்தியிருந்த பொட்டலத்தைக் காட்டிக் கேட்டேன்…

‘மக்கான் ரெடி??’

‘நாசி லெமா எனக்கும் மீ கோரிங் மனைவிக்கும். வரலாமே சேர்ந்து உண்ணலாம்’ என்றார் பெரியவர். 

மறுப்பாகக் கையசைத்தேன் ‘இன்னொரு நாள் உறுதியாக… ஹரி ராயாவுக்கு பிரியாணி சாப்பிடலாம்’

‘கேன் கேன் லா… கண்டிப்பாக. கடவுளின் விருப்பமிருந்தால். இப்போதைக்கு இந்த இனிப்பைச் சாப்பிடு’ என்று பையில் துழாவி ஒரு சாக்லேட்டை எடுத்து கையில் தந்து விடை பெற்று மனைவியோடு நகர்ந்தார்.

உடனேயே இனிப்பை உறை பிரித்து வாயில் போட்டுக்கொண்டு மனதிலும் முகத்திலும் மலர்ந்த சிரிப்போடு நடக்கத் தொடங்கினேன்.

எதுவுமே வெறுமையாக இல்லை.

 

- 

 

 

 

2022-10-28

அம்மா ❤️

நல்ல மழை நாள் ஒன்றில் அலுவலகம் முடித்துத் திரும்பும் 20 நிமிடப் பேருந்துப் பயணத்தில் இருக்கைகிடைக்காது நின்று கொண்டு வந்ததில் அலுத்துப் போய் வீட்டுக்குள் நுழையும்போது நினைவில் வந்ததுஅம்மாவின் சித்திரம்தான்சீரான சாலையில் A.C. பேருந்தில் ஒரு நாள் நின்றதே கடுப்பாகிறது.


கரிசல் காட்டின் மொத்த வெயிலையும் சுமக்கும் பேருந்துகளின் நெரிசலில் அலுவலக நாளைக் கடந்துவீட்டினுள் நுழைகையிலேயேஇடது புறம் கிடக்கும் நாற்காலியில் கைப்பையை வீசி விட்டு சமையலறைக்குள்ஓட்ட நடையாக நுழைவார் அம்மா வேலைக்குச் செல்லும் நம் பெண்களிடம் குற்ற உணர்வை எப்போதும்கோருகிறது நம் சமூகம்’ என்று தமிழ்ச்செல்வன் எழுதி இருப்பார்கல்வி அலுவலராகப் பணி புரியும்போதும்சரிஇன்றும் சரிதேவையே அற்ற அந்தக் குற்ற உணர்வின்  நெருடலை அம்மாவிடம் காணலாம்.


அவரது பெற்றோர் ஆசிரியராக இருப்பினும் சிறு வயதில் தந்தையின் இழப்பு அம்மாவின் குடும்பத்தைக்கடுமையாக அலைக்கழித்ததுஇரண்டு அண்ணன்களின் பாச வளர்ப்பினில் படித்துச் சிறந்து திருமணத்திற்குமுன்னரே தலைமை ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்து விட்டார்.



நான் இரண்டாம் வகுப்பு வரையும் அண்ணன்கள் ஆரம்பக் கல்வியும் படித்தது அம்மா பணிபுரிந்த பஞ்சாயத்துயூனியன் நடுநிலைப்பள்ளியில்தான்.


ஏனோதானோவென்று இருந்த பள்ளியை பல வித எதிர்ப்புகளுக்கு இடையில் அற்புதமாகச் சீரமைத்துநடத்தினார் அங்கே அம்மா மிகப் பெரும் ஆளுமைநானே பள்ளியில் வைத்து ‘அம்மா’ என்றுகூப்பிட்டதில்லைஅவர் பணிபுரிந்த 18 வருடங்களும் அந்தப்பள்ளிக்குப் பொற்காலம் என ஊரார் பேசுவதைசமீபமாகக் கூடக் கேட்டேன்ஒவ்வொரு வருடமும் Merit தேர்வில் அப்பள்ளியில் இருந்து முடிந்த வரைநிறையப் பிள்ளைகளைத் தேர்வு பெற வைத்து கல்வி உதவித்தொகை வாங்க வழிகோலுவார்.


அம்மா சொல்லிக் குடுத்த grammerதான் பாப்பா எனக்கு அடித்தளம்‘ என சிலாகிக்கும் ஆங்கிலப் பேராசிரியர்ஒரு IAS அதிகாரி  உட்பட பல துறைகளிலும் அம்மாவின் பள்ளி மாணவர்கள் சிறப்பிப்பதைக் காணலாம். ‘பெரிய டீச்சர்’ பெயர் அடித்து இன்றுவரை அடிக்கப்படும் விழா அழைப்பிதழ்களே அவர் மீதான ஊரின்மதிப்புக்கும் நேசத்துக்கும் சான்றுகள்அவ்வூரிலிருந்து மாறி வந்த பின்னும் அங்கு பணிபுரிந்த சத்துணவுஆத்தாஅண்ணாச்சி செல்லையா என அவர்கள் இறுதிக்காலம் வரை எங்கள் வீட்டோடு நேசமாக இருந்தனர்.


நேர்மையான பெற்றோருக்குப் பிள்ளைகளாக இருப்பதை விட அறத்தினைக் கற்றுக் கொள்ளச் சிறந்த வழிவேறேதுநாங்கள் கற்ற அறத்தின் அடித்தளம் வீடுதான்கல்வி அலுவலரான பின் காலில் சக்கரம் அல்லாதகுறைதான் அம்மாவுக்கு


கல்வி அலுவலகங்களில் சந்திக்கும் சிக்கல்கள் விதவிதமாக இருக்கும்எப்போது visit செல்லும்போதும்பள்ளியிலேயே இல்லாத ஓர் ஆசிரியரைப் பற்றிப் புகார் எழுத வைத்துவிடஅவர் அம்மாவைக் குறை சொல்லிமாவட்டத் தலைநகரின் பேருந்து நிறுத்தத்தின் முன்னர் பெரிய தட்டிப்பலகை வைத்துவிட்டார்அதைப்பார்த்துநொந்து போய் வீட்டில் அம்மா வருத்தப்பட்ட மறுநாளே அதன் எதிரே ஆசிரியர் கழகத்திலிருந்து மறுப்புத்தட்டிப்பலகை வைக்கப்பட்டிருந்தது.


இத்துணை பரபரப்புக்கு மத்தியிலும் உறவுகளுக்கான நேசத்தில் அம்மா குறை வைத்ததே இல்லைஎட்டியஎந்த உயரமும் தலையில் ஏறிவிடவோ தோற்றத்தை மாற்றி விடவோ இல்லைஅப்பா பெரிதும் கண்டுகொள்ளாத அவரது குக்கிராமத்திற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் செல்வது செல்லும்போதெல்லாம்பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஆங்கிலம் சொல்லித் தருவது என் மனதில் நீங்காத காட்சிகளில் ஒன்றாகநிலைத்துப் போனதுஅப்பாவும் அவர் அக்காவும் வாதிட்டு முறுக்கிக் கொள்ளும்போதெல்லாம் இடையில்விழுந்து கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தியது அம்மாதான்.


எதையும் பகிர்ந்து கொள்ளும் என் முதல் நட்பு அவர்தான்பதின் பருவக் கிறுக்குத்தனங்களில் வாதிட்டுஎகிறும்போதும் அணைத்தே நடத்திக் கொண்டு வந்தார்நினைவு தெரிந்துஒரே ஒரு முறை கூட அம்மாஎன்னை அடித்ததே இல்லைகுழந்தைத்தன ஒளித்தல்கள் தவிர அம்மாவிடம் பொய் சொல்லவேதேவையிருந்ததில்லை.


எங்களைத் திட்டுவதற்குக் கூட திருக்குறளும் பழமொழிகளும்தான் துணைக்கு வரும்என் பிள்ளைகளுக்குநான் சொல்லும் பல அறிவுரைகளும் அறம் சார்ந்த சொற்களும் அம்மாவிடம் கேட்டவைதான்.


என் கல்லூரி விடுதியில் வாரத்தில் ஒருநாள் பெற்றோர் தின்பண்டம் தந்து செல்லலாம். ‘இந்தத் தின்பண்டம்சாப்பிட்டால் நல்லா இருக்குமே’ என்று நான் நினைத்துக்கொண்ட அதே வாரம் அம்மா அனுப்பும் பையில் அதுஇருப்பதைக்கண்டு திகைத்துப் போயிருக்கிறேன்.


பொருளாதாரத்தில் இன்றும் பிள்ளைகளுக்குக் கொடுப்பவராகத்தான் இருந்தாலும் அம்மா எங்களுக்குச்சேர்ந்து வைத்த மிகப்பெரிய சொத்து குடும்ப நண்பர்கள்தாம்.


என் பெரியம்மாஅக்காக்கள்அக்கா பிள்ளைகள் என நான் சொந்தம் சொல்லும் குடும்பத்தில் பெரியப்பாவைநான் ‘சார்’ என்று அழைப்பதைப் பார்த்தும் பெரியம்மாவும் அம்மாவும் ‘டீச்சர்’ என்று அழைத்துக்கொள்வதைப்பார்த்தும் என் நண்பர்கள் குழம்பிப் போவார்கள்பாசத்தில் திளைக்கவிட்டு என்னை வளர்த்து மகளாகவேவரித்துக் கொண்ட பெரியம்மாவும் தன் இறுதிக்காலம் எங்களின் அடுத்த தலைமுறைக்கும் தின்பண்டங்கள்வாங்கிக் குவித்து நெருங்கிய பந்தமாக இருந்த சத்யபாமா டீச்சரும் அம்மாவின் பள்ளி ஆசிரியர்கள்.


அம்மாவின் தனிப்பட்ட வாழ்வில் கடுமையான சோதனைகள்தகப்பனில்லாத தங்கையை அன்பு பொழிந்துவளர்த்த அண்ணன்களின் திடீர் இழப்புகள்இன்னதென்று இல்லாத உடல் துன்பங்கள்… இத்தனைக்குமத்தியிலும் அம்மாவின் மன உறுதியும் பொறுமையும் நிதானமும் ஒருநாளும் குலைந்ததில்லைஅம்மாவின்அம்மாவானஎங்களுக்கு இன்னொரு அம்மாவான அழகம்மா பாட்டி வழி வந்தது அது.


விவரமாகப் பிழைக்கத் தெரிந்தவரில்லை அம்மாஆனால் இன்று வரை எனக்கு ஒரு மனக்கலக்கம் என்றால்அம்மாவிடம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும்நாங்கள் துவண்டு போகும் பொழுதுகளில் எளிமையாகவாழ்வு என்றைக்குமே கண்ணாடிப்பாதையாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது’ என்றுதேற்றிச் செல்வார்.


அம்மாவின் பொறுமையில்மன உறுதியில் நூறில் ஒரு பங்கு இருந்தாலும் வாழ்வினை எளிதாகவாழ்ந்துவிடலாம் என்று தோன்றும்.


சிறு வயதில்  பரத வகுப்பு முடித்து வருகையில் அம்மா வங்கித் தந்த சர்பத்டவுனுக்கு ஆடைகள் வாங்கப்போகும்போது நடராஜா ஹோட்டலில் வாங்கித் தந்து உண்ண வைத்த சோளா பூரி இதெல்லாம்தான் என்வாழ்வின் சுவைகளாக மனதில் என்றும் தித்திக்கின்றன.


எத்துணை எழுதினாலும் பேசினாலும் அம்மாவின் பொருட்டு நான் கொண்டிருக்கும் மெருமதிப்பையும்நேசத்தையும் விளக்கவே இயலாது.


அம்மாவை விட நான் உயரமாகவே இல்லைஇன்றைக்கும் தோளில் சாய்ந்து கட்டிக்கொள்ள அது வசதியாகவேஇருக்கிறது.


என்றுமே எல்லா விதத்திலும் அம்மா நான் அண்ணாந்து வியக்கும் உயரம்தான்❤️